செவ்வாய், 14 ஜனவரி, 2014

உழவர்களை இனி எங்கே எப்போது காண்போம்...?

உழவர்களே...
நீங்கள் எங்கே எங்கே 
தேடுகிறேன்...
உழவுக்கும் தொழிலுக்கும் 
வந்தனை செய்வோம் 
என்றான் பாரதி.
ஆனால் இன்று
உழவு தொழில் 
எங்கே போனது...?
உண்மையான 
இராணுவம் என்பது 
கிராமத்திலிருக்கும் 
விவசாயிகளும் 
தொழிற்சாலைகளில் 
வேலை செய்யும் 
தொழிலாளிகளும் தான் 
என்றான் பகத்சிங்.
ஆனால் இன்று 
விவசாயத் தொழிலாளர்கள் 
எங்கே போனார்கள்...?
தேடுகிறேன் 
எங்கே எங்கே 
என்று தேடுகிறேன்.
மக்கள் தொகைக் 
கணக்கெடுப்பிலும்
கிராமப்புறத்து 
விவசாயிகளை காணவில்லை. 
கேடுகெட்ட 
மத்திய அரசின் 
தாராளமயக் கொள்கையினால் 
இருபது ஆண்டுகளில் 
தற்கொலையில்  
மாண்டு போனவர்கள் 
மூன்றரை இலட்சமாம்.
ஏனென்று கேட்டால் 
கடன் தொல்லையாம். 
விவசாயிகள் 
என்ற பெயரில் 
''போலி விவசாயிகள்''
மூன்று பேர் 
அம்பானி சகோதரர்களும், 
அமிதாப்பச்சனும்
வங்கியில் 
கோடிக்கணக்கில் 
விவசாயக் கடன் வாங்கினார்களே 
இவர்கள் 
தங்கள் உயிரை 
மாய்த்துக் கொள்ளவில்லை.
கோடி கோடியாய் 
கடன் வாங்கிய 
மல்லையாவும் 
மாண்டுபொகவில்லை.
சில ஆயிரம் மட்டும் 
கடனாய் வாங்கிய 
சிறு விவசாயிகள் 
தன்மானம் காக்க 
மாண்டுபோயினர்..!
எஞ்சிய விவசாயிகளும் 
உழவைக் கை விட்டு 
மாற்று வேலை தேடி
நகரம் நோக்கி 
குடிபெயர்ந்தனர்.
இங்கே வந்தவர்கள் 
மட்டுமென்ன 
விவசாயமா செய்கிறார்கள்....?
நெல்மணியை அள்ளித்தந்த
என்னருமை விவசாயிகள்
எங்கள் நகரச் சாலைகளில்  
இரவு நேரத்தில் 
குப்பைகளை அள்ளும் 
துப்புரவு பணியை அல்லவா 
செய்கிறார்கள்...!
என்ன கொடுமை இது
நிலத்தில் உழுதவர்கள் 
இன்றோ 
சாலையில் அல்லவா 
உழலுகிறார்கள்...!
அதனால் தான் 
கிராமத்தில்  இன்று 
விவசாயிகளை காணவில்லை....!
உயிர்த்துடிப்பாய் 
இருந்த பசுமையான 
விளைநிலமும் காணவில்லை....!
உயிராய் ஓடிக்கொண்டிருந்த 
ஆறுகளையும் காணவில்லை...!
உழவுக்கும் உழவனுக்கும் 
துணை நின்ற 
மாடுகளையும் காணவில்லை...!
இது தான் இன்றைய 
பரிதாப இந்திய கிராமம்...!
ஆண்டுக்கொரு முறை 
உழவர்களை நினைவுப்படுத்தும் 
உழவர் திருநாளில்
நான் மனம் ஏங்கித் 
தவிக்கிறேன்....!
என் உயிர் காக்கும் 
உழவர்களை 
இனி எங்கே 
எப்போது காண்பேன்....?   

1 கருத்து:

அ. பாண்டியன் சொன்னது…

வணக்கம் சகோதரர்
தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..