ஞாயிறு, 28 ஜூன், 2015

எதற்கும் கூச்சப்படாத நரேந்திரமோடி...!

                பங்காரு இலட்சுமணனின் ஆயுதபேர ஊழல், இராணுவவீரர்களுக்கான சவப்பெட்டி  ஊழல், ராணுவவீரர்களுக்கு வாங்கிய ஷூவில் ஊழல், இராணுவ பீரங்கி  ஊழல், எடியூரப்பா - ரெட்டி சகோதரர்களின் சுரங்க ஊழல் - இப்படியாக வகைவகையான ஊழல்களை  அடையாளமாக கொண்ட பெருமைமிகு கட்சியான பாரதீய ஜனதாக்கட்சி, கடந்த  காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியில் செய்த ஊழல்களை ஒழித்துக்கட்டிவிட்டு, ஊழலற்ற ஆட்சியை தருவோமென்று, ஊழல் என்றால் என்னவென்று தெரியாதவர்களை போல் நாடகமாடி ஓட்டுக்களை வாங்கி மோடி தலைமையில்  ஆட்சிக்கு வந்தவர்கள்.  கடந்த மே மாதம் இவர்கள் ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவையொட்டி, இவர்கள் வாய் கிழியப் போட்ட கோஷமே, 
''கடந்த ஓராண்டில் ஊழல் இல்லாத ஆட்சியை மக்களுக்கு கொடுத்திருக்கிறோம்'' என்பது தான். ஓராண்டு சாதனை விளம்பரங்களும் இப்படித்தான் வெளியிடப்பட்டன. 
                ஆனால் அந்த கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்தபின்பு தான் இவர்கள் சாயம்  வெளுக்க ஆரம்பித்திருக்கிறது. புற்றீசல் போல் ஒவ்வொன்றாக வெளிவர தொடங்கியிருக்கிறது. 
        (1) பல்வேறு மோசடி வழக்கில் தேடப்பட்டு வெளிநாட்டில் தலைமறைவாக வாழும்  ''உலகமகா திருடன்'' லலித் மோடியுடன் இந்திய வெளியுறவு  அமைச்சர் சுஷ்மா சுவராஜ்,  அவரது கணவர் மற்றும் அவரது மகள் ஆகியோரின் நெருக்கமான தொடர்பு உள்ளது.  விசா கிடைக்காமல் இலண்டனில் இருக்கும் லலித் மோடிக்கு விசா கிடைக்க ''மனிதாபிமான'' அடிப்படையில் உதவிசெய்ய சுஷ்மா தனது அதிகாரத்தை தாவறான முறையில் பயன்படுத்தியிருக்கிறார்.  
              (2) சுஷ்மாவைப் போல் பாரதீய ஜனதாக்கட்சியை சேர்ந்த இராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜேக்கும், லலித் மோடிக்கும் உள்ள  நெருக்கமும் வெளிவந்து நாறிக் கொண்டிருக்கிறது.
                (3) மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரின் போலி கல்வி சான்றிதழ் ஊழலும் காற்றில் பறந்துகொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் தாக்கல் செய்யும் வேட்பாளர் மனுவில் ஒவ்வொரு முறையும் வெவ்வேறான கல்வித்தகுதியை அளித்திருக்கிறார். கல்லூரியில்  படிக்காமலேயே ஒருமுறை பி.ஏ என்றும் இன்னொரு முறை பி.காம் என்றும் தவறான தகவல்களை அளித்துவிட்டு வகையாக மாட்டிக்கொண்டார். 
                 (4) மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏழைக் குழந்தைகளுக்காக வாங்கப்பட்ட கடலை மிட்டாயை களவாடி தின்ற பாரதீய ஜனதாக்கட்சியை சேர்ந்த அம்மாநில குழந்தைகள் நல அமைச்சர் பங்கஜ் முண்டே நடத்திய ''கடலை மிட்டாய் ஊழல்'' 
              இப்படியாக மோடி தலைமையிலான பாரதீய ஜனதாக்கட்சியின் ஆட்சியில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக ஊழல்கள் சந்தி சிரிக்கின்றன. இவைகளைப் பார்த்து ஊழலுக்கு வித்திட்ட காங்கிரஸ் கட்சியே வெளியே கூச்சலிடுகின்றன. இடதுசாரிக்கட்சிகள் இன்னொருபக்கம் போராடிக்கொண்டிருக்கிறார்கள். திடீரென்று பேச ஆரம்பித்த ''கடப்பாரை புகழ்'' அத்வானி  கூட, என் மீது ஊழல் குற்றச்சாட்டு வந்தபோது நான் எனது எம்.பி பதவியை இராஜனாமா செய்திருக்கிறேன். அதேப்போல் தற்போது  ஊழல் குற்றச்சாட்டில் மாட்டிக்கொண்டவர்களும் இராஜனாமா செய்யவேண்டும் என்று தனது கட்சிக்காரர்களுக்கு பாடம் நடத்தியிருக்கிறார்.   ஆனால் பிரதமர் நரேந்திரமோடி மட்டும் எப்போதும் போல், எந்தவித கூச்சநாச்சமுமின்றி  வாய் திறக்காமலும், கண்டுகொள்ளாமலும்  இருக்கிறார். 
           வழக்கம் போல் மக்கள் வெறுமனே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.  

கருத்துகள் இல்லை: