சனி, 17 மே, 2014

மோடியின் வெற்றி - நாட்டைப் பிடித்த கேடுகாலம்

         ஒரு வழியாக தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. கடந்த ஐந்து ஆண்டு கால காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்  மக்களுக்கெதிரான தவறான ஆட்சி நடத்தியதால் மக்களின் வெறுப்புக்கும், அதீத கோபத்திற்கும் உள்ளானதால், மக்களின்  வெறுப்பு அலை - எதிர்ப்பு அலை பாரதீய ஜனதாக் கட்சிக்கு சாதகமாக அடித்துவிட்டது. காங்கிரஸ் ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன், காங்கிரஸ் கட்சியின் மீதான மக்களின் எதிர்ப்பு அலை இடதுசாரிகளின் பக்கம்  திரும்பிவிடாமல் இருக்க, தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே   இந்திய பெருமுதலாளிகள் அந்த எதிர்ப்பு அலைக்கு ''மோடி அலை'' என்ற பெயரைச் சூட்டி காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் பாரதீய ஜனதாக் கட்சியை நோக்கி திருப்பிவிட்டனர். அதற்காக மோடி என்ற பந்தயக் குதிரையின் மீது 50,000 கோடி ரூபாயை கட்டினர். மோடி வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்தால் பல இலட்சம் கோடிகளை கொள்ளை அடிக்கலாம் என்ற எதிர்ப்புடன்,  இந்திய பெருமுதலாளிகள் மோடி மற்றும் பாஜக வெற்றிபெறுவதற்கு பிரச்சாரத்திற்கும், விளம்பரத்திற்கும், ஓட்டுக்கும் என 50,000 கோடிகளை கொட்டி செலவு செய்திருக்கிறார்கள் என்பதும், அதற்கு ஊடகங்களையும் பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதும் உண்மை. 
           ஆனால் தேர்தல் முடிவு என்பது தேர்தலுக்கு முந்தைய-பிந்தைய கருத்துக்கணிப்பையே உடைத்தெறிந்து யாரும் எதிர்பாராத வகையிலும், ஆச்சரியப்படும்வகையிலும் முன்னெப்போது இல்லாத அளவிற்கு பாரதீய ஜனதாக் கட்சி எண்ணிக்கையில் ஆட்சி அமைக்கத்தேவையான பெரும்பான்மையை பெற்று ஆட்சிக்கு வந்திருப்பது என்பது நாட்டிற்கும் மக்களுக்கும் ஆபத்தானது என்பதை மறந்துவிடக்கூடாது. இந்த அதீத வெற்றி என்பது பாரதீய ஜனதாக் கட்சிக்கு மட்டுமல்ல இந்திய பெருமுதலாளிகளுக்கும் ஊடகங்களுக்கும் மிகுந்த உற்சாகத்தை அளித்திருக்கிறது என்பது இந்திய பங்குச் சந்தையின் ஏற்றத்தைப் பார்க்கும் போதே தெரிந்துகொள்ளலாம். போட்டக் காசை பல மடங்கு திருப்பி எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கை பெருமுதலாளிகள் மத்தியில் வந்துவிட்டது. அவர்கள் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி காத்திருக்கிறார்கள்.
 
அப்படி என்ன தான் அவர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள்...?             

               # கடந்த ஐந்து ஆண்டுகால காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் கனிம வளங்கள் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் போன்றவற்றில் பல இலட்சம் கோடி ரூபாய்களை சுருட்டியது போல்,  மிச்ச-மீதி எஞ்சியிருக்கக்கூடிய கனிம வளங்களை தங்குதடையின்றி மேலும்   கொள்ளையடிக்க மோடியால் அனுமதி வழங்கப்படும்.
                #  ஏற்கனவே வாஜ்பாயி ஆட்சியின் போது தொழிலாளர்களுக்கு சாதகமான அல்லது பாதுகாப்பான முக்கிய ஷரத்துக்கள் பிடுங்கப்பட்டு காயடிக்கப்பட்ட ''தொழிலாளர் நலச் சட்டங்கள்'' முதலாளிகளுக்கு சாதகமாக முற்றிலுமாக நீக்கப்படும். இனி இந்தியாவில் எங்கும் எதிலும் ''நிரந்தர வேலை''  என்பது இருக்காது. ஒப்பந்தத் தொழிலாளர்கள் தான் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள். வேலை பாதுகாப்பு, குறைந்த பட்ச ஊதியம், அதிகபட்ச வேலை நேரம்,  மகளீர் ஊழியர்கள் பாதுகாப்பு, தொழிற்சங்கம்  அமைத்தல் போன்றவை ஏற்கனவே காற்றில் பறந்துவிட்ட நிலையில், தொழிலாளர் நலச் சட்டங்கள் முற்றிலும் நீக்கப்பட்டால், நிரந்தர வேலை உரிமை ஒழித்துக்கட்டப்படும். அதன் மூலம் மருத்துவ உதவி, பி.எப்., கிராஜுயுட்டி, போனஸ், ஓய்வூதியம் போன்றவைகளும் ஒழித்துக்கட்டப்படும். 
          #  இன்சூரன்ஸ், வங்கி, பாதுகாப்பு,  தொலைத்தொடர்பு, விமானம், இரயில்வே, சுரங்கம், சில்லறை வர்த்தகம், ரியல் எஸ்டேட், கல்வி, மருத்துவம், சுகாதாரம் அனைத்திலும் அந்நிய நேரடி முதலீடு என்பது 100% - ஐ நோக்கி பாயும்.
            # எல்.ஐ.சி., வங்கி போன்ற பணம் கொழிக்கும் பொதுத்துறை நிறுவனங்களும், ''நவரத்தினா'' என்று அழைக்கப்படும் வளம் கொழிக்கும் பொதுத்துறை நிறுவனங்களும் அம்பானி சகோதரர்கள், அதானி, டாடா போன்ற பெருமுதலாளிகளிடம் கைமாறும்.
           மொத்தத்தில் முகேஷ் அம்பானி, அனில்  அம்பானி, அதானி, டாடா போன்ற பெருமுதலாளிகள் மோடியால் சந்தொஷப்படுத்தப்படுவார்கள். மோடியை பின்னாலிலிருந்து இயக்கப்போகிறவர்கள் இவர்கள் தான் என்பதை மறந்துவிடக்கூடாது.
          இதையெல்லாம் நாம் கோபப்படாமல் வேடிக்கைப்பார்க்கத்தானே போகிறோம். போகப் போக தெரியும்... இந்த பாம்பின் வேஷம் புரியும்...!

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

வணக்கம்

பொறுமையுடன்இருக்கலாம்.. என்னதான் நடக்கிறது என்பதை அவதானிக்கலாம்.தங்களின்பதிவின் வழி தகவலை அறிந்தேன்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

யாஸிர் அசனப்பா. சொன்னது…

கம்யூனிஸ்டுகளால் மூன்றாவது அணியை உருவாக்கி பலப்படுத்த முடியாமல் போனதன் விளைவே இந்த பிரம்மாண்ட வெற்றி.

மூன்றாவது அணி உருவாகியிருப்பின், பா.ஜா.காவின் வெற்றியை தடுத்திருக்கமுடியாது ஆயினும் இந்த எண்ணிக்கையை குறைத்திருந்திருக்கலாம்.

Unknown சொன்னது…

communist; no work ; only gain; sacrifie (cader; dead; leader win) uppma company; communist; all india;c.p.i. one M.p.seat