ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

தமிழக வாக்காளப் பெருமக்களே... இடதுசாரிகளுக்கு வாக்களிப்பீர்...! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்


 தமிழக வாக்காளப்பெருமக்களுக்கு, வணக்கம்....
         
         மத்தியில் ஒரு புதிய அரசை தேர்வு செய்வதற்கு 16-ஆவது மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேசத்தை பாதுகாத்திடவும், இதுகாறும் மத்திய அரசு கடைப்பிடித்து வரும் மக்கள் விரோத, தேச விரோத பொருளாதாரக் கொள்கைகளுக்கு முடிவுகட்டவும் - பல மதங்கள், மொழிகள், இனங்களைக் கொண்ட இந்தியத் திருநாட்டில் எந்த வெறிக்கும் இடம் தராமல் மக்கள் ஒற்றுமையை லட்சியமாக கொண்ட ஒரு மாற்றுப்பாதைக்கான அரசினை மத்தியில் அமைப்பதற்கான நல்ல வாய்ப்பே இந்த தேர்தல்.        
        மத்தியில் மேற்கண்டவாறு ஒரு அரசை அமைத்திட ஏதுவாக 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழ்நாடு, புதுவை மாநிலங்களில் தேர்ந்தெடுக்கும் பொறுப்பும், கடமையும் வாக்காளர்கள் முன் உள்ளது. நமது வாக்குகள் விற்பனைக்கு அல்ல என்று உறுதியுடன் குரல் கொடுக்க வேண்டும். அதே நேரத்தில், நமது வாக்கு, ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சி முறையைப் பாதுகாக்கக் கூடியதாகவும், உயர்மட்ட ஊழல் பேர்வழிகளை புறந்தள்ளக் கூடியதாகவும், இந்தியாவின் ஒருமைப்பாட்டையும், மக்கள் ஒற்றுமையையும் உயர்த்திப் பிடிப்பதாகவும் அமைய வேண்டும்.
             தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வரும் திராவிடக் கட்சிகள் மத்திய அரசு கடைப்பிடித்து வரும் உலகமய தாராளமய பொருளாதாரக் கொள்கைகளையே தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றன. மேலும் இக்கட்சிகளின் கொள்கைகளால் தமிழ்நாட்டில் தொழில், விவசாயம் உள்ளிட்ட வளர்ச்சி விகிதம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டவில்லை. தமிழக பொருளாதாரம் தேக்க நிலையில் உள்ளது என்பதை தமிழக அரசின் 2014-2015 நிதிநிலை அறிக்கையே கூறுகிறது. மின்வெட்டால் சிறு தொழில்கள் மற்றும் பெரும் தொழிற்சாலைகள் கடும் பாதிப்படைந்து வருகின்றன. என்ஜினியரிங், விசைத்தறி உள்ளிட்ட பல பத்தாயிரம் சிறு தொழில் நிறுவனங்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியும், மூடப்பட்டும் உள்ளன. இதில் பணிபுரியும் பல லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து வருமானமின்றி தவித்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் திமுக, அதிமுக அரசுகள் மின் உற்பத்திக்கு போதிய திட்டங்களை நிறைவேற்ற தவறியதன் விளைவாக தமிழகம் இருண்டு கிடக்கிறது. தாராளமய, தனியார்மய கொள்கைகளின் அறுவடையே தமிழக மின்பற்றாக்குறையும் தொழில் நெருக்கடியும்.பன்னாட்டு மூலதனத்தை ஈர்ப்பது என்ற பெயரால் அவைகளுக்கு தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. தொழில் வளர்ச்சி என்ற பெயரில் விதிகளுக்கு முரணாக விளை நிலங்கள் விவசாயிகள் ஒப்புதலின்றி கையகப்படுத்தப்படுகின்றன. தொழிற்சாலைகளுக்கு நிலங்களை கையகப்படுத்துவதற்கு ஏதுவாக மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கும் சட்டத் திருத்தத்தை அதிமுக அரசு கடந்த சட்டமன்றத்தில் எங்களது கட்சியின் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றியுள்ளது.
             இதனால் வரைமுறையின்றி விவசாய நிலங்கள் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் ஆபத்து அதிகரித்துள்ளது. இதற்கென ஒரு நிலவங்கி உருவாக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்றைக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரமாக திகழும் விவசாயம் தேக்கமடைந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாய உற்பத்தி தொடர்ந்து தேக்கமாக உள்ளது. இடுபொருள் விலைகள் கிடுகிடுவென ஏறிவரும் நிலையில், வேளாண் விளை பொருள் விலைகள் உயரவில்லை. அரசு கொள்முதல் ஏற்பாடுகளும் மிகக்குறைவே.இரண்டாண்டுகளாக நீடித்து வரும் வறட்சி பெரும் பாதிப்புகளை உருவாக்கியுள்ளது. விவசாயிகளின் கடும் போராட்டத்தால் கடந்தாண்டு அதிமுக அரசு ஓரளவு வறட்சி நிவாரணம் வழங்கியது. அதுவும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. மாநில அரசு கோரியதில் 30ல் ஒரு பங்கு கூட மத்திய அரசு நிவாரணத் தொகை வழங்க மறுத்து விட்டது. தொடர்ந்து வரும் விவசாய நெருக்கடிகளால் சுமார் 9 லட்சம் விவசாயிகள் நிலங்களை இழந்து நிலமற்றவர்கள் பட்டாளத்தில் சேர்ந்துள்ளதை மக்கள் தொகை கணக்கெடுப்பு சுட்டிக்காட்டியுள்ளது. வாழ்விழந்த கிராமப்புற மக்கள் வேலை தேடி நகர்ப்புறங்களுக்கு செல்வது அதிகரித்துள்ளது. நகர்ப்புற, கிராமப்புற வேலையின்மை அதிகரித்துள்ளது. சுமார் 91 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் வேலை கோரி பதிவு செய்துள்ளார்கள். தனியார் நிறுவனங்களில் நிரந்தர வேலைமுறை ஒழிக்கப்பட்டு ஒப்பந்த மற்றும் தற்காலிக முறையின் கீழ் வேலைகள் வழங்கப்படுகின்றன.
            இவர்களுக்கு சட்டப்படியான ஊதியம் மற்றும் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. தொழிற்சங்கம் அமைக்கும் உரிமைக்கும் அனுமதி மறுக்கப்பட்டு கொத்தடிமைகளாக நீடிக்கும் நிலைமை உள்ளது.வெளிமாநிலங்களிலிருந்து வரவழைக்கப்படும் தொழிலாளர்கள் மிருகத்தனமாக சுரண்டப்படுகின்றனர். அடிப்படை வசதிகள் ஏதுமில்லாமல் தகர கொட்டைகளில் தங்க வைக்கப்பட்டு குறைந்தபட்ச ஊதியம் ஏதுமின்றி கொத்தடிமைகளை விட மோசமான சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். விபத்துகளில் சிக்கும் தொழிலாளர்கள் உயிரிழப்புக்கு கூட உரிய நிவாரணம் வழங்கப்படுவதில்லை. அனைத்து அரசு நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள், மருத்துவமனைகள் அனைத்து துறைகளிலும் ஒப்பந்தம் அல்லது தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்துவதே அரசின் சாதனையாக தம்பட்டம் அடிக்கப்படுகிறது. காவல்துறையிலும் இளைஞர்படை என்ற பெயரில் தொகுப்பூதியத்தில் பணியமர்த்தும் பணி துவங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திமுக ஆட்சியின் போது ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட 13000 மக்கள் நலப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு நடுத் தெருவில் நிறுத்தப்பட்டுள்ளார்கள்.
            பணியமர்த்தப்படும் தொகுப்பூதிய பணியாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே உள்ளது.ஊழல் முறைகேடுகள் அரசின் அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. உயர்மட்ட ஊழல் தொடர்பாக நடைபெற்று வரும் வழக்குகளே சான்றாக அமைந்துள்ளன.கனிமவளக் கொள்ளை, கிரானைட் கொள்ளை, மணல் கொள்ளை, தாதுமணல் கொள்ளைகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் கோடி ரூபாய்கள் அரசுக்கு இழப்பு ஏற்படுகின்றன. அரசின் உயர்மட்டத்தில் உள்ளவர்களின் ஆதரவின்றி இக்கொள்ளைகள் நடைபெற முடியாது என்பது அறிந்ததே. தேசத்தை நாசமாக்கும் காங்கிரஸ் - பாரதிய ஜனதா கட்சிகளோடு கூட்டணி சேர்ந்து ஆட்சியில் பங்கேற்றிட திமுக - அதிமுக கட்சிகள் தயங்கிடவில்லை.இந்தப் பின்னணியில், தமிழக மக்களின் நல்வாழ்வை மையமான நோக்கமாகக் கொண்டு, கீழ்வரும் கோரிக்கைகளுக்காக மார்க்சிஸ்ட் கட்சி மக்களவையில் வலுவாகக் குரல் கொடுக்கும். மாநில அளவிலும், மக்களைத் திரட்டிப் போராடும்.
                        
மேலும்....

           # இலங்கை மண்ணில் தமிழ் மக்கள் அனுபவித்து வரும் வேதனைகள் சொல்லிமாளாது. உள்நாட்டு யுத்தம் முடிந்து 4 ஆண்டுகளுக்குப் பின்னரும் ராஜபக்சே அரசு தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாத்திட தவறி வருகிறது. இன்று இம்மக்களின் மறுவாழ்வு, மீள்குடியமர்த்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. தமிழ் மக்கள் வாழும் பகுதியில் இராணுவம் வாபஸ் பெறப்படவில்லை. மேலும், காலம் கடத்தாமல் தமிழ் மக்கள் மறுவாழ்வு, மீள்குடியமர்த்தல், இப்பகுதிகளிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றல், அதிக அதிகாரங்களைக் கொண்ட வடக்கு-கிழக்கு பகுதிகளை இணைத்து தமிழ் மாநிலம் அமைத்தல், நிலம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கிட வேண்டும். இங்கு நடைபெற்ற ராணுவ அத்துமீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச நீதிபதிகளையும் உள்ளடக்கிய சுதந்திரமான, நேர்மையான விசாரணை நடத்திட வேண்டும். இவ்விசாரணை மூலம் குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கிட வேண்டும். இதற்கு இலங்கை அரசு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.
        # தென்மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு இன்றியமையா தேவையாக உள்ள சேது சமுத்திரத் திட்டத்தை துரிதமாக நிறைவேற்ற வேண்டும். இத்திட்டத்திற்கு மதச்சாயம் பூசி இதை கிடப்பிலேயே போடும் முயற்சியை எதிர்த்து வலுவான குரல் எழுப்பிட வேண்டும். உச்சநீதிமன்றத்தின் முன் உள்ள வழக்கினை உரிய ஆவணங்களை சமர்ப்பித்து வாதாடி திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முனைந்திட வேண்டும்.
      # தமிழகத்தில் சென்னை - குமரி, சென்னை - திருச்சி (மெயின் லைன்) உள்ளிட்ட அனைத்து இருப்பு பாதைகளையும் இருவழிப் பாதைகளாக மாற்றிட வேண்டும். மேலும், இப்பாதைகளை மின்மயப்படுத்தும் நடவடிக்கைக்கு கூடுதல் நிதி ஒதுக்கிட வேண்டும்.4சென்னையில் உச்சநீதிமன்றக் கிளையினை துவக்கிட வேண்டும்.
          # சென்னை - மதுரை உயர்நீதிமன்றங்களில் தமிழை நீதிமன்ற மொழியாக நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.4 தமிழ் உள்ளிட்ட தேசிய மொழிகளை மத்திய அரசின் நிர்வாக மொழியாக அங்கீகரிக்க வேண்டும்.
        # காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேம்பாட்டு ஆணையத்தையும் காவிரி நதி நீர் கண்காணிப்புக் குழுவையும் தாமதமின்றி மத்திய அரசு அமைத்திட வேண்டும். இறுதித் தீர்ப்பின் படி ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதை மேற்கண்ட ஆணையம் முறையாக கண்காணித்து நிறைவேற்ற வேண்டும்.
        # முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டுமென்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள அரசு நிறைவேற்ற வேண்டும். இதனை மத்திய அரசு உறுதி செய்திட வேண்டும். மேலும், இப்பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு முன் உள்ள வழக்கினை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
       # கிருஷ்ணா - கோதாவரி, பாலாறு - வைகை நதியினை இணைக்கும் திட்டத் திற்கு ஆய்வுப் பணியினை மேற்கொள்ள வேண்டும். காவிரியின் உபரி நீரை திருப்பி புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களை வளப்படுத்துவதற்கான காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்தை கூடுதல் நிதி ஒதுக்கி விரைவாக நிறைவேற்றிட வேண்டும். மேலும், உள்நாட்டிலுள்ள நதிகளை இணைத்து காவிரி பாசன மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்ற உரிய ஆய்வுகளை உடனடியாக மேற்கொள்ள மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கி நிறைவேற்ற வேண்டும்.    
         # தமிழகத்தில் வேகமாக குறைந்து வரும் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி நீர்வளத்தை பாதுகாத்திட சிறப்பு நீர் செறிவூட்டும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். வெள்ள காலங்களில் அதிகமான நீர் கடலில் கலந்து வீணாவதை தடுத்திட புதிய நீர்த்தேக்கங்களையும், காவிரியிலும், கொள்ளிடத்திலும் புதிய கதவணைகளையும் அமைத்திட வேண்டும்.
      # தமிழகத்தில் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை அழிக்கும் நோக்கோடு அமையவுள்ள மீத்தேன் எரிவாயு திட்டத்தினை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். இதற்கென மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
   # மேற்கு மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களையும், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் சாகுபடி நிலங்களையும், விவசாயிகளையும் பாதிப்புக்குள்ளாக்கும் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தினை விவசாய நிலங்கள் வழியாக அமைத்திடும் நடவடிக்கையினை நிரந்தரமாக நிறுத்திட வேண்டும். இத்திட்டத்தினை விவசாயத்துக்கு துளியும் பாதிப்பில்லாத வகையில் தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக அமைத்திடலாம்.
        # மதுரை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொழிற்சாலைகள் மற்றும் சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை கட்டாயப்படுத்தி கையகப்படுத்துவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளை கைவிட வேண்டும்.
          # மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு என்ற பெயரில் தானடித்த மூப்பாக மத்திய அரசு செயல்படுத்த முயன்றுள்ள கஸ்தூரி ரங்கன் அறிக்கையை நிராகரிக்க வேண்டும். இது தொடர்பாக நிபுணர்கள், விவசாய பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகளை கொண்ட உயர்மட்டக்குழு அமைத்து மக்கள் நலன் பாதிக்காத வகையில் ஆய்வினை மேற்கொள்ள வேண்டும்.
    # மத்திய அரசின் மேம்படுத்தப்பட்ட பயிர் காப்பீட்டுத் திட்டத்தை ரத்து செய்து விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையிலான காப்பீட்டுத் திட்டத்தினை உருவாக்கிடவேண்டும்.
        # மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துவது மற்றும் நியாயமான நிவாரணம், மறுவாழ்வு, குடியமர்த்தல் சட்டத்திற்கான தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
      # மாநில சுயாட்சி, மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் போன்ற கோரிக்கை வலுவாக எழுகிற போது மத்திய அரசு படிப்படியாக மாநில அதிகாரங்களை தட்டிப்பறித்துக் கொண்டுள்ளது. பொதுப் பட்டியலிலிருந்த பல அம்சங்களை மத்திய அரசு கையகப்படுத்தி வருகிறது. விவசாயம், கல்வி உள்ளிட்ட பல துறைகளில் மத்திய அரசின் முடிவே இறுதி முடிவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு 13 ஆவது நிதிக்குழு சிபாரிசின் படி வழங்க வேண்டிய நிதிப்பங்கினை அளிக்க மத்திய அரசு மறுத்து வருகிறது. அதிகாரங்களை மத்திய அரசிடம் குவிப்பதை எதிர்த்து, மாநிலங்கள் கூடுதல் அதிகாரம் பெறவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) போராடும். மத்தியில் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத மாற்று அரசு அமைவதும் இதற்கு உதவும்.
     # அதேபோல் உள்ளாட்சி அமைப்புகள் உரிய அதிகாரத்துடனும், ஜனநாயகப் பூர்வமாகவும் செயல்பட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) போராடும்.
          # நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள லோக்பால் சட்டத்தை மேலும் வலுப்படுத்த திருத்தங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்மொழியும். இதேபோன்ற சட்டத்தை தமிழகத்திலும் நிறைவேற்றிட போராடும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு 
''சுத்தியல்-அரிவாள்-நட்சத்திரம்'' சின்னத்திலும்....
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  வேட்பாளர்களுக்கு 
''கதிர் அரிவாள்'' சின்னத்திலும் ....
வாக்களிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்....!

கருத்துகள் இல்லை: