வியாழன், 29 அக்டோபர், 2015

மதவெறி அணுகுண்டைப் போல் ஆபத்தானது ~ விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்


              நாட்டின் நிலைமை கண்டு  இந்திய விஞ்ஞானிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மிகுந்த கவலையுடனும், கண்டிப்புடனும் நமது குடியரசுத்தலைவருக்கு கோரிக்கை மனு ஒன்றை அளித்திருக்கிறார்கள். பாரதீய ஜனதாக்கட்சி மோடியின் தலைமையில் மத்தியில் ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து,  முடநம்பிக்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்களும், முற்போக்கு எழுத்தாளர்களும், இஸ்லாமிய மக்களும், தலித் மக்களும் ஆர்.எஸ்.எஸ்-இன் வழிகாட்டுதலின்படி  மதத்தின் பேராலும், மாட்டிறைச்சியின் பேராலும்   தாக்கப்படுவதும்,  கொல்லப்படுவதும் நாளுக்கு நாள்  அதிகரித்தவண்ணம் இருக்கிறது. மதவெறி என்பது தலை விரித்தாடுகிறது.
             இதையெல்லாம் கண்டிக்கவேண்டிய அல்லது தடுத்து நிறுத்தவேண்டிய ஆட்சியாளர்களும் வெறுமனே வேடிக்கைப்பார்த்த வண்ணம் ஆட்சிக்கு வந்ததன் நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அப்பாவி மக்களும் எழுத்தாளர்களும் மிரட்டப்படுவதையும், தாக்கப்படுவதையும் கொல்லப்படுவதையும் கண்டித்து வழக்கம்போல் பல்வேறு முற்போக்கு இயக்கங்கள்  போராட்டங்களையும் இயக்கங்களையும் நாட்டின் அனைத்துப்பகுதிகளிலும் நடத்திக்கொண்டிருக்கின்றன.
            ஆனால் நமக்கு ஏன் வம்பு என்று எப்போதும் ஒதுங்கியே இருப்போரும் இம்முறை ஆட்சியாளர்களின் பாதகச்செயல்களை கண்டு பயங்கொள்ளாது மோதி மிதித்துவிட துணிந்து வெளியே வந்தது என்பது நாமெல்லாம் வரவேற்கவேண்டிய ஒன்று. 
            ஒரு பக்கம் ஐம்பதுக்கும் மேற்பட்ட சாகத்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் மத்திய  தங்களுக்கு  வழங்கிய விருதினை ஒவ்வொருவராக திருப்பி அளித்து வருகிறார்கள். 
                இன்னொரு பக்கம் நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து, மதவெறியால் நடக்கும் சம்பவங்களை  கண்டித்தும், தங்கள் கவலையை  வெளிப்படுத்தியும் குடியரசுத்தலைவருக்கு மனு ஒன்றை  அளித்திருக்கிறார்கள். 
           இந்திய நாட்டில் மதவெறி கூட்டத்தினரால்  அப்பாவி மக்களும், முற்போக்காளர்களும் கொல்லப்படுவது என்பது கண்டிக்கத்தக்கது. மதவெறி என்பது அணுகுண்டைப் போல் ஆபத்தானது. அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும். மதரீதியாக மக்களை பிளவுப்படுத்தும். உண்பதும், உடுத்துவதும், சிந்திப்பதும், நேசிப்பதும் ஒவ்வொருவரின் உரிமையோடு சம்பந்தப்பட்டது. மதத்தின் பேரால் இவைகளின் மீதான தலையீடு என்பது ஏற்றுக்கொள்ளமுடியாது. என்றெல்லாம் அந்த மனுவில் குறிப்பிட்டு அளித்திருக்கிறார்கள். 
              வளர்ந்து வரும் மதவெறிக் கூட்டத்திற்கெதிராக விஞ்ஞானிகளும், எழுத்தாளர்களும், கலைஞர்களும் இணைந்திருப்பது இன்றைய உடனடித் தேவையானது. வரவேற்கத்தக்கது.             

கருத்துகள் இல்லை: