செவ்வாய், 13 அக்டோபர், 2015

இமயத்தில் உயர்ந்த செங்கொடி...!


             கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் இறுதியில் நேபாளத்தில் 200 ஆண்டு கால மன்னராட்சி ஒழிக்கப்பட்ட பிறகு, புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி மதசார்பற்ற - ஜனநாயக நாடாக உருமாற கடந்த ஏழு ஆண்டுகளாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இந்து மதவாத பிற்போக்கு சக்திகளின் திட்டமிட்ட சதிகளை முறியடித்து  நேபாளம் கடந்த அக்டோபர் மாதம் 12 ஆம் தேதியன்று ஒரு வழியாய் நிம்மதி பெருமூச்சி விட ஆரம்பித்திருக்கிறது. ஏழு ஆண்டுகால போராட்டத்திற்குப் பின் புதிய அரசியலமைப்பு சட்டம் பிரசவமானது. புதிய அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாதென்றும், பழைய மன்னராட்சி முறையே தேவை என்றும், நேபாளத்தை இந்து நாடாக அறிவிக்கவேண்டும் என்றும் நேபாளத்திலும், இந்தியாவிலும் இருக்கக்கூடிய மாற்றத்தை விரும்பாத இந்து மதவாத பிற்போக்குவாதிகள் கைகோர்த்து, புதிய சட்டம் நிறைவேற்றப்படாமல் இருக்க முட்டுக்கட்டை போட்டனர். ஆனால் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி, நேபாள மாவோயிஸ்ட் கட்சி, நேபாள காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட மாற்றத்தையும், ஜனநாயகத்தையும் விரும்பிய அரசியல் கட்சிகள்  இறுதிவரையில் முழுமூச்சாக நின்று தங்களது நாட்டிற்கு புதிய அரசியலமைப்புச் சட்டத்தை வரைந்து கொடுத்திருக்கிறார்கள். அதற்காக அந்த அரசியல் கட்சிகளையும், அக்கட்சிகளை சேர்ந்தவர்களையும், அவர்களோடு ஆதரவாக நின்ற அந்நாட்டு மக்களையும் நெஞ்சார பாராட்டவேண்டும்.  
           அதுமட்டுமல்ல, நேபாளம் ஒரு ''இந்து நாடாக'' அறிவிக்கப்பட்டால் அது இந்தியாவிற்கு முன்னோட்டமாய் அமையும் என்று எதிர்ப்பார்த்த இந்திய இந்துத்துவா மதவெறிசக்திகளுக்கு நேபாளத்தில் ஏற்பட்ட இந்த மாற்றம் என்பது ஒரு ஏமாற்றத்தை உண்டாக்கியது. இதன் காரணமாக இந்தியாவிலிருந்து தினந்தோறும் நேபாளத்திற்கு அனுப்பப்படும் உணவு பொருட்கள் மற்றும் பெட்ரோல் - டீசல் போன்ற அத்தியாவசியப் பொருட்களின்  போக்குவரத்து திடீரென்று இந்துத்துவவாதிகளால் தடை செய்யப்பட்டது. இதை புரிந்துகொண்ட நேபாள அரசு, இந்தியாவிலிருந்து வரும் அத்தியாவசிய பொருட்கள் நேபாளத்திற்குள் நுழைவதை தடுத்து நிறுத்தினால், அந்த பொருட்களை சீன நாட்டிலிருந்து வரவழைப்போம் என்று  அறிவித்தவுடன் இந்துத்துவவாதிகளின்  அந்த தடைகள் அவசர அவசரமாக விலக்கிக்கொள்ளப்பட்டன.         
      நேபாள பாராளுமன்றம்   ஒருமனதாக புதிய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, அந்த  அரசியலமைப்பு சட்டத்தின்படி,   முறைப்படி  பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி CPN(UML) - நேபாள கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர்.கே.பி.சர்மா ஒளி அவர்கள்   இருமுனை போட்டியில் நேபாள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கொய்ராலாவை தோற்கடித்து மதசார்பற்ற ஜனநாயக நேபாள நாட்டின் முதலாவது பிரதமராக தேர்ந்தெடுத்தது என்பது இந்தியா, நேபாளம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள  மதவாத பிற்போக்கு சக்திகளுக்கு அதிர்ச்சியையும்,  ஏமாற்றத்தையும்  அளித்துள்ளது.  
        அதேசமயத்தில், இமயமலையின் உச்சியில் செங்கொடி உயர்ந்து 
நிற்பதைப் பார்க்கும் போது, உலகெங்கும் மாற்றத்தை விரும்பும் 
அனைவருக்கும் பெருமையையும்,
 மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் மற்ற நாடுகளிலுள்ள கம்யூனிஸ்ட் இயக்கத்தோழர்களுக்கு நம்பிக்கைத் துளிர்கிறது. மாற்றத்தை ஏற்படுத்திய நேபாள நாட்டு மக்களுக்கு தோழர்.சர்மா ஒளி தலைமையிலான புதிய அரசு ஏற்றத்தை தரும் என்ற நம்பிக்கையும் துளிர்விடுகிறது.

கருத்துகள் இல்லை: