செவ்வாய், 16 டிசம்பர், 2014

நோபல் மங்கை மலாலா..!


நான் ஷாஜியா... நான் கைனட் ரியாஸ்... நான் கைனட் சோம்ரோ... 
நான் மேஸான்... நான் அமினா...!        
         இந்த விருது எனக்குரியது மட்டுமல்ல. இது கல்வி மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கானது. அமைதியை வேண்டி அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிற குழந்தைகளுக்கானது. இது மாற்றத்தை விரும்பும், குரலற்ற குழந்தைகளுக்கானது. நான் இங்கே அவர்களுடைய உரிமைக்குரலாக ஒலிக்கிறேன். இது அவர்களுக்கு பரிவு காட்டுவதல்ல; கல்வி மறுக்கப்பட்ட ஒரு குழந்தையை நாம் பார்ப்பது இதுவே கடைசி முறையாக இருக்கட்டும் என உறுதியேற்கும் தருணம்.
             கல்வி, வாழ்வின் அதிஅற்புதமான ஒன்று. இதுவே எனது 17 ஆண்டுகால வாழ்வின் அனுபவம். வடக்கு பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் தான் என்னுடைய வீடு இருக்கிறது. நான் எப்போதும் பள்ளிக்குச் செல்வதிலும் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதிலும் ஆர்வமாயிருந்தேன். பண்டிகைக் காலங்களில் நானும், எனது நண்பிகளும் எங்களது கைகளில் மருதாணி வைத்துக்கொள்வோம். எங்கள் கைகளில் பூக்களையும், கோலங்களையும் வரையவில்லை;
         மாறாக கணித வாய்ப்பாடுகளையும், சமன்பாடுகளையும் நாங்கள் வரைந்தோம்.கல்வியின் மீது தீராத் தாகம் கொண்டிருந்தோம். ஏனெனில் வகுப்பறைதான் எங்கள் வருங்காலத்தை மாற்றப்போகிறது. நாங்கள் ஒன்றாக அமர்ந்து இணைந்து படித்து வந்தோம். நாங்கள் எண்ணிலடங்கா கனவுகளோடு, சுத்தமான சீருடைகளை அணிய மிகவும் விரும்பினோம். ஆண்களால் மட்டுமே முடியும் என சிலர் எண்ணிவந்தவற்றை உடைத்து நாங்கள்அறிவிலும், படிப்பிலும் சிறந்தவர்களாக எங்களுடைய பெற்றோர்கள் பெருமையடையும் விதம் நடந்துகொள்ள ஆசைப்பட்டோம்.ஆனால் அந்தக் கனவு அப்படியே நிலைத்திருக்கவில்லை.
          சரியாக எனக்கு 10 வயது. அழகும் பொலிவும் நிறைந்த ஸ்வாட் பள்ளத்தாக்கு திடீரென தீவிரவாதத்தின் தலமாக மாற்றப்பட்டது. 400க்கும் மேற்பட்ட பள்ளிகள் அடையாளமின்றி அழிக்கப்பட்டன. பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வது நிறுத்தப்பட்டது. பெண்கள் சாட்டையால் அடிபட்டார்கள். அப்பாவிமக்கள் கொல்லப்பட்டார்கள். நாங்கள் அனைவரும் பாதிக்கப்பட்டோம். எங்களின் கனவுகளை இருள் கவ்வத் துவங்கியது. கல்வி பெறுவது, உரிமை என்பதற்கு மாறாக குற்றம் என ஆக்கப்பட்டது.என்னுடைய உலகமும், என்னுடைய தேவைகளும் தடம் மாறின. எனக்கு முன் இரண்டு வழிகள் இருந்தன.
            முதலாவது, அமைதியாக இருந்துவிட்டு, சில காலம் காத்திருந்து பின் கொல்லப்படுவது; இரண்டாவது, உரத்துப் பேசி உடனே கொல்லப்படுவது. இதில் நான் தேர்ந்தெடுத்தது இரண்டாவது வழியை. நான் உரத்துப் பேச முடிவு செய்தேன். அக்டோபர் 9, 2012. தீவிரவாதிகள் எங்களை தடுத்து நிறுத்தி தாக்கினர். ஆனால் அந்த துப்பாக்கிக் குண்டுகளால் எங்களை வெல்ல முடியவில்லை. இது என் கதைமட்டுமல்ல... ஏராளமான பெண் குழந்தைகளின் கதை.நான் இங்கு என்னுடன் நைஜீரியா, சிரியா என் பாகிஸ்தான் சகோதரிகளை அழைத்து வந்துள்ளேன்.
           நான் சுடப்பட்ட நாளில் என்னுடன் இருந்த துணிவுமிக்க சகோதரிகள் ஷாஜியா மற்றும் கைனட் ரியாஸ் ஆகியோரை என்னுடன் அழைத்து வந்துள்ளேன். அவர்களும் அந்த துயரமிக்க அதிர்ச்சியை கடந்து வந்தவர்களே. பாகிஸ்தானில் இருந்து வந்திருக்கும் இன்னொரு சகோதரி கைனட் சோம்ரோ, எல்லைமீறிய துன்புறுத்தலுக்கும், வன்புணர்ச்சிக்கும் ஆளாகி, தனது சகோதரனையும் இழந்தவள். ஆனாலும் அவர்களிடம் அடங்கிவிடாமல் துணிந்து எதிர்த்தவள். இன்னும் நான் சந்தித்த ஏராளமான சகோதரிகளைச் சொல்வேன். சிரியா நாட்டைச் சேர்ந்த 16 வயதான மேஸான் - தற்போது அகதிகள் முகாம்களில் இருக்கும் ஆண் - பெண் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தருகிறாள்.
              போகோ ஹாராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட - கல்விக்காக ஏங்கும் சிறுமிகளில் ஒருத்தியான வடக்கு நைஜீரியாவின் அமினா... இன்னும் ஏராளமான சிறுமிகள் இருக்கிறார்கள். உங்கள் முன்னால் நிற்கும் இந்த மலாலா, ஒரு நபர் அல்ல... எனது குரல், ஒரு நபருடையதல்ல... நான் ஷாஜியா. நான் கைனட் ரியாஸ். நான் கைனட் சோம்ரோ. நான் மேஸான். நான் அமினா. நான், பள்ளிகளில் இருந்து துரத்தப்பட்ட 660 லட்சம் பெண் குழந்தைகளின் குரல். உலகெங்கிலும் நவீனமயத்தையும், வளர்ச்சியையும் பார்க்கிறோம். இருந்த போதிலும் அந்த நாடுகள் முழுவதும் இன்றும் மிகப்பழமையான பிரச்சனைகளான பசி, வறுமை, அநியாயம் மற்றும் மோதல்கள் ஏராளமாய் நிறைந்துள்ளது.
         முதலாம் உலகப்போர் நிறைவடைந்து நூறு ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது. ஆனால் இன்னும் அந்தப்போரின் பல லட்சக்கணக்கான உயிர்ப்பலியில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளாத நிலையே தொடர்கிறது. இங்கே இன்னும் ஏராளமான போர்களில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்கள் பறிக்கப்படுகின்றன. சிரியாவிலும், காஸாவிலும், இராக்கிலும் ஏராளமான குடும்பங்கள் அகதிகளாக மாற்றப்பட்டுள்ளன. வடக்கு நைஜீரியாவில் பெண்கள் பள்ளிக்கு செல்வதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் அப்பாவி மக்கள் குண்டுவெடிப்புகளில் பலியாவதை கண் முன்னே பார்க்கிறோம்.
            ஆப்பிரிக்காவில் ஏராளமான குழந்தைகள் வறுமையின் காரணமாக பள்ளிகளின் படிகளைக் கூட மிதிக்க முடியவில்லை. இந்தியா மற்றும் பாகிஸ்தானில் ஏராளமான குழந்தைகள் சமூக ஒடுக்குமுறைகளால் கல்விகற்கும் உரிமை மறுக்கப்பட்டவர்களாகவும் அல்லது குழந்தைத் தொழிலாளர்கள், குழந்தைத் திருமணங்களினால் பாதிக்கப்படுகின்றனர். என்னுடைய வயதுடைய மிகுந்த நம்பிக்கையும், திறமையும் வாய்ந்த என் தோழி டாக்டராக வேண்டும் என கனவு கண்டு கொண்டிருந்தாள். ஆனால் அவள் கனவு கனவாகவே மாறிப்போனது. 12 வயதில் அவளுக்கு கட்டாய திருமணம். 14வயதுள்ள குழந்தை 1 வயதுக் குழந்தைக்கு தாயாகிப் போனாள். எனக்குத் தெரியும் அவள் நிச்சயம் டாக்டராகி இருப்பாள். ஆனால் அவளால் இப்போது முடியாது.           ஏனென்றால் அவள் ஒரு பெண்.
           நீங்கள் அளித்துள்ள நோபல் விருதுத் தொகை என் இதயத்தில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தானில் பள்ளிகளை கட்டுவதற்கு உதவிடப் போகிறது. முக்கியமாக எனது தாயகமான ஸ்வாட் பள்ளத்தாக்கு எனது கிராமமான சங்லாவில். என்னுடைய ஊரில், பெண் குழந்தைகளுக்கான மேல்நிலைப்பள்ளி ஒன்று கூட இல்லை. எனவே என் நண்பர்கள் தங்களின் கனவுகளை நனவாக்கிக் கொள்வதற்கும், அவர்கள் கல்வியைப் பெறுவதற்கும் ஒரு வாய்ப்பாய் நான் ஒரு பள்ளியை உருவாக்கப்போகிறேன். நம்முடைய அரசியல் தலைவர்களுக்கு கல்வியின் அவசியத்தைப் பற்றிக் கூற வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் அது அவர்களுக்குத் தெரியும். எனவேதான் அவர்களது குழந்தைகளை நல்ல பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள். நாங்கள் உலகத் தலைவர்களிடம் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வலியுறுத்துகிறோம். வலிமையான நாடுகள் என்று சொல்லிக் கொண்டு போரை உருவாக்குவதில் முனைப்பாக இருப்பது போன்று ஏன் அமைதியை உருவாக்குவதில் முனைப்பு இல்லை? ஏன் துப்பாக்கிகளைக் கொடுப்பது எளிதாகவும், புத்தகங்களைத் தருவது கடினமாகவும் உள்ளது உங்களுக்கு..? ஏன் பீரங்கிகளை உருவாக்குவதை மிக எளிமையாகவும், பள்ளிக்கு கட்டடங்களை கட்டுவதை மிகுந்த சிரமமாகவும் உணருகிறீர்கள்?நாம் நிலவை அடைய முடிகிறது; ஏன் செவ்வாய்க்கிரகத்திலேயே விரைவில் வாழ முடியும் என்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் கல்வி தர முடியாதா? எனவே நாம் அனைவருக்குமான சமத்துவத்தையும், நீதியையும் மற்றும் அமைதியையும் பெற்றிட குழந்தைகளை இந்த உலகம் முழுவதும் போராட அழைக்கிறேன். இதுவே ஆண், பெண் குழந்தைகள் தாங்கள் பால்யங்களை தொழிற்சாலைகளில் தொலைத்தது கடைசியாய் இருக்கட்டும். இதுவே பெண் குழந்தைகள் கட்டாயப்படுத்தப்பட்டு குழந்தைத் திருமணங்கள் செய்தது கடைசியாய் இருக்கட்டும். இதுவே ஏதுமறியா அப்பாவிக் குழந்தைகள் போரில் இறந்தது கடைசியாய் இருக்கட்டும். இதுவே வகுப்பறைகள் யாருமின்றி தனித்துக் கிடந்தது கடைசியாய் இருக்கட்டும். இதுவே பெண்கல்வி பெறுவது உரிமையல்ல என்று கூறுவது கடைசியாய் இருக்கட்டும். இதுவே பள்ளிக்கு வெளியே குழந்தைகள் ஏக்கத்தோடு காத்திருப்பது கடைசியாய் இருக்கட்டும்.

(அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தான் சிறுமியும் பெண் கல்வி உரிமைப் போராளியுமான மலாலா யூசுப் ஜாய், நோபல் விருது விழாவில் ஆற்றிய உரையிலிருந்து)
தமிழாக்கம்  : எஸ். கார்த்திக், மதுரை புறநகர் மாவட்டத் தலைவர், 
                              இந்திய மாணவர் சங்கம்
நன்றி : தீக்கதிர்

கருத்துகள் இல்லை: