செவ்வாய், 16 ஜூன், 2015

மோடி கவலைப்படும் அந்த ஏழைகள் யார்...?


                முன்பெல்லாம் சமையல் எரிவாயு சிலிண்டரை தொலைபேசி அல்லது செல்லிடபேசி மூலம் பதிவு செய்தால், எரிவாயுக்கான மானியத்தை பெறுவதற்கு உங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்யுங்கள் என்று ஒரு வேண்டுகோள் அறிவிப்பை  கேட்டப்  பின்பு தான் பதிவு செய்யமுடியும். அப்படியாக ஆதார் எண்ணை அளித்தும் மக்களுக்கு மானியம் கிடைப்பதில் சிக்கல்கள் இருக்கிறது. அதற்குள் இப்போது செல்லிடபேசியில் எரிவாயுவை பதிவு செய்யும் போது  வேறொரு அறிவிப்புவருகிறது. ''உங்களுடைய எரிவாயுவிற்கான மானியத்தை விட்டுக்கொடுத்து ஏழைகளின் வீட்டில் அடுப்பெரிய செய்யுங்கள்'' என்ற அறிவிப்பு எல்லோருக்கும் வந்தவண்ணம் இருக்கிறது. ரேடியோவிலும் இதுபோன்ற அறிவிப்பு விளம்பரமாக வருகிறது. பெட்ரோல் பங்க்குக்கு சென்றால் அங்கேயும் பெரிய அளவில் விளம்பரம் செய்திருக்கிறார்கள். இவைகள் எல்லாமே  மோடி தலைமையிலான மத்திய அரசு செய்யும் விளம்பரங்கள் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
           மக்களுக்கு நியாயமாக கொடுக்கவேண்டிய இப்படிப்பட்ட மானியங்களை எல்லாம் பிடுங்கி எந்த ''ஏழைகளுக்கு'' கொடுக்கப் போகிறார்கள்.  உண்மையிலேயே நரேந்திர மோடிக்கு ஏழைகள் மீது அக்கறையிருந்தால், கிராமப்புற 100 நாள் வெலைவாய்ப்புத் திட்டத்திற்கு நிதியை குறைக்காமல்  அதிக  நிதிகளை ஒதுக்கி அவர் சொல்லும் அந்த ஏழை மக்களுக்கு நல்ல வருமானத்தை உண்டாக்கியிருக்கலாமே...?
           ரேஷன் கடைகளில் அவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப்பொருட்களை குறைந்த விலைக்கு கிடைக்க ஏற்பாடுகள் செய்திருக்கலாமே...? 
         கல்வி ஏழைகளுக்கும் எட்டும் வகையில் கல்விக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியின் அளவை குறைக்காமல் அதிகமான அளவில் நிதி ஒதுக்கியிருக்கலாமே...?
         அதுமட்டுமல்ல.... சுகாதாரம், மருத்துவம், பெண்கள், குழந்தைகள், ஊட்டச்சத்து, சத்துணவு போன்றவற்றிற்கு கடந்த காலங்களில் ஒதுக்கப்பட்ட மிகக் குறைந்த நிதிகளையும் மேலும் குறைக்காமல் முன்பைவிட அதிகமாக ஒதுக்கியிருக்கலாமே...? 
         ஏழை மக்களின் மீது அக்கறையுடன் பேசுகிற பிரதமர் மோடி மேற்கண்டவற்றை எல்லாம்  செய்துவிட்டு, ஏழை மக்களுக்கு இன்னும் செய்யத் துடிக்கிறேன் அதற்கு இன்னும் நிதித் தேவைப்படுகிறது என்று வேண்டுகோள் விடுத்திருந்தால் வரவேற்றிருக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் செய்யாமல், மேலே சொன்ன அத்துணை திட்டங்களும் ஏழைகளுக்கு கிடைக்கா வண்ணம் நிதிகளை வெட்டிவிட்டு, அவர்களின் மீது மேலும் மேலும்  வரிச் சுமையை ஏற்றிவிட்டு, இப்போது என்னவோ பொதுமக்களிடம் ''உங்கள் எரிவாயுவிற்கான மானியத்தை விட்டுக்கொடுங்கள்.... ஏழைகள் வீட்டில் அடுப்பெரிய உதவி செய்யுங்கள்'' என்றெல்லாம் சொல்லி முதலைக்கண்ணீர் வடிக்கிறார். இந்த மானியத்தை இவராக வெட்டினால் மக்களின் அதிருப்தியை சந்திக்க நேரிடும் என்பதால், நீங்களாகவே விட்டுக்கொடுங்கள் என்று கெஞ்சுகிறார். இவருடைய கெஞ்சலுக்கு மக்கள் சரிப்பட்டு வரவில்லை என்றால், ஒரு கட்டத்தில் மோடியே சாதாரண மக்களுக்கான மானியத்தை வெட்டி எரிந்துவிடுவார் யாரும் மறந்துவிடக்கூடாது. 
          எதற்காக இவ்வளவு கெஞ்சலும், கொஞ்சலும்...? எந்த ஏழைகளுக்காக இவ்வளவு முயற்சி செய்கிறார். மேலே சொன்ன திட்டங்களுக்கான நிதிகளை குறைத்ததென்பதும், சாதாரண மக்கள் மீது அதிகமான வரிச்சுமைகளை ஏற்றிவிட்டதென்பதும், இது போன்ற மானியங்களை வெட்டுவதென்பதும்  மோடியின் முதுகில் சவாரி செய்யும் ''ஏழைகளுக்காகத்'' தான். அந்த ஏழைகள் வேறு யாரும் அல்ல... அம்பானி சகோதர்களும், அதானியும், பிர்லாவும், டாட்டாவும், மல்லையாவும் உள்ளிட்ட கார்ப்பரேட் பெருமுதலாளிகள் தான் என்பதை மறந்துவிடாதீர்கள். மோடி இன்னும் என்னவெல்லாம் இந்த ''ஏழைகளுக்கு'' செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.   

கருத்துகள் இல்லை: