ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

குஜராத் நிலவரம் - முடக்கப்படும் ஜனநாயகம் மறைக்கப்படும் போராட்டங்கள்...!

     
       குஜராத் மாநிலத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான மதவெறி அரசியல் மேலோங்கியிருப்பது மட்டுமல்ல, அடிப்படையான ஜனநாயக செயல்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளன என்பதும் முக்கியமான பிரச்சனையாக இருக்கிறது என்று சமூகப்பணியாளர் ஷப்னம் ஹாஷ்மி கூறினார். அங்கு அன்றாடம் நடைபெறும் போராட்டங்கள் பற்றிய செய்திகள் இருட்டடிக்கப்பட்டு, முதலமைச்சர் நரேந்திர மோடி பற்றிய மிகையான, போலியான தோற்றம் மோசடியான முறைகளில் ஏற்படுத்தப்படுகிறது என்றும் அவர் விமர்சித்தார்.              ''குஜராத்தில் நடப்பது என்ன'' என்ற உரையரங்க நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், மதச்சார்பற்றோர் மாமன்றம், சென்னை கலைக்குழு, இந்திய சமூக விஞ்ஞான கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின. இதில் கருத்துரையாற்றிய ‘நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்திற்காக இப்போதே செயல்படுவோம்’ (அன்ஹட்) அமைப்பின் பொறுப்பாளரும், மக்கள் நாடகக் கலைஞர் சப்தர் ஹாஷ்மியின் தங்கையுமான ஷப்னம் ஹாஷ்மி, அரசு எந்திரம், உள்ளாட்சிகள், அதிகார வர்க்கம் உள்பட சமுதாயத்தின் அனைத்துத் தளங்களிலும் ஜனநாயகம் சீர்குலைக்கப்பட்டிருக்கிறது என்றார்.
         2002ம் ஆண்டின் குஜராத் வன்முறை பற்றிக் குறிப்பிட்ட அவர், “மதம், சாதி அடிப்படையில் நாட்டின் பல பகுதிகளிலும் கலவரங்கள் நடக்கத்தான் செய்கின்றன. அவற்றிலிருந்து குஜராத்தை வேறுபடுத்திக் காட்டுவது என்னவென்றால், அரசாங்க ஆதரவுடன், அரசியல் ரீதியாகத் திட்டமிட்ட முறையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்பதுதான்” என்றார். சுமார் 2,000 அப்பாவி முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்ட அந்த வன்முறையின் போது கிட்டத்தட்ட 500 பெண்கள் கும்பல்களால் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப் பட்டார்கள். ஆனால் அரசாங்கமோ 3 பெண்கள் மட்டுமே வன்புணர்வு செய்யப்பட்டாகக் கணக்குக் காட்டி முடித்துக் கொண்டுவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

போலி தகவல்களுடன் என்கவுண்டர்கள்       

       அதன் பிறகு நரேந்திர மோடியை மிகப்பெரிய சக்தியாக சித்தரிப்பதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டன. அவரைக் கொல்வதற்காக சில பயங்கரவாதக் குழுக்கள் ஊடுருவியிருப்பதாகக் கிளப்பி விடப்பட்டு, போலி என்கவுண்டர் கொலைகள் நிகழ்த்தப்பட்டன. இப்படி போலி மோதல்களை நடத்திய ஒரு உளவுத் துறை அதிகாரி தற்போது சிறையில் இருக்கிறார். போலியான தகவல்களைத் தயாரித்துப் பரப்பிய இன்னொருவர் மத்திய உளவுத்துறையில் அதிகாரியாக நீடிக்கிறார். மாநிலத்தில் இப்படிப்பட்ட போலித் தகவல்களைத் தயாரித்துப் பரப்புவதற்கென்றே பல ''ராஜேந்திரகுமார்கள்'' செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். 2003-ல் ஊழல் புகார்கள் குறித்து விசாரிப்பதற்கான லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் பதவி ஓய்வு பெற்றபின் புதிய தலைவரை நியமிக்காமல் மோடி அரசு இழுத்தடித்து வருகிறது. விதிகளை மீறி ஒருவரை மோடி அரசு நியமித்த போது, அது செல்லாது என்று உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து மாநில அரசு உச்சநீதிமன்றம் சென்றது. உயர்நீதிமன்றத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் அங்கீகரித்துத் தீர்ப்பளித்தபோது அதையும் எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட் டது. இப்படி, லோக் ஆயுக்தா முறைப்படி நியமிக்கப்படுவதைத் தடுப்பதற்காகவே மோடி அரசு 45 கோடி ரூபாய் வரையில் செலவிட்டுள்ளது. பாஜகவினர் கூறுவது போல மோடி அரசு ஒன்றும் ஊழல்களுக்கு அப்பாற்பட்டதல்ல. ஒரே ஆண்டில் 16,000 ஊழல் குற்றங்கள், அதுவும் குவாலியர் பகுதியில் மட்டுமே நிகழ்ந்துள்ளன என்று மத்திய கணக்குத் தணிக்கைத் துறையே கூறி யுள்ளது.

புதிய விற்பனைச் சரக்கு         

      2011க்குப் பிறகு, மோடியை மிகச் சிறந்த நிர்வாகியாகக் காட்டுவதற்காக ‘மேம்பாடு’ என்பதைப் புதிய விற்பனைச் சரக்காகக் கொண்டுவந்தது பாஜக. ‘குஜராத் மாடல்’ என்பதாக ஒரு போலியான கருத்தாக்கம் கட்டப்பட்டது. அதற்காக என்றே வாஷிங்டன் நகரை மையமாகக் கொண்டு, ரூ.500 கோடி முதலீட்டில் பிரச்சாரப் படை ஒன்று ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் என பல வழிகளில் மோடியைப் பெரிய ஆளாகக் காட்டுகிற பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன. ஊடகங்களுக்குப் பணம் கொடுத்தாவது அப்படிப்பட்ட செய்திகளை வெளியிடவும், மோடிக்கு பாதகமான செய்திகளை இருட்டடிக்கவும் ஏற்பாடு செய்வது அந்தப் படையின் வேலையாக்கப்பட்டிருக்கிறது.
              தொழில் வளர்ச்சி பற்றிய மிகையான செய்திகள் பரப்பப்படுகின்றன. உண்மையில் 16,000 சிறு தொழில்கள் இழுத்து மூடப்பட்டுவிட்டன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து விட்டார்கள். மோடியின் ஆட்சியில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துவிட்டன என்பது மற்றொரு பிரச்சாரம். இந்திய மாநிலங்களில் வெளிநாட்டு முதலீடுகள் வருவதில் குஜராத் ஐந்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டது. தனி நபர் வருமானத்தில் 8வது இடத்திற்கும், மென்பொருள் ஏற்றுமதியில் 11வது இடத்திற்கும் தள்ளப்பட்டுவிட்டது. விவசாயிகள் தற்கொலை பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி விசாரித்தபோது, 180 தற்கொலைகள் மட்டுமே நடந்திருப்பதாக ஒரு புள்ளிவிவரம் தரப்பட்டது. உண்மையில் 2,800 விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். அவற்றைத் தற்செயல் மரணங்களாக மட்டுமே அரசு பதிவு செய்திருக்கிறது. இதனால் அந்த விவசாயிகளின் குடும்பங்களுக்குக் கிடைக்கவேண்டிய காப்பீட்டுத் தொகை கூட கிடைக்கவில்லை.
         சுகாதாரத்திற்காகச் செலவிடுவதில் 21-வதுஇடத்தில்உள்ள குஜராத்தில்,பள்ளிக் குழந்தைகள் 15..9 விழுக்காட்டினர் படிப்பைத் தொடரமுடியாமல் நின்று விட்டார்கள். எழுத்தறிவில் 17- வது இடத்தில்தான் குஜராத் இருக்கிறது. பல்கலைக் கழகங்களில் புதிய ஆசிரியர்கள், பேராசிரியர்கள், துறைத்தலைவர்கள் நியமனம் என்பதே இல்லை. நிரப்பப்படும் பணியிடங்களிலும் ஒப்பந்த அடிப்படையிலேயே குறைந்த ஊதியத்துடன் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். 11 கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டுவிட்டன. அதிகக் கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களை நாட வேண்டிய நிலைமை மாணவர்களுக்கு ஏற்படுத்தப்படுகிறது. தலித் மக்கள் வேதம் படித்தால் புரோகிதராகலாம் என்று திடீர்ப்பாசத்துடன் அறிவித்த மோடி, ‘கர்ம யோகம்’ என்ற புத்தகத்தில் “இந்த மக்கள் வாழ்க்கைத் தேவைக்காகத் துப்புரவுப் பணிகளைச் செய்யவில்லை. கடவுளால் தரப்பட்ட பணியாக ஏற்றுச் செய்கிறார்கள்” என்று எழுதினார்.
         அதற்குக் கண்டனம் எழுந்ததைத் தொடர்ந்து அந்தப் புத்தகமே சந்தையிலிருந்து திரும்பப்பெறப்பட்டது. அதே நேரத்தில், தலித் மக்களுக்கு எதிராக 4 ஆயிரத்துக்கு மேல் குற்றச்செயல்கள் நடந்திருந்தாலும் காவல்துறையினர் அவற்றை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்வதில்லை. மதவாதச் செயல்களுக்கான நோக்கத்துடன் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஏற்படுத்திய ஒரு குளத்திற்கு, அரசின் அணைக்கட்டுத் திட்ட நிதி திருப்பி விடப்பட்டது. இது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் பெயரால் வனப்பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் புலம்பெயர்ந்து செல்கிற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களது குழந்தைகளுக்குக் கல்வி மறுக்கப்பட்டிருக்கிறது.

யாருக்கு உற்சாகம்?           

            மோடி ஆட்சியில் உற்சாகமாக இருப்பவர்கள் பெரும் முதலாளிகள் மட்டும் தான். டாட்டா ‘நானோ’ தொழிற்சாலைக்கு 1,100 ஏக்கர் நிலம் வெறும் ஏக்கருக்கு 10,000 ரூபாய் விலையில் தரப்பட்டது. 0.1 விழுக்காடு வட்டியில், 20 ஆண்டுகள் கழித்துத் திருப்பினால் போதும் என்ற சலுகையுடன் 9,500 கோடி ரூபாய் கடன் தரப்பட்டிருக்கிறது. இப்படி ரிலையன்ஸ் உள்ளிட்ட எல்லா கார்ப்பரேட் நிறுவனங் களுக்கும் சலுகைகள் வாரி வழங்கப்பட்டிருக்கின்றன. பிறகு ஏன் அவர்கள் மோடி நிர்வாகத்தைப் புகழ மாட்டார்கள்? மோடியைப் பெரிய ஆளாக சித்தரிக்கும் திட்டத்தில் அமெரிக்காவின் உளவுத் துறைக்கும் பங்கிருக்கிறது என்பது மேலும் கவலைக்குரிய பிரச்சனை. மோடி போன்றவர்கள் இந்தியாவின் ஆட்சியாளர்களாக வருவதே தங்கள் நோக்கத்திற்கு மேலும் உகந்தது என்று ஏகாதிபத்தியம் நினைக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய பொய்யர் நரேந்திர மோடி என்ற உண்மை நாட்டு மக்களிடம் விரிவாகக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்றும் ஷப்னம் ஹாஷ்மி கூறினார்.

கருத்துகள் இல்லை: