ஞாயிறு, 18 மே, 2014

காங்கிரஸ் கட்சி மீதான வெறுப்பு : பாஜக அறுவடை

 கட்டுரையாளர் : தோழர். சீத்தாராம் யெச்சூரி, எம்.பி.,                             
                                 அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்,                    
                                 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி                                          
              16வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து இறுதியாகத் தேர்தல் ஆணையம் தன் அறிக்கையை தாக்கல் செய்த பின்னர், அனைத்துப் பெரிய அரசியல் கட்சிகளும் தங்கள் ஆய்வினையும் மதிப்பீடுகளையும் முடிவு செய்யும். தேர்தல் முடிவுகள் குறித்து பூர்வாங்கமான ஆய்வினை மேற்கொள்வதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு மே 18 அன்று கூடுகிறது. அதனைத் தொடர்ந்து மத்தியக்குழு ஜூன் 7, 8 தேதிகளில் கூடுகிறது. அப்போது சம்பந்தப்பட்ட மாநிலக் குழுக்களும் தங்கள் மாநிலம் குறித்த பூர்வாங்க ஆய்வுகளை அளித்திடும். 1984ஆம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அனுதாப அலை வீசியதை அடுத்து அன்றைக்கு 542 மக்களவை இடங்களில் 405 இடங்களைப் பெற்று ராஜீவ் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. 
             அதன்பின்னர் முப்பது ஆண்டுகளுக்குப்பின்னர் முதன்முறையாக பாஜக மக்களவையில் தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியாக முன்னேறியிருக்கிறது. பாஜக தன்னுடன் பயணம் செய்த தேஜ கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளைத் தூக்கிஎறிந்துவிட்டு தனியாகவே ஆட்சி அமைக்கும் நிலையினைப் பெற்றிருக் கிறது.தேர்தல் பிரச்சாரத்தின்போதே, நாளும் தங்கள் மீது ஏவப்படும் தாக்குதல் களிலிருந்து நிவாரணம் அளிக்கக்கூடிய விதத்தில் ஓர் அரசாங்கம் முன்வராதா என்று மக்கள் ஏங்கத் துவங்கியிருந்ததைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது.
               காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கம், அதிலும் குறிப்பாக கடைசி ஈராண்டு காலத்தில், மக்கள் மீது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு விலைவாசி உயர் வாலும், பொருளாதார மந்தத்தாலும் அதனைத் தொடர்ந்து உருவான வேலையில்லாத் திண்டாட்டத்தாலும் பொருளாதாரச் சுமைகளை ஏற்றியது மட்டுமல்லாமல், நாட்டின் செல்வாதாரங் களையும் மிகப்பெரிய ஊழல்கள் மூலமாக கொள்ளையடித்தனர். இவற்றின் விளைவாக மக்கள் மத்தியில் ஏற்பட்ட விரக்தியை பாஜக தேர்தல் வெற்றிக்கு மிகவும் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொண்டது. இந்தப் பின்னணியில், பாஜக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பண பலத்துடனும், ஊடகங்களின் மூலமாகவும் தனக்குச் சாதகமாக மிகவும் வலுவான பிரச்சாரத்தை மேற்கொண்டது. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை மிகவும் வெற்றிகரமான முறையில் சித்தரித்ததுடன், இந்துத்துவா நிகழ்ச்சி நிரலையும் `வளர்ச்சி’ மற்றும் `நல்லதோர் அரசாங்கம்’ ஆகியவற்றிற்கான உறுதி மொழிகளையும் மிகவும் சாமர்த்தியமாக இணைத்து தேர்தல் பிரச்சாரத்தை பாஜக மேற்கொண்டது.
            முதலாவதாக, 2002இல் குஜராத்தில் முஸ்லிம்கள் மீது இனப்படுகொலைகள் நடைபெற்றதைத் தொடர்ந்தே, நரேந்திர மோடி, இந்துத்துவா மதவெறியை முன் னெடுத்துச் செல்வதற்கு, சரியானதொரு நபராக ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரத்தால் முன்னிறுத்தப்பட்டு வந்தார். எனவேதான், ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரம் எதிர்காலத்தின் பிரதமராக அவரை முன்னிறுத்துவதே போதுமானது என்றும், வேறு எவ்விதமான பிரச்சாரமும் தேவையில்லை என்றும் கருதின. பாஜக பிரச்சாரத்தின் வலுவான அடிநாதமாக இது தொடர்ந்தது.இரண்டாவதாக, பெரும்பான்மை யைப் பெறுவதற்கு இந்துத்துவாவை முன்னிறுத்தினால் மட்டும் போதாது என்கிற கடந்த கால அனுபவம் அவர் களை எச்சரித்தது. எனவேதான் இம்முறை, நரேந்திர மோடி பிரதமரானால் மட்டுமே, இந்தியா முழுமையும் குஜராத் போல வளர்ச்சியடையும் என்று பாஜக சரடு விட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளது.
குஜராத், பாலும் தேனும் ஆறாக ஓடும் மாநிலமாக சித்தரிக்கப்பட்டது. `வாஷிங்டன் போஸ்ட்’ செய்தியாளர்ராம லக்ஷ்மி, “மோடி புராணத்தை உருவாக்குதல்’’ என்னும் தன்னுடைய செய்திக்கட்டுரையில் சுட்டிக்காட்டி யிருப்பதைப்போல, பாஜகவின் பிரச்சார மேலாளர்கள், அயோத்தியை யும், ராமரையும் ஓரங்கட்டி வைத்துவிட்டு, மிகவும் புத்தி சாலித்தனத்துடன் குஜராத்தையும் அதன் தற்போதைய கடவுளான மோடியையும் சுற்றி இந்தி யர்களைத் திரட்டியிருக்கிறார்கள். நாட்டு மக்களின் மனதில் குஜராத், “பாலும் தேனும் ஆறாக ஓடும் மாநிலமாகவும், இந்த பூமியிலேயே ஒரு சொர்க்கமாகவும், அங்கே உள்ள அனைவரும் வேலை பார்ப்பது போலவும், அனைவருக்கும் எப்போதும் மின்சாரம் உண்டு என்பது போலவும், விவசாயிகள் பேரானந்தத்துடன் வாழ்வது போலவும், அங்கேயுள்ள நெடுஞ்சாலைகள் உலகிலேயே சிறந்தவை போலவும், ஊழல் நோய் அண்டாத மாநிலம் போலவும்’’ கருதிக் கொண்டிருக்கிறார்கள்.
          மறுபக்கத்தில், காங்கிரஸ் தரப்பில் நடைபெற்ற பிரச்சாரம் முற்றிலுமாக வலுவிழந்த நிலையில் அமைந்திருந்தது. இவ்வாறு மோடி குறித்து எழுப்பப்பட்ட அண்டப்புளுகுகளை, ஆகாசப் புளுகுகளை உடைத்தெறியக்கூடிய விதத்தில்வலுவான முறையில் அமையாதிருந்தது.  குஜராத் வளர்ச்சி மாடல் தொடர்பான உண்மையான புள்ளிவிவரங்களை அது அடுக்க முயன்ற போதிலும், காங்கிரசின் கடந்த கால நடவடிக்கைகளால் வெறுப் படைந்திருந்த மக்கள் அக்கட்சி கூறுவதை நம்பத் தயாராக இல்லை. ஐமுகூ அரசாங்கம் மக்கள் மீது வறுமையை யும் பொருளாதாரச் சுமைகளையும் திணிக்கும் கொள்கைகளை அமல்படுத்தத் தொடங்கியபோதே, காங்கிரசின் தோல்வி தொடங்கிவிட்டது. மேலும், காங்கிரஸ் தலைமை, தன் ஆட்சிக்காலத்தில் தான் மக்களுக்கு அளித்த அரசியலமைப்புச் சட்ட உரிமைகளை - கல்விபெறும் உரிமை, தகவல் பெறும் உரிமை, பழங்குடியினருக்கு வன நிலங்கள் மற்றும் வன உற்பத்தியில் அளித்த உரிமை, கிராமப்புற வேலைவாய்ப்பு உரிமை, முதலானவற்றைக் கூட - (இவற்றில் எவ்வளவோ குறைபாடுகள் இருந்தபோதிலும்கூட) மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லவும், இவ்வாறு எடுத்துச் சொல்வதன் மூலம் தன் ஊழியர்களுக்கு உற்சாகமூட்டவும்கூடத் தவறிவிட்டது.
          மேலே குறிப்பிட்டிருக்கும் அனைத்து நடவடிக்கைகளுமே, இடதுசாரிகளின் செல்வாக்கின்கீழ் ஐமுகூ-1 அரசாங்கம் இருந்தபோது தொடங்கப்பட்டவைகளாகும். இவை ஐமுகூ-2 அரசாங்கத்தின் காலத்தில் அமல்படுத்தப்பட்டது. இவற்றைஅமல்படுத்தியதன் மூலம் இடதுசாரி களுக்கு ஒரு கவுரவத்தை கொடுக்க காங்கிரஸ் விரும்பாதிருந்த போதிலும், தனக்காகவாவது இவற்றை அக் கட்சி பயன்படுத்திக் கொண்டிருக்க முடியும்.இவ்வாறு அக்கட்சி கூற முன்வராத திலிருந்தே இவற்றை அது இடதுசாரிகளின் நிர்ப்பந்தத்தின் காரணமாகத்தான் மேற்கொண்டது என்பது மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந் நடவடிக்கைகளின் மீது அதற்கிருந்த நேர்மையின்மைதான் இதற்குக் காரணமாகும். இத்துடன் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை அது பின்பற்றியதிலிருந்த வெறியுடன் மெகா ஊழல்களும் இணைந்ததும்தான் பாஜக பிரச்சாரத்தை எதிர்ப்பதற்குத் திராணியற்ற நிலைக்கு அதனைத் தள்ளிவிட்டது. ஆயினும், இத்தேர்தல்கள், இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து ஆழமான பரிசீலனை மேற்கொள்வதற்காக சில முக்கிய பிரச்சனைகளையும் முன்னுக்குக் கொண்டு வந்துள்ளன.
          தேர்தலில் பண பலம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இருந்துள்ளது. பாஜக பிரச்சாரத்தில் பணம் ஆறாய் ஓட அனுமதிக்கப்பட்டது. மறுபக்கத்தில், இவ்வாறு பணம், வாக்காளர் களுக்குக் விலைக்கு வாங்கக்கூடிய விதத்தில் பல்வேறு இழிவழிகளிலும் பயன்படுத்தப்பட்டது. வாக்காளர்களுக்குப் பணம் தரும் பழக்கத்தைப் பல கட்சிகளும் நடைமுறைப்படுத்தியுள்ளன. தேர்தல் ஆணையம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பணத்தை பறிமுதல் செய்துள்ளது. பணம் மட்டுமல்ல, மது மற்றும் பல்வேறுவிதமான இலவசப் பொருள்களையும் பறிமுதல் செய்துள்ளது.
             கூடுதலாக, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் தங்கள் கட்சிக்கு வாக்களிக்காவிட்டால் உயிருடன் இருக்க முடியாது என்பது போன்ற பயங்கரவாத மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்களும் நடைபெற்றுள்ளன. அதனைத் தொடர்ந்து மிக விரிவான அளவில் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி மோசடியாக வாக்களித்தல் மற்றும் இடதுசாரிகள் மீது வன்முறையைக் கட்ட விழ்த்து விட்டிருப்பதன் மூலம், இடது சாரிக் கட்சிகளின் மக்கள் செல்வாக்கை உண்மையாகப் பிரதிபலிக்க முடியாத அளவிற்கு தேர்தல் முடிவுகள் சிதைக்கப்பட்டிருக்கின்றன.
              தேர்தல் ஆணையத்திற்கு எண்ணற்ற முறையீடுகள் அளிக்கப்பட்டபோதிலும், இவற்றைச் சரிசெய்திட அதனால் முடியவில்லை என்பது துரதிர்ஷ்டமாகும். கடும் விலைவாசி உயர்வாலும், மெகா ஊழல்களாலும் மக்கள் மிகப்பெரிய அளவிற்கு பாதிக்கப்பட்டிருந்தபோதிலும், இடதுசாரிக் கட்சிகளால் அவற்றைத் தங்களுக்குச் சாதகமாக மாற்ற முடிய வில்லை. இடதுசாரிகள் தங்கள் நிலையை திரிபுராவில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்துடன், நிலை நிறுத்திக்கொண்டுள்ள அதே சமயத்தில், கேரளாவிலும் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றுள்ள அதே சமயத்தில், இத்தேர்தல் முடிவுகள் பலவீனங்களை அடையாளம் கண்டு, அவற்றை சரிப் படுத்துவதற்கான தேவையையும் உணர்ந்துள்ளன.முறையான தேர்தல் சீர்திருத்தங்கள் மூலமாக இத்தகு சிதைவுகளை ஆழமான முறையில் சரிசெய்ய வேண்டியது நாட்டின்முன் எழுந்துள்ள அவசர மற்றும் அவசியத் தேவையாகும்.
           எடுத்துக்காட்டாக, அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதி உதவி அளித்தல், அரசியல் கட்சிகள் செலவினங்களுக்குக் கட்டுப்பாடுகள் கொண்டுவருதல் (தற்சமயம் வேட்பாளர்களுக்கு மட்டுமே அத்தகைய கட்டுப்பாடுகள் உள்ளன) போன்ற பிரச்சனைகள் ஆழமாகப் பரிசீலிக்கப்பட வேண்டியவைகளாகும். நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளிலேயே கார்ப்பரேட் நிறுவனங்கள் நன்கொடை கொடுப்பதைத் தடை செய்ய வேண்டும் என்று ஒளிவுமறைவின்றி அறிவித்திருக்கிற ஒரே கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான்.
             மாறாக,கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்திய ஜனநாயக நடைமுறைக்கு நிதி அளித்திடலாம் என்றும், ஆயினும் அத்தகைய நிதிதேர்தல் ஆணையத்தால் நிர்வகிக்கப்படும் ஓர் அமைப்பிற்கோ அல்லது அரசால் அமைக்கப்படும் ஒரு நிறுவனத்துக்கோ தான் செல்ல வேண்டும் என்றும், அந்த அமைப்பு தேர்தலை நடத்திட செலவு செய்திட வேண்டும் என்றும் கூறுகிறோம். மேற்கத்திய நாடுகள் பலவற்றின் நடைமுறை இதுதான். முக்கியமாக, நம்முடைய தேர்தல் நடைமுறையில் ஒரு பகுதி விகிதாச்சார பிரதிநிதித்துவம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே வாதிட்டுக் கொண்டிருக்கிறது.தற்சமயம் பாஜக பெற்றிருக்கும் மிகப் பெரிய வெற்றிக்குப்பின்பும் கூட, அது பெற்றுள்ள வாக்கு சதவீதம் என்பது 50 சதவீதத்திற்கும் மிகவும் குறைவுதான். இதன் பொருள், நாட்டு மக்களில் பாஜக விற்கு எதிராக வாக்களித்தவர்கள் அதிகம்என்பதேயாகும். போட்டியிடும் வேட் பாளர்களில் அதிக வாக்குகளைப் பெற் றவர் வென்றவராகக் கருதப்படுவார் என்கிற தற்போது நம்முடைய தேர்தல் நடை முறையில் உள்ள முரண்பாடு அல்லது குறைபாடு இது.
       பக்குவப்பட்ட பல ஜனநாயக நாடுகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றவர்கள் மட்டுமே ஆட்சிக்கு வரமுடியும். ஒருபகுதி விகிதாச்சார பிரதிநிதித்துவ அமைப்பு முறை கொண்டுவரப்பட்டால் தற்போது மிகவும் பூதாகரமான முறையில் அதிகரித்து, மக்களின் ஜனநாயகக் கருத்தை சிதைக்கக்கூடிய விதத்தில் அமைந்திருக்கும் பணபலம் மற்றும் புஜபலத்தின் செல்வாக்கைக் குறைத்திட கணிசமான அளவிற்கு உதவிடும். இரு மக்களவைத் தொகுதிகளை ஒன்றாக இணைத்து, ஒவ்வொரு வாக்காளருக்கும் இரு வாக்குகள் கொடுத்து, ஒரு வாக்கை குறிப்பிட்ட ஒரு வேட்பாளருக்கும், மற்றொரு வாக்கை அதன் கொள்கை மற்றும் திட்டத்தின் அடிப்படையில் ஓர் அரசியல் கட்சிக்கும் அளித்திடலாம். அதேபோன்று அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்திற்கு ஒரு முன்னுரிமைப் பட்டியலை முன்னதாகவே அளித்திடும்.
           தேசிய அளவில் ஒவ்வொரு கட்சிக்கும் கிடைக்கும் சதவீதத்தின் அடிப்படையில், ஒவ்வொரு கட்சிக்கும் அது முன்னதாகவே அளித்துள்ள முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையில் இடங்களை நிரப்பிடும். இத்தகைய பரிந்துரைகளையும், சீர்திருத்தங்களையும் ஆழமாகப் பரிசீலனை செய்வதற்கான தருணம் இப்போது வந்திருக்கிறது. மேலும், இப்போது நடைபெற்ற தேர்தல்கள் தற்போதுள்ள சட்டங்களில் உள்ள பல ஓட்டைகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன. எடுத்துக்காட்டாக, பல தொகுதிகளில் தேர்தல் வேலைகள் தொடங்கிய பின்னர் நரேந்திர மோடி தன் வேட்புமனுவைத் தாக்கல் செய்ததை நாடு பார்த்தது.
           பல தொகுதிகளில் தேர்தலின் முதல் கட்டம் நடைபெறத் துவங்கிய பின்னே, பாஜக தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. வாரணாசியில் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமயத்தில், நரேந்திர மோடி குஜராத்திலிருந்து வீடியோ பேச்சு ஒன்றை வெளியிடுகிறார். அது தேசிய அளவில் ஒளிபரப்பப்பட்டது. இவ்வாறு இப்போதுள்ள சட்டங்களில் ஏராளமான ஓட்டைகள் காணப்படுகின்றன. பாஜக வெற்றி தொடர்பாக அக்கட்சி யால் அவிழ்த்து விடப்பட்ட சரடுகள் அனைத்தும் விரைவில் மாயைதான்என்பது மக்கள் மத்தியில் வெட்ட வெளிச்சமாகிவிடும். எதிர்காலத்தில் ஏராள மான சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். பாஜக விற்கு இத்தேர்தல் பிரச்சாரத்திற்காக நிதி உதவி செய்தவர்கள் அவ்வாறு செலவு செய்ததை எவ்வளவு விரைவாகத் திரும்ப எடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாகத் திரும்ப எடுப்பதில் மிகவும் குறியாக இருப்பார்கள்.
          இதன் பொருள் மக்கள் மீது மேலும் சுமைகள் ஏற்றப்படும் என்பதாகும். மக்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்பதை மறந்து விடுவார்கள். பாஜகவின் அடிநாதமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்துத்துவா பிரச்சாரம் நம் நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயகஅடித்தளங்களுக்கே வேட்டு வைக்கக்கூடியவைகளாகும். இவை இரண்டையும் எப்படி வலுவாக எதிர்கொள்ளப் போகிறோம் என்பதைப் பொறுத்தே நாட்டின், நாட்டு மக்களின் எதிர்காலம் அமையவிருக்கிறது.
         ஒரு பக்கத்தில், சமூக நல்லிணக்கம், நாட்டின் ஒற்றுமை, நாட்டு மக்களின் ஒற்றுமை மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயகஅடித்தளங்களை பாதுகாக்கக்கூடிய விதத்தில் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றிடவும், மறுபக்கத்தில் மக்கள்விரோத பொருளாதாரக் கொள்கைகளை எதிர்ப்பதுடன் நம் நாட்டிற்குத் தேவையான மாற்று மக்கள் ஆதரவு கொள்கைதிசைவழிக்கான போராட்டத்தை நடத்திடவும் இவ்வாறு இவ்விரண்டு திசைகளி லும் வெகுஜன போராட்டங்களை வலுப் படுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதிபூண்டிருக்கிறது.இத்தேர்தல்களுக்குப்பின்னர், இடது சாரிகள் வலுவாகவுள்ள இடங்களில் நம்மீது ஏவப்பட்டுள்ள கம்யூனிஸ்ட் எதிர்ப்புத் தாக்குதல்களை உறுதியுடன் எதிர்த்து முறியடித்திடும் அதேசமயத்தில், இவ்விரு திசைவழிகளிலும் மிகப் பிரம்மாண்டமான முறையில் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லவும். உறுதி மேற்கொள்வோம்

பீப்பிள்ஸ் டெமாக்ரசி-தமிழில் : ச.வீரமணி         

கருத்துகள் இல்லை: