திங்கள், 19 அக்டோபர், 2015

கூத்தாடிகள் ரெண்டுபட்டால் தொலைக்காட்சிகளுக்கு கொண்டாட்டம்...!


              ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்ன்னு சொல்லுவாங்க. ஆனால் அந்த கூத்தாடிகளே ரெண்டுபட்டால் தமிழ்நாட்டு ஊடகங்களுக்கு தான் ரொம்ப கொண்டாட்டம். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு பொறுப்பாளர்கள் தேர்தல் என்பது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ''திகில்'' நிறைந்த காட்சிகளாக இருந்தது. திரைப்படத்துறையில் கோடிகோடியாய் வருமானம் ஈட்டும் தமிழக திரைப்படக் கலைஞர்கள் கடந்த பொறுப்பாளர்கள் மீது  அதிருப்தி ஏற்பட்டதன் காரணமாக ஆரம்பத்திலிருந்தே இரண்டு அணியாய் உடைந்து தேர்தலில் ஜனநாயகப்பூர்வமான போட்டியை உருவாக்கியது. ஆனால் அது இரு அணிகளுமே தங்களுக்கிடையே இருந்த சொந்த விருப்பு வெறுப்புகளை கிளறிவிடப்விட்டு, ஆட்பலம், பணபலம், அதிகாரபலம் போன்றவைகள் மூலம்  சாதி, இன உணர்வுகளையும் தூண்டிவிடப்பட்டு தேர்தல் என்பதை ஒரு குழாயடி சண்டையாக மாற்றிவிட்டனர். 
              என்றைக்கு நடிகர் சங்கத்தேர்தல் குழாயடி சண்டையாக மாறியதோ, அன்றையிலிருந்து தனியார் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிக்கைகள் உள்ளிட்ட ஊடகங்களுக்கு கொண்டாட்டமாய் போய்விட்டது. அதன் உச்சக்கட்டமாய் தேர்தல் நாளான நேற்று ஊடகங்களெல்லாம் தங்கள் வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள  சென்னையிலிருந்த அத்துனை  தொலைக்காட்சிகளும், பத்திரிக்கைகளும் தேர்தல் நடந்த இடத்திற்கே படைகளுடன் கூடிவிட்டனர். நேரடி ஒளிபரப்பு, சுடச்சுட செய்தி என்று விலைவாசி உயர்வால் சோர்ந்துபோன தமிழக மக்களை நேற்று நள்ளிரவு வரை உற்சாகமூட்டினர். 
           ஒருவழியாக தேர்தல் முடிந்து நேற்றிரவு ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டது. எதிர்ப்பார்த்தது போல் ஐவர் அணி வெற்றி. பாண்டவர் அணி என்று சொல்லப்பட்டவர்களில் நாசர் தலைவராகவும், விஷால் பொதுச்செயலாளராகவும், கார்த்தி பொருளாளராகவும், பொன்வண்ணன் மற்றும் கருணாஸ் துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பல்வேறு களேபரங்களுக்கு மத்தியில் நடந்த தேர்தலில் பெரும்பாலானோர் நம்பிக்கையை பெற்று வெற்றிப்பெற்ற  அனைவரையும் நெஞ்சார வாழ்த்துகிறோம். 
            புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கவனத்திற்கு : - 
        (1) நடிகர் சங்கம் எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ மீண்டும் அதை நோக்கி சங்கத்தை அழைத்துச் செல்லவேண்டும். 
              (2) கட்டப்பஞ்சாயத்துக்கு இடம்கொடுக்காமலும், ஆளுங்கட்சிக்கோ அல்லது எதிர்க்கட்சிக்கோ ஜால்ரா அடிக்காமலும் நடுநிலைமையுடன் சங்கம் நடைபெறவேண்டும். 
            (3) புதிதாக பதவியேற்கும் முதலமைச்சரை ''உற்சாகமூட்டுவதற்கு'' செய்யப்படும்  அநாவசிய ஆடம்பரச்செலவுகளை தவிர்க்கவேண்டும். 
                     (4) மதத்தின் பெயராலோ, சாதியின் பெயராலோ அல்லது இனத்தின் பெயராலோ திரைப்படக்கலைஞர்கள் மிரட்டப்படும் போதோ அல்லது தாக்கப்படும் போதோ வாய் மூடி வேடிக்கைப் பார்த்திராமலும்   தயங்காமலும்  கண்டிக்கவேண்டும். 
   (5) பொருளாதாரத்தில் நலிவடைந்த வாழ்வாதாரத்திற்கே கஷ்டப்படும் திரைப்படக்கலைஞர்கள்  மற்றும் நாடகக்கலைஞர்களை பாதுகாக்கும் முயற்சிகளில்  இறங்கவேண்டும். 
             இவைகள் தான் புதிய பொறுப்பாளர்களிடம் இருந்து அனைவராலும் எதிர்ப்பார்க்கப்படுவன. அவைகளை நிறைவேற்ற புதிய பொறுப்பாளர்கள் முயற்சி செய்யவேண்டும். 

கருத்துகள் இல்லை: