செவ்வாய், 20 மே, 2014

நரேந்திர மோடிக்கு ஒரு திறந்த மடல்...!


அன்பார்ந்த நாளைய பிரதமர் அவர்களே,
                இதயப்பூர்வமான வாழ்த்துக்களோடு இதை எழுதுகிறேன். முழு நேர்மையோடு இதை நான் சொல்கிறேன். இதை தைரியமாகச் சொல்வது எனக்கு அவ்வளவு எளிதானதல்ல. ஏனென்றால், இந்த உயர்ந்த பொறுப்பை நீங்கள் அடைவதை பார்க்க விரும்பாதவர்களில் நானும் ஒருவன். நீங்கள் பிரதமராவதைப் பார்த்து லட்சக்கணக்கான மக்கள் பரவச நிலையில் இருக்கும் அதேவேளையில், மேலும் பல லட்சக்கணக்கான மக்கள் கலவர மனநிலையில் ஏன் இருக்கிறார்கள் என்பது மற்றவர்களைவிட உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
             நீங்கள் இந்த இடத்திற்கு வரப்போகிறீர்கள் என்று சொன்னவர்களை சில நாட்களுக்கு முன்புவரை நான் நம்பவில்லை. ஆனால், ஜவஹர்லால் நேரு உட்கார்ந்த, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தியின் அவசர நிலையை எதிர்த்த போராட்டத்திற்குப் பிறகு மற்றொரு குஜராத்தியான மொரார்ஜி தேசாய், பின்னர் உங்கள் அரசியல் குருவான அடல் பிகாரி வாஜ்பாய் ஆகியோர் அமர்ந்த நாற்காலியில் நீங்களும் அமர்கிறீர்கள்.
            அதில் நீங்கள் அமர்ந்துவிடக்கூடாது என்று விரும்பியவர்கள், நீங்கள் அந்த இடத்திற்கு வந்துவிட்டீர்கள் என்ற உண்மையை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இத்தகைய அபூர்வமான சிறப்பிடம் உங்களுக்குக் கிடைப்பது பற்றி எனக்குள்ள பெரிய சந்தேகங்களைத் தாண்டி, உங்களது நலிவடைந்த சமூகம் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த உங்களைப் போன்ற ஒருவர் இந்தியப் பிரதமராக வருவதை நான் மதிக்கிறேன். எல்லோரும் சமம் என்ற நமது அரசியல் சட்டத்தின் பிரதானமான நோக்கத்தை அது நிறைவேற்றுகிறது.

தேசம் பற்றிய மறுபார்வை            

          நீங்கள் “தேநீர் விற்றவர்” என்று கண்மூடித்தனமாகவும், ஏளனமாகவும் சிலர் பேசியபோது, எனக்கு வயிற்றைப் பிரட்டியது. தனது வாழ்வாதாரத்திற்காக தேநீர் செய்து அதை விற்றவர் இந்திய அரசாங்கத்திற்குத் தலைமை தாங்கப் போகிறார் என்பது எவ்வளவு அற்புதமான விஷயம் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ஆனால் இதையெல்லாம் சொன்னபிறகும், திரு. மோடி அவர்களே, நீங்கள் இந்த உயர் பொறுப்பில் அமரப் போவது லட்சக் கணக்கானவர்களிடம் கலவர மனநிலையை ஏன் ஏற்படுத்தியுள்ளது என்பதற்குள் நான் செல்ல வேண்டும். 2014 தேர்தலில் மோடிக்கு ஆதரவா அல்லது எதிராகவா என்றுதான் வாக்காளர்கள் வாக்களித்துள்ளார்கள் என்பது மற்ற எவரையும் விட உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
             இந்தியாவின் சிறந்த பாதுகாவலர் மோடியா..? அவர்தானா, இல்லையா..? என்பதுதான் மையப்பொருளாக இருந்தது. இந்தியாவின் சிறந்த பாதுகாவலர், சொல்லப்போனால் ரட்சகர் என்ற அளவிற்கு, 31 சதவிகித மக்களின் (உங்கள் வாக்கு சதவிகிதம்) மனங்களை நீங்கள் கவர்ந்ததால் பாஜகவுக்கு இடங்கள் கிடைத்துள்ளன. 69 சதவிகித மக்கள் உங்கள் பாதுகாவலராகப் பார்க்கவில்லை என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். நமது தேசம் என்பதன் உள்ளடக்கத்தோடும் அவர்கள் வேறுபடுகிறார்கள். திரு. மோடி அவர்களே, தேசம் என்ற இந்தக் கருத்துதான், அரசியல் சட்டத்தின் அடிப்படையில் பிரதமராகப் போகும் உங்களுக்கு, இங்கு முக்கியமானதாக இருக்கப் போகிறது. தேசம் என்ற உங்கள் எண்ணத்தை மறுபார்வை செய்ய வேண்டும் என்று உங்களை நான் வலியுறுத்துகிறேன்.

சிறுபான்மையோருக்கு உறுதியளித்தல்           

          ஒற்றுமை மற்றும் நிலையான தன்மை ஆகியவற்றை முன்வைக்கும்போது, சர்தார்வல்லபாய் படேலின் பெயர் மற்றும் அவரது அந்தஸ்தை மீண்டும், மீண்டும் உங்கள் பேச்சில் கொண்டு வருகிறீர்கள். சிறுபான்மையினருக்கான அரசியல்சட்ட அவைக்குழுவின் தலைவராக சர்தார் இருந்தார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்தியாவின் சிறுபான்மையினருக்கு கல்வி, கலாச்சார மற்றும் மத ரீதியான உறுதி மொழிகளை அரசியல் சட்டம் அளிக்கிறது என்றால், அதற்கு சர்தார் படேல் மற்றும் அந்தக்குழுவின் உறுப்பினர்கள், குறிப்பாக சீக்கிய கபூர்தலாவின் கிறித்தவ மகளான ராஜ்குமாரி அம்ரித் கவுர் ஆகியோருக்கு நன்றி சொல்ல வேண்டும். சிறுபான்மையினர் பற்றிய அரசியல் சட்டத்தின் பார்வையை மாற்றுவதோ அல்லது திருத்துவதோ கூடாது, அதை நீர்த்துப் போகச் செய்வது அல்லது பூசிமெழுகுவது ஆகிய வேலைகளையும் நீங்கள் செய்யக்கூடாது.
            அதை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் திரு.மோடி அவர்களே. அந்தக்குழுவில் வெற்றி வீரரான சர்தார் என்ன சொன்னார் என்பதை நீங்கள் படிக்க வேண்டும்.பலரும் ஏன் இந்த அளவுக்கு அச்சப்படுகிறார்கள்... அந்த அச்சத்தை வெளிப் படுத்தக்கூட ஏன் அச்சப்படுகிறார்கள்..?நீங்கள் ஊர்வலங்களில் பேசுகையில், ஆணை பிறப்பிக்கும் ஒரு பேரரசரைப் போலல்லாமல் இந்திய மக்கள் என்ற எண்ணத்தோடு இருக்கும் ஒரு ஜனநாயகவாதியைக் கேட்க விரும்புகிறார்கள். சிறுபான்மையினரை ரட்சிக்க வேண்டாம் திரு.மோடி அவர்களே, அவர்களுக்கு நம்பிக்கையூட்டுங்கள். “வளர்ச்சி” என்பது பாதுகாப்புக்கு ஈடாகாது. “குர் ஆன் ஒரு கையில், மறுகையில் லேப்டாப்” என்ற வார்த்தைகளிலோ அல்லதுஅந்த அர்த்தத்திலோ நீங்கள் பேசியிருக்கிறீர்கள். அந்தக்காட்சி அவர்களுக்கு நம்பிக்கையூட்டவில்லை. ஏனெனில் அவர்களை அச்சுறுத்தும் வகையில் மற்றொரு காட்சி ஓடுகிறது. கொலைகாரன் ஒருவனின் ஒரு கையில் இந்து வீரகாவியம் அடங்கிய டிவிடியும், மறுகையில் அச்சுறுத்தும் திரிசூலமும் அந்தக் காட்சியில் உள்ளது. முன்பெல்லாம், வகுப்பறையின் மூலையில் உப்பு தடவப்பட்ட தடியை தலைமையாசிரியர்கள் வைத்திருப்பார்கள்.
               அதைப் பார்த்தவுடன், நம்மைத் தோலுரித்து விடுவார் என்று நினைவுக்கு வரும். இங்கு, உப்பு தடவப்பட்ட தடியாக நமக்கு நினைவுக்கு வரும் சம்பவங்களில் ஒன்று என்னவென்றால், சில மாதங்களுக்கு முன்பாக முசாபர் நகரில் நடந்த கலவரத்தில் 42 இஸ்லாமியர்கள் மற்றும் 20 இந்துக்கள் கொல்லப்பட்டதும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்கள் இருப்பிடங்களிலிருந்து வெளி யேற்றப்பட்டதும்தான். “ஜாக்கிரதை, இந்தக் கதிதான் உனக்கு நேரும்“ என்பது ஜனநாயகத்தில் அச்சப்பட வைக்கும் மிரட்டல் வார்த்தைகள் அல்ல. ஆனால், பகல் நேர அச்சமும், இரவு நேர பயங்கரமும்தான் லட்சக்கணக்கான மக்கள் மனங்களில் ஏற்றப்பட்டுள்ள செய்தியாகும். இதைப் போக்குவது உங்கள் கைகளில் தான் உள்ளது,
          திரு.மோடி அவர்களே. இதற்குரிய அதிகாரம் உங்கள் கையில் உள்ளது. அது மட்டுமல்ல, அதற்கான உரிமையும், செய்ய வேண்டிய அவசியமும் கூட இருக்கிறது. சிறுபுத்தியுள்ள ஆலோசனைகளைப் புறக்கணிப்பதன் மூலம் இந்த அச்சத்தை உங்களால் போக்க முடியும் என்று நான் நம்புகிறேன். இந்தியாவில் உள்ள அனைத்து மத சிறுபான்மையினரும், வெறும் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, மேற்கு பஞ்சாபிலிருந்து வெளி யேற்றப்பட்ட இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் மற்றும் காஷ்மீரி பண்டிதர்கள் ஆகியோரும் தங்கள் மனங்களில் வடுக்களைச் சுமக் கிறார்கள். உண்மையான அல்லது பொய்யான தூண்டுதல் காரணமாக திடீரென்று கலவரம் ஏற்படும் என்றும், அதனால் பலமடங்கு பிரதிபலன் கிடைக்கும் என்கிற அச்சமும் உள்ளது. இந்தக் கலவரத்தில் குறிப்பாக பெண்கள் தாக்கப்படுகிறார்கள். தங்கள் வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் அவமானத்தையும், சுரண்டலையும் தாங்கிக் கொண்டு தலித்துகள் மற்றும் பழங்குடியினர், அதிலும் குறிப்பாக பெண்கள், இருக்கிறார்கள். சிறுமைப்படுத்துதல், பாரபட்சம் மற்றும் தாக்குதல்கள் ஆகியவற்றால் தொடர்ந்து அமைதியின்மையை நோக்கி இழுக்கப்பட்டு, குடிமகன், மனிதன் ஆகிய தகுதிகளையே இல்லாமல் போகச் செய்கிறது.
           அவ்வாறு இழுக்கப்படுவதை உரக்கவும், வெளிப்படையாகவும் கவனியுங்கள், திரு. மோடி அவர்களே. இதன்மூலம் அவர்களின் நம்பிக்கையைப் பெறுங்கள். அவர்களுக்கு உறுதியளித்து, அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் முதல் குரல் உங்களுடையதுதான் என்ற நம்பிக்கையை உங்களால் அளிக்க முடியும்.பன்மைத்துவம் கொண்ட குடியரசிடம் ஒற்றைத்தன்மை என்கிற மன்னரின் வார்த்தைகளைக் கொட்டும் அதிகப் பிரசங்கித்தனம் யாருக்கும் இருக்கக்கூடாது. இந்தியா என்பது பலவகைப்பட்ட வளங்களைக் கொண்ட வனமாகும். பலவகைகளைக் கொண்ட மண்ணை வளர்த்தெடுக்கவே அது விரும்புகிறது. அதன் முன்னால், ஒரே இனம், ஒரே கலாச் சாரம் மற்றும் ஒரே கடவுள் என்பதை முன்னிறுத்தக் கூடாது. அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு, பொது சிவில் சட்டம் என்கிற பழைய மற்றும் சம்பிரதாயமான கோரிக்கை, அயோத்தியில் ராமர் கோவில் ஆகியவை பற்றி உங்களது நிலைப்பாடு மற்றும் வடக்கு, வட மேற்கில் உள்ள “இந்து அகதிகள்” மற்றும் கிழக்கு, வடகிழக்கில் உள்ள “இஸ்லாமிய அகதிகள்” என்று ஊடகங்களில் வெளியாகியுள்ள உங்கள் அறிக்கைகள், நம்பிக்கையை ஏற்படுத்தாமல் அச்சத்தையே உண்டாக்கியுள்ளன.
                 அச்சத்தின் பிடியில் மக்கள் என்பது இந்தியக் குடியரசின் பண்பாக இருக்க முடியாது. மேலும், இந்தியப் பிரதமர் என்ற முறையில். நீங்கள்தான் இந்தக் குடியரசுக்கு பொறுப்பானவராக இருக்கிறீர்கள்.இந்தியாவின் சிறுபான்மையினர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல. ஒன்றோடு ஒன்று கலந்து இருப்பவர்கள். கயிற்றை யார் வேண்டுமானாலும் எரித்துக் கரியாக்கலாம். ஆனால், அதன் பிணைப்பை அறுத்துவிட முடியாது. பாரத மாதா வாழ்க என்ற முழக்கம், நிச்சயமாக, நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் கட்டாயத் தேவையான ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தை மிஞ்சிவிட முடியாது. இது உங்களுக்கு வரலாற்றுச்சிறப்புமிக்க வெற்றி, திரு.மோடி அவர்களே. மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன். ஒரு வெற்றிகரமான காலகட்டம் இதைத் தொடரட்டும். இந்த உலகை ஆச்சரியப்படுத்தும் நிகழ்வுகள் நடந்தேறட்டும். உங்கள் ஆதரவாளர்கள் அதை எதிர்பார்க்காமல் இருக்கலாம். ஆனால், ஏராளமானோர் நீங்கள் அதை நடத்திட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
               நீங்கள் பெரும் புத்திசாலி என்பதோடு, முந்தைய தலைமுறையின் தேவையற்ற மற்றும் விருப்பமற்ற ஆலோசனையை கண்டுகொள்ளமாட்டீர்கள். உங்கள் ஆதரவுத்தளத்தில் கைதட்டலுக்கு கைம்மாறு செய்யுங்கள். ஆனால், அதற்கு இணையாக, உங்களை ஆதரிக்காதவர்களின் நம்பிக்கையையும் மீட்டெடுக்கும் வகையில் செயல்படுங்கள். சிறுபான்மையினர் ஆணையத்தை மீண்டும் அமைக்கும்போது, அதில் இடம் பெறவேண்டியவர்களின் பெயர்களை எதிர்க்கட்சிகளிடமிருந்தும் கேட்டு வாங்கி, அதில் மாற்றம் செய்யாமல் அவர்களையும் இணையுங்கள்.
              இதே முறையை எஸ்.சி/எஸ்.டி ஆணையம், மொழிரீதியான சிறுபான்மையினர் ஆணையம் போன்றவற்றை அமைக்கும் போதும் கடைப்பிடியுங்கள். அடுத்த தலைமை தகவல் ஆணையர், தலைமைத் தணிக்கை அதிகாரி, மத்திய ஊழல் தடுப்பு ஆணையர் ஆகியோரைத் தேர்வு செய்யும்போதும், தேர்வுக்குழுவில் உள்ள அரசு சாரா உறுப்பினர்களின் பரிந்துரைகளை, அவை பாரபட்சமாக இல்லாத பட்சத்தில், ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் பலசாலி. இத்தகைய நடவடிக்கைகளை தைரியமாக எடுக்கலாம்.

தெற்கில் விழும் பள்ளத்தை கவனியுங்கள்            

              திரு. மோடி அவர்களே, உங்கள் கணக்கில் தெற்கில் பெரும் பற்றாக்குறை உள்ளது. இந்தி பேசும் மாநிலம் சார்ந்த வெற்றி என்கிற பிம்பம், வடக்கு-தெற்கு என்ற பிளவை ஏற்படுத்திவிடக்கூடாது. தெற்கிலிருந்து ஒருவரை துணைப்பிரதமராக நியமியுங்கள். அவர் நிச்சயமாக அரசியல்வாதியாக இல்லாமல், சமூக அறிவியல் வல்லுநர், சுற்றுச்சூழல் நிபுணர், பொருளாதார அறிஞர் அல்லது புள்ளியியல் ஆய்வாளர் ஆகிய துறைகளில் ஒன்றைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். தனது அமைச்சரவையில் சண்முகம் செட்டியார், ஜான் மத்தாய், சி.டி.தேஷ்முக் மற்றும் கே.எல்.ராவ் ஆகியோரை நேரு வைத்திருந்தார். அவர்கள் எல்லாம்  காங்கிரஸ்காரர்கள் அல்ல. ஏன். அரசியல்வாதிகள்கூட கிடையாது.
             எஸ்.சந்திரசேகர் மற்றும் வி.கே.ஆர்.வி. ராவ் ஆகியோரை இந்திரா காந்தி அமைச்சர்களாக ஆக்கினார். மாநிலங்களவை உறுப்பினர்களாக ஆக்கப்பட்ட பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் ஷியாம் பெனகல் ஆகிய இருவரும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் அமைச்சர்களாக ஏன் ஆக்கப்படவில்லை என்பதை, எனக்குள்ள அனுபவத்தில், என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு மரபு உள்ளது. அதை ஆரோக்கியமானது என்று கூட ஒருவர் சொல்லலாம். நியமன உறுப்பினர்களை அமைச்சர்களாக ஆக்குவதில்லை என்பதுதான் அது. ஆனால், அவசரத் தேவைகள் என்பது அவசரத் தேவைகள்தான். நமக்கு இதுவரை இருந்த மிகச்சிறந்த கல்வி அமைச்சர்களில் நியமன உறுப்பினராக இருந்து அமைச்சரான நூருல் ஹசனும் ஒருவராவார்.
                ஏகாதிபத்திய மற்றும் கொள்கை ரீதியான தலைவர்களை உங்களுக்குப் பிடிக்கிறது. உங்களது போராட்டத்தில் நீங்கள் கருதுவது போலவே, மகா ராணா பிரதாப் சிங்காகவே இருங்கள். ஆனால் ஆற்றுப்படுத்துதலில் அக்பராக இருங்கள். இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், உங்கள் இதயத்தில் சாவர்க்கராக இருங்கள். ஆனால், மனதால் அம்பேத்கராக இருங்கள். தேவை என்றால், மரபணுவில் ஆர்.எஸ்.எஸ்.சால் பயிற்றுவிக்கப்பட்ட இந்துத்துவாவை நம்புபவராக இருங்கள். ஆனால் இந்துஸ்தானத்தின் வாசிர்-இ-ஆசமாக(உருது மொழியில் பிரதமர்) இருங்கள். உங்களுக்கு வாக்களிக்காத 69 சதவிகிதத்தினர், நீங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
         நமது தேசத்தின் உயர் பொறுப்பில் நீங்கள் அமர்கையில் உங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாழ்த்துக்களோடும்,

                                                                                                        உங்கள் சக குடிமகன்
                                                                                                    கோபாலகிருஷ்ண காந்தி
---------------------------------------------------------------------------------------------------------------
நன்றி - தி இந்து(மே 19, 2014) 
தமிழில் - கணேஷ்
(கோபாலகிருஷ்ண காந்தி - காந்திஜியின் பேரன், மேற்குவங்கஆளுநராக பணியாற்றியவர்)
நன்றி : கருத்துகள் இல்லை: