ஞாயிறு, 5 ஜனவரி, 2014

இந்தியாவில் தேர்தல் விதிமுறைகளை மீறாதவர்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் தான்...!

          
        அண்மையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில்  ''நேர்படப் பேசு'' என்ற நிகழ்ச்சியில் ''தேர்தலில் பணப்புழக்கம் அதிகரிக்க காரணம் என்ன?'' என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது.
        அந்த விவாதத்தில் பல கருத்துகள் வந்தன. அவைகள்...

         # இன்றைக்கு அரசியல் கட்சிகள்  வாக்காளர்களுக்கு வேஷ்டி, சேலை, பணம் கொடுப்பது மட்டுமலாமல், சாராயம், அதுக்கு பிரியாணி என பலவிதாமாக கொடுக்கிறார்கள். தேர்தல் என்பது பணம் விளையாடும் அரசியல் களமாக மாறிவிட்டது. பணம் மட்டுமே பிரதானமாக மாறிவிட்டது.
         # அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்கலாம் என்ற எதிர்ப்பார்ப்பும், சொகுசான வாழ்க்கை வாழலாம் என்ற குறுகிய நோக்கமும் தான் இன்றைக்கு அரசியல்வாதிகளிடம் மேலோங்கி இருக்கிறது.
     # மேலிருந்து கீழ் வரை அமைச்சர் முதல் மக்கள் வரை இலஞ்சம் என்பது தேசியமயமாகிவிட்டது. இலஞ்சம் ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது.
         # படித்தவர்கள், வசதியானவர்கள் தேர்தலில் பங்கெடுத்துக் கொள்வதில்லை. ஓட்டுப் போடுவதுமில்லை.
   # கார்ப்போரேட் முதலாளிகளும், இந்திய பெருமுதலாளிகளும் இந்திய பாராளுமன்றத்தையும், மாநில சட்டமன்றங்களையும் தங்கள் கைக்குள் போட்டுக்கொள்ள தங்கள் பணத்தை செலவு செய்து ஏராளமான எம்.பி-களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் வெற்றிபெறச் செய்கிறார்கள். இந்திய ஜனநாயகமும், அரசியலும் கேலிக்கூத்தாகிவிட்டது.
           #  காமராஜர், தோழர் ஜீவா போன்ற தலைவர்கள் தேர்தலை சந்தித்த அன்றைய அரசியல் நாகரீகம் என்பது இப்போது இல்லை.
           #  தேர்தலில் பணம் விளையாடுவதை தடுத்து, நேர்மையான முறையில், நியாமான முறையில் தேர்தலை நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் என்ன செய்யப்போகிறது....?
            போன்ற கருத்துகள் விவாதத்தில் முக்கியமாக இடம்பெற்றது. அந்த விவாதத்தில் பங்கேற்ற ஓய்வுபெற்ற தலைமை தேர்தல் ஆணையர் திரு.என்.கோபால்சாமி விவாதத்தில் வந்த இந்தக் கருத்துகளை எல்லாம் உற்றுநோக்கி தன்னுடைய மனதிலிருந்த கருத்துகளை வெளிப்படையாக கூறுகையில்,
            இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு  காலக்கட்டத்திலும் தேர்தலை நேர்மையான முறையிலும்,  நியாயமான முறையிலும் நடத்திட ஒழுங்குமுறை விதிகளை அமல்படுத்தி தான் வருகிறது. அதே சமயம் தேர்தல் நடைமுறைகளையும், விதிமுறைகளையும் முழுமையாக அமல்படுத்த முதலில் ஆளும் கட்சியும், மற்ற அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்திற்கு உதவி செய்யவேண்டும்.
             ஆனால் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொள்ளும் போது மட்டும் சரியென்று தலையை ஆட்டிவிட்டு, தேர்தல் நேரத்தில் ஒத்துழைப்பு தருவதில்லை. விதிமுறைகளை மீறுகிறார்கள். இந்த விஷயத்தில் மக்களும் விழிப்புணர்வுடன் இருப்பதில்லை. தேர்தல் விதிமுறை மீறல்களை  மக்களே தேர்தல் களத்திற்கு வந்து தடுத்தால் தான் அரசியல் கட்சிகள் தவறு செய்வதையும் தடுக்க முடியும். ஓட்டுக்கு பணம் மற்றும் இலவசங்களை கொடுப்பதையும் தடுக்கமுடியும்.
             எனக்கு தெரிந்தவரை அகில இந்திய கட்சிகளில், இந்திய அளவில் தேர்தல் விதிமுறைகளை மீறாதவர்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள்  தான். கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ளவர்கள் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நேர்மையானவர்களாக உள்ளார்கள்.
 கம்யூனிஸ்ட் கட்சியில் குடும்ப அரசியலுக்கு இடமில்லை. உதாரணத்திற்கு உத்திரப்பிரதேச  மாநில சட்டமன்ற தேர்தல் நடக்கும் போது ஒரு கம்யூனிஸ்ட் வேட்பாளர் தொகுதியில் தேர்தல் விதிகளையும், பொருளாதார நிலைமைகளையும் நானே நேரில் பார்த்து வியந்து போனேன்.
                   இன்றைக்கு டில்லியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் இன்றைய அரசியல் சூழல் கெட்டு விட்டதாலும், கம்யூனிஸ்ட் கட்சியின் நடைமுறையை ஆம் ஆத்மி என்ற பெயரில் நடைமுறைப்படுத்தியதாலும் தான் கெஜ்ரிவாலால் தேர்தலில் வெற்றிபெற முடிந்தது.
            இப்படியாக முன்னாள் தேர்தல் உயர் அதிகாரியே வெளிப்படையாக கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களின் நேர்மையைப் பற்றி வெளிப்படையாக கூறியதை மக்கள் மனதில் கொள்ளவேண்டும்.  

கருத்துகள் இல்லை: