சனி, 19 ஏப்ரல், 2014

தில்லி கோட்டைக்குச் சென்று திமுகவும், அதிமுகவும் இதுவரை செய்தது தான் என்ன?



  கட்டுரையாளர் : தோழர். டி. கே. ரங்கராஜன், எம்.பி                
           தமிழகத்தில் ஆளுங்கட்சியான அதிமுகவும், எதிர்கட்சியான திமுகவும் நடத்தும் தேர்தல் பிரச்சாரத்தைக் கவனித்தால், நடப்பது நாடாளுமன்றத்தேர்தலா அல்லது சட்டமன்றத்தேர்தலா....? என்ற சந்தேகம் தான் வருகிறது. இரண்டு கட்சிகளும், பரஸ்பரம் சொத்துப்பட்டியலையும், ஊழல் பட்டியலையும் மக்கள் முன்னால் வைத்து, திகில் உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன. திமுகவைப் பொறுத்தவரை, காங்கிரஸ், பாஜகவை விட- வேறெந்த மாநிலக் கட்சியையும் விட, கூடுதலான காலம் மத்திய அமைச்சரவையில் இருந்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மூன்று தவணைகளாக 6 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இரண்டு தவணையாக 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது. இதில், இரண்டு கூட்டணியிலும் மாறி, மாறி திமுக மட்டும் 14 ஆண்டுகாலம் மத்திய அமைச்சரவையில், ''வலுவான- வளமான'' இலாகாக்களைப் பெற்று, ஆட்சியில் இருந்துள்ளது.
          அதிமுக, பாஜக கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டவுடன், “அண்ணன் எப்போது சாவான்; திண்ணை எப்போது காலியாகும்?” என்று காத்திருந்த திமுக, ஓடோடிச் சென்று, அந்த ஆட்சியில் ஒட்டிக் கொண்டது. திமுக இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது என்று மறைந்த காங்கிரஸ் தலைவர் சி.சுப்பிரமணியம் சொன்னதாக கலைஞர் தன்னுடைய நிலையை நியாயப்படுத்தினார். இக்கட்டான நிலை வரும்போதெல்லாம், இறந்துபோன தலைவர்களை மேற்கோள் காட்டுவது, கலைஞருக்கு வாடிக்கை. “இந்தியா ஒளிர்கிறது” என்று கூறிய பாஜக கூட்டணி ஆட்சி மங்கிப்போனது. உடனே அணி மாறிய திமுக, காங்கிரஸ் கூட்டணி அரசில் சேர்ந்தது. காங்கிரசின் “பி” டீமாகவே, திமுக இருந்தது. எல்லா பருவநிலைகளுக்கும் ஒத்துப்போகும் ஒரு கட்சி, இந்தியாவில் உண்டென்றால், அது திமுகதான். எங்கு சேர்ந்தாலும், அதற்கான வியாக்யானங்களை, விளக்கங்களைத் தருவதில் அவர்களை மிஞ்ச முடியாது. பதினான்கு ஆண்டுகாலம் மத்திய ஆட்சிப் பொறுப்பில் தொடர்ந்து பதவி வகித்த திமுக, தமிழகத்திற்கு செய்தது என்ன...? “வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது” என்று ஒரு காலத்தில் குரல் கொடுத்தவர்கள், டாடா, பிர்லா, அம்பானிகளின் சேவகர்களாக மாறிப் போனார்கள்.
             “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்“ என்றார் அண்ணா. இவர்களோ, அம்பானியின் சிரிப்பில் அண்ணாவையே கண்டார்கள். இவர்கள் அண்ணா கண்ட கனவை நிறைவேற்றவில்லை. மாறாக, அதிகாரத் தரகர் நீரா ராடியா கண்ட கனவையே நிறைவேற்றினார்கள். மத்திய ஆட்சி அதிகாரம் கையில் இருந்ததைப் பயன்படுத்தி, தமிழை மத்திய ஆட்சிமொழிகளில் ஒன்றாக ஆக்கினார்களா? நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழைக் கொண்டுவந்தார்களா? மாநிலத்தில் சுயாட்சி,மத்தியில் கூட்டாட்சி என்று முழக்கமிட்ட வர்கள்; மாநில சுயாட்சிக்காக ஒரு துரும்பையாவது கிள்ளிப் போட்டார்களா? ராஜமன்னார் குழு பரிந்துரைகளை நிறை வேற்றப் பாடுபட்டார்களா? எதுவுமில்லை. மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருந்து, இவர்கள் சாதித்தது, அலைவரிசைக் கற்றை ஊழல் மட்டுமே.டி.ஆர்.பாலு, கப்பல்துறை அமைச்சராக இருந்தபோதுதான் சேது சமுத்திரத் திட்டத் துவக்க விழா நடைபெற்றது. இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவோடு அந்த அரசு செயல்பட்டதால்தான், அது சாத்தியமானது. ஆனால், அந்த திட்டத்தை எதிர்த்து, சுப்பிரமணியசாமியால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்ட நிலையில், திட்டம் முடக்கப்பட்டது.
         பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்த அதிமுக, அதற்குச் சொன்ன காரணங்களில் ஒன்று, ‘சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வாஜ்பாய் அரசு மறுக்கிறது’ என்பதாகும். ஆனால், அதே அதிமுக அரசு இன்றைக்கு உச்சநீதிமன்றத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று மனு போட்டிருப்பது விசித்திரமானதாகும். சேதுசமுத்திரத் திட்டம் முடக்கப்பட்டதை எதிர்த்து, திமுகவும் அங்கம் வகித்த மத்திய அரசு, நீதிமன்றத்தில் முறையாக வாதாடியதா? வாய்தா வாங்கி, அந்த வழக்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டதற்கும், திட்டம் முடக்கப்பட்டதற்கும், திமுகவுக்கும் பொறுப்பு உண்டு. இந்த திட்டம் முடங்கியதில், அதிமுகவுக்கு மட்டுமல்ல, திமுக வுக்கும் பங்கு உண்டு. 1983-ல் ‘தமிழ் ஈழத்தை ஏற்காதவர்கள் தமிழர்களே அல்ல’; என்று கலைஞர் பேசினார். ஆனால், திமுக அங்கம் வகித்த மத்திய ஆட்சி நடந்தபோதுதான், இலங்கையில் இறுதிக் கட்டப் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.
        அதைத் தடுத்து நிறுத்த, தனது அதிகாரத்தை, அரசியல் செல்வாக்கை திமுக பயன்படுத்தவில்லை. இந்த குற்றச்சாட்டுக்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும். அதன்பிறகு டி.ஆர்.பாலு தலைமையிலான குழு, இலங்கைக்குச் சென்று ராஜபக்சேவுடன் அளவளாவிவிட்டு வந்தது. இது என்ன தமிழர் பாசம்? என்று தமிழக மக்களுக்குப் புரியவில்லை. மத்திய அரசில் நீண்டகாலம் இருந்து விட்டு, “எங்கள் சாதனை இது” என்று எதனையும் உருப்படியாக சொல்ல முடியாத தால்தான், தேர்தல் களத்தில் அதிமுக-வை மட்டும் திமுக விமர்சிக்கிறது. கலைஞர் மட்டுமல்ல, அவருடைய மகன் - சகோதரர் மு.க.ஸ்டாலினும் இதைத்தான் செய்து வருகிறார். தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல.

நாளை நமதே; நாற்பதும் நமதே

          நாளை நமதே; நாற்பதும் நமதே என்று அதிமுகவினர் தேர்தலுக்கு முன்பிருந்தே உற்சாகமாக கூறி வந்தனர். நாடாளுமன்றத்தை வரைந்து, அதன் முன்பு, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நிற்பது போல, டிஜிட்டல் பேனர்களை வைத்து அகமகிழ்ந்தனர். இடதுசாரிக் கட்சிகளுடன் தான் எங்களது கூட்டணி என்று கூறிய அதிமுக, கடைசியில் சந்தோஷமாக பிரியலாம் என்று சென்றது. இந்த தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள், சந்தோஷமாக மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகின்றன.
        ஆனால், அதிமுகவின் சந்தோஷம்தான் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. முதல்வர் ஜெயலலிதா, ஹெலிகாப்டரில் பறந்து பறந்து சென்று சாமானிய மக்களைச் சந்திக்கிறார். ஒவ்வொரு கூட்டத்திலும், திமுகவையும், காங்கிரசையும் கடுமையாக விமர்சிக்கிறார். மோடியையும், பாஜகவின் மதவெறியையும் விமர்சிக்க மறுப்பது ஏன்..? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து கேள்வி எழுப்பியது. மோடி வேறு மாநில முதல்வர்; அவரை ஏன் விமர்சிக்க வேண்டும்? என்று அவர்களது ஏடான ‘நமது எம்ஜிஆர்’ பெட்டிச் செய்தியில் கெட்டிக்காரத்தனம் என நினைத்துக் கொண்டு பதில் எழுதியது. இந்த நிலையில் கரூர் கூட்டத்தில் பங்கேற்க, முதல்வர் ஹெலிகாப்டரில் பறந்து கொண்டிருந்த போது, நடிகர் ரஜினிகாந்த்தை மோடி சந்திக்க இருப்பதாக தகவல் வந்தது.
           உடனே பூமியில் காய்ந்து கிடந்த, காவிரி, அமராவதி நதிகளும், காவிரி பிரச்சனையில் பாஜக செய்த துரோகமும், முதல்வருக்கு நினைவுக்கு வந்துள்ளது. காவிரிப் பிரச்சனையில் காங்கிரசும், பாஜகவும் துரோகம் இழைத்ததாகப் பேசினார் முதல்வர். அடுத்து நடிகர் விஜய்யை, மோடி சந்தித்தவுடன், குஜராத்தை விட தமிழகம் பல்வேறு துறைகளில் முன்னேறியுள்ளது என்று பட்டியலிடுகிறார் முதல்வர். இப்போது கூட, குஜராத்தில் இஸ்லாமிய மக்களை மோடி நரவேட்டை ஆடியது குறித்தோ, பாஜக தேர்தல் அறிக்கையில் காணப்படும் மதவெறி குறித்தோ எதுவும் கூறவில்லை. இன்னும் சொல்லப்போனால், தன்னுடைய கட்சியின் தேர்தல் அறிக்கையில், கூறியுள்ள விஷயங்களைக் கூட அதிமுகவினரால் எடுத்துச் சொல்ல முடியவில்லை.

இருவரும் பொறுப்பு

           தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள்தான் மாறி மாறிஆட்சி செய்து வருகின்றன. ஏராளமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஆனாலும் வேலைவாய்ப்பு பெருகவில்லை. இந்த ஆண்டு ஜனவரி மாத கணக்குப்படி தமிழ்நாட்டில் 90லட்சம் பேர் வேலையின்றி காத்திருக்கின்றனர்.  இவர்களில் 45லட்சம் பேர் பெண்கள். இதில் தான் பாலின சமத்துவம் ஏற்பட்டுள்ளது. 3லட்சத்திற்கும் மேற்பட்ட பொறியியல் பட்டதாரிகள் வேலையில்லாமல் உள்ளனர். வளாகத் தேர்வில் தேர்வு பெறும் பொறியியல் பட்டதாரிகள் தவிர மற்றவர்களுக்கு நல்ல வேலைகிடைப்பதில்லை. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். சிறு, குறு தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயத்துறை நாளுக்கு நாள் நலிந்துவருகிறது.
        மின்வெட்டு தமிழகத்தை மிரட்டுகிறது. திமுக -அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஒன்றையொன்று குற்றம்சாட்டுகின்றன. ஆனால் இரண்டு கட்சிகளுமே இந்த நிலைமைக்கு காரணம். இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு இரு கட்சிகளுக்கும் உண்டு. ஆனால் இந்த கட்சிகள் தேர்தலுக்குப் பிறகு, என்ன செய்யும்? என்று யாரும் இப்போது கூற முடியாது. அனைத்து வாய்ப்புக் களுக்குமான வாசல்களை இவர்கள் திறந்தே வைத்துள்ளனர்.
        ஆனால், அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கு இடம் தராமல், மத்தியில் அமைகிற அரசு மதச்சார்பற்ற- மாற்று அரசாக அமைய வேண்டும் என்று கம்பீரமாக களத்தில் நிற்பவர்கள் இடதுசாரி வேட்பாளர்களே... அவர்களை ஆதரிப்பதன் மூலம்தான் தேச நலனை மட்டுமல்ல; தமிழக நலனையும் பாதுகாக்க முடியும்.
 

1 கருத்து:

vijayan சொன்னது…

T .P .சந்திரசேகரன் கல்லறையிலிருந்து சிரிக்கும் ஓசை கேட்கிறதா தோழரே.