திங்கள், 26 ஆகஸ்ட், 2013

ராமாயணத்திற்கு வரலாறு உண்டு... ஆனால் ராமனுக்கு....?


               “ராமாயணத்துக்கு வரலாறு உண்டு; ராமனுக்கு வரலாறு இல்லை” என்பது நமது நாட்டின் முதலாவது பிரதமர் ஜவஹர்லால் நேருவால் அமைக்கப்பட்ட 30 அறிஞர்கள் குழு கண்டறிந்த உண்மை.        - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க பொதுச்செயலாளர் தோழர். சு. வெங்கடேசன் பேச்சு...    
 
                பண்பாட்டு அமைப்பான தமுஎகச இது பற்றி ஏன் விவாதிக்கிறது என்ற கேள்வியை எழுப்பி ராமர் பாலம் என்ற கட்டுக்கதை வரலாறாக முன்வைக்கப்படுவதால் தான் இதனை நாம் எடுக்கிறோம் என்ற முன்வைப்போடு நிறைவுரையைத் தொடர்ந்தார் சு.வெங்கடேசன்.
           “கட்டுக்கதைகள் அல்ல வரலாறு; விஞ்ஞான பூர்வமான தரவுகளால் நிரூபிக்கப்பட் டது தான் வரலாறு என்பதை உரக்கப் பேசவேண்டும்; உணர்த்த வேண்டும். ''பூர்வீக ராமகதை, புத்த ஜாதகக்கதை, வால்மீகி ராமாயணம்'' என்ற மூன்று தொன்மையான கதைகளில் சீதையின் பிறப்பு மூன்று விதமாகக் கூறப்படுகிறது. ஒரு கதை சீதையை ராமனுக்கு சகோதரி என்கிறது. மற்றொன்று சீதையை ராவணனின் மகள் என்கிறது. மூன்றாவது கதை ஜனகனின் மகள் என்கிறது. புத்த ஜாதகக்கதையில் ராமனுக்கு சீதை சகோதரி.
           அன்றைய தசரதனின் தலைநகரம் வாரணாசி; ராமன் வனவாசம் போன இடம் இமயமலை; வால்மீகி ராமாயணத்தில் இவர்கள் கணவன் மனைவியாக இருக்கிறார்கள். தசரதனின் தலைநகரம் அயோத்தி. ராமன் வனவாசம் போன இடம் தண்டகாரண்யம். ஆதிராமாயணத்திற்குப் பிறகு ராமாயணம் தண்டகாரண்யத்திலிருந்து இறங்கி இலங்கைக்கு வந்து சேர்கிறது. 
               நாடு சுதந்திரம் அடைந்தபிறகு 1951-ல் பிரதமர் நேரு ஒருவேலை செய்தார்; வரலாற்றுப் பேராசிரியர் ஜி. எச். பட் தலைமையில் ஒரு குழு அமைத்தார். பல ஆயிரம் ராமாயணங்கள் இருக்கிறதே. இவற்றைத் தொகுத்து ஆய்வு செய்ய 30 அறிஞர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு ஏறத்தாழ இரண்டாயிரத்து ஐநூறு ராமயண ஏடுகளை ஆராய்ந்து 87 ஏடுகளைக் கண்டறிந்து மிகப் பெரிய ஆய்வைச் செய்தார்கள்.
           மேற்குப்பகுதியிலிருந்து தெற்கு நோக்கி நகர்ந்த ராமாயணக்கதைகள் வடக்கு நோக்கி நகர்ந்து சீனத்துக்குப் போன ராமாயணக்கதைகள் கிழக்கு நோக்கி வடகிழக்கு நோக்கிப் போன ராமாயணக் கதைகள் எப்படி மாறி மாறி சென்றிருக்கின்றன என்பது குறித்து மிகச் சிறந்த ஆய்வை அவர்கள் செய்திருக்கிறார்கள். அந்த ஆய்வு சொல்கிற உண்மை என்னவென்றால் ராமாயணத்திற்கு வரலாறு உண்டு; ஆனால் ராமனுக்கு வரலாறு இல்லை. இது ஜவர்ஹர்லால் நேரு அமைத்தக்குழு விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்து தீர்மானித்த விஷயம். தசரத ராமாயணம் என்ற ஒன்று இருக்கிறது. இதன் சமஸ்கிருத மூலப்பிரதி கிடைக்கவிலலை. சீன மொழிபெயர்ப்பு கிடைக்கிறது. அதில் விசேஷம் என்ன வென்றால் சீதை என்கிற கதாபாத்திரமே இல்லை. அப்புறம் எங்கே சீதையை ராவணன் கடத்துவது? சண்டைபோடுவது? மகாபாரதம் ராமாயணக்கதையைப் பேசுகிறது. சாந்தி பருவத்தில் முழு ராமாயணக் கதையும் பேசப்படுகிறது. அதில் சீதை வனவாசம் போனவிஷயமே கிடையாது.
இங்கே பேசுகிற ராமகதை உண்மையென்றால் மகாபாரதத்தை நீங்கள் (இந்துத்வா வாதிகள்) நிராகரிக்கிறீர்கள் என்று அர்த்தம். மகாபாரதத்தை ஏற்றுக் கொண்டால் ராமகதையை நிராகரிக்கிறீர்கள் என்று அர்த்தம். ராமாயணத்தைத் தமிழில் தந்த கம்பன் மிகப் பெரிய கவிப்பேரரசு. சந்தேகமே இல்லை. அவனது ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அகலிகை கதை 10 -ஆம் நூற்றாண்டுக்குப் பின் எழுதப்பட்ட எந்த ராமாயணத்திலும் இல்லை. வால்மீகி ராமாயணத்தில் இந்திரனுக்கு கவுதம முனிவர் சாபம் கொடுக்கும் போது தலைமைப் பதவியை இழப்பாய் என்றும் எந்த வெற்றியையும் பெறமாட்டாய் என்றும் கூறியதாகத் தான் இருக்கிறது. ஆனால் கம்பனோ எதற்கு நீ ஆசைப்பட்டாயோ அந்தப் பெண் குறி உன் உடல் முழுவதும் தோன்றட்டும் என்று இந்திரனுக்கு சாபம் கொடுத்ததாகக் கூறுகிறான்.
          தமிழகத்தின் காதல் கடவுள். இந்திரனுக்கு விழா எடுக்கப்பட்டதை சிலப்பதிகாரம் பக்கம் பக்கமாக பேசும். சாதி கடந்து ஆண்களும் பெண்களும் இந்திரனை வழிபட்டார்கள். அப்படிப்பட்ட இந்திரன் அசிங்கமானவன்; ஆயிரம் பெண்ணுறுப்புகளை உடையவன்; வழி படத்தகுந்தவன் அல்ல என்று கூறி மக்களின் பொதுப் புத்தியிலிருந்தே இந்திரனை அகற்றிய வேலையைக் கம்பன் செய்திருக்கிறான். 
       அதேபோல் அணில் கதை - ராமன் பாலம் கட்டும் போது உடலை மணலில் உருட்டி பாலத்தின் மேல் உதிர்த்து உதவியதால் தடவிவிட்ட கோடுகளே அணிலுக்கு அழியாமல் இருக்கின்றன என்ற கதை - உங்களுக்குத் தெரியும். வால்மீகி ராமாயணம் தொடங்கி கேரளாவில் எழுதப்பட்ட எழுத்தச்சன் ராமாயணத்திலிருந்து, ஆந்திராவில் எழுதப்பட்ட பசவய்யா ராமாயணம் வரை எதிலும் அணில் கதை  இல்லை. இது கம்பன் விட்ட (கற்பனைக்) கதை. இப்படி ஆளாளுக்கு விட்ட கதைகளின் தொகுப்பு தான் ராமாயணம். ராமாயணக்கதை விந்தியமலைக்குத் தெற்கே நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை என்று அமிர்தலிங்க அய்யரும் பரமசிவ அய்யரும் ஆராய்ந்து உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
           ஒருவாதத்திற்காக ராமன் தெற்கே வந்து இலங்கைக்குப் போனான் என்று வைத்துக் கொண்டாலும் பாலம் கட்டியது எங்கே? ராமேஸ்வரத்திலிருந்தா? கன்னியாகுமரியிலிருந்தா? சீவகசிந்தாமணி சொல்கிறது “குரங்கு செல்கடல் குமரியம் பெருந்துறை” குமரி முனையிலிருந்து ராமன் பாலம் கட்டினான் என்று சீவகசிந்தாமணி சொல்கிறது; சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை போன்ற தமிழ் இலக்கியங்களும் சொல்கின்றன. இவையெல்லாம் புத்த, சமண இலக்கியங்கள் பொய் சொல்லிவிட்டன என்று வைத்துக் கொண்டாலும் வேறெந்த தமிழ் இலக்கியமும் ராமேஸ்வரத்திலிருந்து பாலம் கட்டியதாக சொல்லவில்லை. குமரி அம்மன் கோயில் தலபுராணம் என்ன சொல்கிறது? குமரி அம்மனை வழிபட்டு விட்டுத் தான் ராமன் பாலம் கட்டினான் . அதனால் தான் பாதுகாப்பாக அதனைக் கட்ட முடிந்தது என்கிறது.
        ராமேஸ்வரத்திலிருந்து பாலம் கட்டியது தான் உண்மை என்றால் குமரியம்மன் தலபுராணத்தை எரித்துப் போட நீங்கள் தயாரா என்று சனாதனிகளைப் பார்த்து நாம் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது. அதுமட்டுமல்ல குமரிமாவட்டத்தில் உள்ள மருந்துவாழ்மலை, தாடகை மலை, மகேந்திரகிரி, முன்சிறை, சுசீந்திரம், ஜடாயுபுரம், சங்குத்துறை போன்ற பெயர்கள் ராமாயணத்தோடு தொடர்புடையவை. முன்சிறையில் இருக்கிற ஊற்றுக்கு ஒரு புராணக்கதை உண்டு; ராவணன் சீதையைத் தூக்கிச் சென்றபோது புஷ்பகவிமானம் பழுதாகிவிடுகிறது. அந்த இடத்திலே இறக்கி பழுது நீக்கி மீண்டும் சென்றான். அப்போது சீதை வடித்த கண்ணீர் தான் ஊற்றாக இன்னமும் வருகிறது என்று நம்பி மக்கள் வழிபடுகிறார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமாயணத்தோடு தொடர்புடைய எந்த ஊரும் இல்லை. இடங்களும் இல்லை. இதனால் ராமன் பாலம் கட்டியது ராமேஸ்வரத்திலிருந்து அல்ல கன்னியாகுமரியிலிருந்து தான் என்று சொல்வது நமது நோக்கம் அல்ல. காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் கதைகளை ஒவ்வொரு பகுதியினரும் தங்கள் பகுதியோடு ஏற்றிப்பார்க்க நினைப்பது மக்கள் வழக்கம் என்பதுதான்.
              ராமனை வரலாற்று நாயகனாக சுவாமி விவேகானந்தரும் ஏற்றுக் கொள்ளவில்லை. 1892 - ஆம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதியிட்ட ஹிந்து நாளிதழில் அவரது பேட்டி வெளிவந்திருக்கிறது. ராமனோ கிருஷ்ணனோ வரலாற்று நாயகர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை; தனி நபர்களை வரலாற்று நாயகர்களாக ஏற்கும் அளவுக்கு இந்து மதம் பலவீனமாக இல்லை. உலகில் இரண்டே வரலாற்று நாயகர்கள் தான் இருக்கிறார்கள் ஒருவர் நபிகள்நாயகம்;  இன்னொருவர் கவுதம புத்தர் என்று அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
          எனவே ராமன் பாலம் என்ற கட்டுக் கதையை வரலாறாகத் திரித்துக் கூறும் இந்துத்துவவாதிகளை மக்களிடம் அம்பலப்படுத்துவதற்கும் - தமிழர்களுக்கும், தமிழ் இலக்கியங்களுக்கும் அவர்கள் இழைத்த துரோகத்தை வெளிப்படுத்துவதற்கும் சேதுசமுத்திரத்திட்டத்தை நாம் கருவியாக எடுக்க வேண்டும்.  கட்டுக்கதைகளை உடைப்பதன் மூலம் சேதுசமுத்திரத்திட்டம் நிறைவேற்றப்படுவதற்கான தளத்தை அமைக்கவேண்டும்.

நன்றி :