வெள்ளி, 17 ஜனவரி, 2014

தேசத்தின் நம்பிக்கையாய் எல். ஐ. சி....!

       
           இந்திய இன்சூரன்ஸ் வானின் வெளிச்சக்கீற்று எல்ஐசி என்ற மாபெரும் பொதுத்துறை உதயமாவதற்கு வித்திட்டநாள் - 19-1-1959 இரவு 8.30மணிக்கு அன்றைய நிதியமைச்சர் சி.டி.தேஷ்முக் இன்சூரன்ஸ் துறை தேசியமயமாக்கப்பட்ட அவசரச் சட்டம் வெளியிடப்பட்டதாக வானொலி மூலம் அறிவித்தார். அன்று இரவே 245 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் சொத்துக்களையும், வரவு-செலவு கையிருப்புகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது மைய அரசு.

தேசியமாக்கலின் பின்னணி

          நீண்டகால சேமிப்புகளாக பெருமளவிலான நிதியைத் திரட்டும் திறன்மிகுந்த இன்சூரன்ஸ் துறை அன்று தனியார்களின் வேட்டைக்காடாகவே மாறியிருந்தது. அன்றைய பெரும் முதலாளிகளான டாடா, பிர்லா, சிங்கானியா போன்றவர்கள் தங்களின் தொழிலுக்கு நிதி திரட்டும் தேவைகளுக்காகவே இன்சூரன்ஸ் நிறுவனங்களை நடத்தினார்கள். இவர்களின் பல நிறுவனங்களில் முறையான வரவு-செலவு கணக்குகள் இல்லை. முதிர்வு உரிமம்,  இறப்பு உரிமம் போன்றவற்றில் பெரும் மோசடிகளை செய்து மக்களின் சேமிப்புகளை விழுங்கி ஏப்பமிட்டனர். 
             அர்த்தசாஸ்திரத்தில் 42 வகையான மோசடிகளை வகைப்படுத்தியுள்ளார் சாணக்கியர். அவற்றை அப்படியே அமல்படுத்தி தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மக்களின் சேமிப்பை கொள்ளையடித்ததாக வர்ணித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் பெரோஸ்காந்தி. இடையே குறுக்கிட்ட நிதியமைச்சர் தேஷ்முக் “சாணக்கியரே சொல்லாத கண்டுபிடிக்காத மோசடிகளையும் செயல்படுத்தி சாணக்கியரையும் விஞ்சியவர்கள் இவர்கள்” என்றார். அன்று நாடாளுமன்றத்தில் நடந்த இந்த விவாதங்களிலிருந்தே அன்றைய இந்திய இன்சூரன்ஸ் சந்தை எவ்வளவு ஊழல் மிகுந்திருந்தது என்பதை நம்மால் எளிதில் விளங்கிக் கொள்ள முடியும். இவர்களிடம் பணிபுரிந்த ஊழியர்களின் பணிநிலைமையும் மிகவும் மோசமாகவே இருந்தது. சரியான சம்பளமின்றி. நேரம் காலம் பாராமல் உழைக்க வேண்டிய சூழல் என எல்லாமுமாக சேர்ந்து அன்றைய தனியார் இன்சூரன்ஸ் துறை அவலங்களின் தொகுப்பாகவே மாறியிருந்தது. இந்தக் கொடுமைகள் யாவையும் வெளியுலகின் பார்வைக்கு கொண்டுவந்தது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்தான். 1951ல் உருவாக்கப்பட்ட இந்த சங்கம் தனதுமுதல் அமைப்பு மாநாட்டின் மிக முக்கிய கோரிக்கையாக முன்வைத்தது இன்சூரன்ஸ் துறை தேசியமயமாக்கப்பட வேண்டுமென்பது தான். நாட்டின் வளர்ச்சிக்கான நிதி திரட்டவும், மக்களின் சேமிப்பு கொள்ளை போகாமல் தடுத்திடவும், இத்துறையில் பணியாற்றும் ஊழியர்களின் உரிமைகளுக்காகவும் இன்சூரன்ஸ் துறை தேசியமயமாவது தான் ஒரே தீர்வாக இருக்க முடியும் என தீர்க்க முடிவெடுத்து அதற்கான கருத்து திரட்டல்களையும் செய்தது இந்த சங்கம்.
            ஒருபுறம் தனியார்களின் மோசடி, மறுபுறம் நாட்டின் வளர்ச்சிக்கான நிதி திரட்ட வேண்டிய தேவை, நாட்டு மக்களி டையே இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் ஏற்படுத்தியிருந்த கருத்து திரட்டல்கள் என எல்லாமுமாக சேர்ந்து இத்துறையை தேசியமயமாக்கும் திருப்பணியை நோக்கி மைய அரசை நகர்த்தியது. 1956 ஜனவரி 19ம்நாள் தேசியமய அறிவிப்பு வெளியானது. மத்திய அரசால் உடனடியாக இன்சூரன்ஸ் சேவையை இங்கு துவக்க முடியவில்லை. தனியார்களின் நீதிமன்ற வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொண்டு உரிய சட்ட பாதுகாப்பு அம்சங்களோடு 1.9.1956ல் தான் எல்ஐசி முறையான அரசு நிறுவனமாக சேவையை துவக்கியது. அன்று ஏற்படுத்திய சட்டரீதியான பாதுகாப்பு அம்சங்கள் இன்றும் பாதுகாப்பு கவசங்களாக ஓரளவு இத்துறையை பாதுகாக்கிறது. அன்று துவங்கிய எல்ஐசியின் வெற்றிப்பயணம் இன்றும் பல புதிய இலக்குகளை நோக்கி வெற்றிநடை போடுகிறது.

எல்ஐசியின் கட்டமைப்பு

                 கடந்த காலங்களில் நகர்ப்புற பணக் காரர்களுக்கானதாக இருந்த இன்சூரன்ஸ் சேவையை ஏழை, எளியவர்களுக்குமானதாக மாற்றியது இன்சூரன்ஸ் தேசியமயம். இந்திய கிராமங்களை நோக்கி எல்ஐசி தனது கிளைகளைப் பரப்பியது. 8 மண்டலங்களில் 113 கோட்டங்களை உள்ளடக்கி 4,201 கிளைகளாக பரந்து விரிந்த மாபெரும் விருட்சமாக வியாபித்து நிற்கும் எல்ஐசியின் மொத்த சொத்தின் மதிப்பு ரூ.16லட்சம் கோடிகளுக்கும் மேல். இது நாட்டின் ஆகப்பெரிய நிறுவனமான ஸ்டேட் வங்கியைக் காட்டிலும் மிகவும் கூடுதல். எல்ஐசியின் மொத்த பாலிசிதாரர்களின் எண்ணிக்கை 40 கோடிகளுக்கும் மேல். இவ்வளவு பாலிசிதாரர்களையும் எல்ஐசி நோக்கி கொண்டுவந்து சேர்த்த ஆணி வேர்களான முகவர்களின் எண்ணிக்கை 12லட்சம். வளர்ச்சி அதிகாரிகள், முதல் நிலை அதிகாரிகள், ஊழியர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 16 ஆயிரம் பேர் என பெரிய மனிதவளத்தையும், செல்வவளத்தையும், கட்டமைப்பையும் கொண்ட உலகின் ஒரே இன்சூரன்ஸ் நிறுவனம் எல்ஐசி தான். மட்டுமல்லாமல் நவீன தொழில்நுட்பமான கணினி தொழில்நுட்பத்தையும் திறமையாக பயன்படுத்தி சிறந்த சேவையாற்றும் நிறுவனங்களில் எல்ஐசி இரண்டாம் இடம் வகிக்கிறது. (முதலாவது இந்திய ரயில்வே).

வளர்ச்சியும் உரிம பட்டுவாடாவும்

           நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்த எல்ஐசியின் புதுவணிக வேகத்திற்கு வேறு எந்த நிறுவனமும் ஈடு கொடுக்க முடியவில்லை. கடும் பொருளாதார நெருக்கடிகளை இந்திய மக்கள் சந்தித்து வரும் வேளையிலும் மக்களின் சேமிப்பு மக்களின் நல்வாழ்விற்கே என செயல்படும் எல்ஐசி இந்த நிதியாண்டில் டிசம்பர் 15 வரையில் மட்டும் 2 கோடியே 30லட்சம் புதிய பாலிசிகளில் ரூபாய் 19ஆயிரத்து 772 கோடிகளை முதல் பிரீமிய வருவாயாக ஈட்டியுள்ளது. இது ஒட்டுமொத்த ஆயுள் காப்பீட்டு வருவாயில் 78.89 சதவீதமாகும் ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் உண்மை மதிப்பும், வளர்ச்சியும் அதன் உரிமப் பட்டுவாடாவில் தான் அடங்கியுள்ளது. பாலிசிதாரர்களின் முதிர்வு உரிமத்தையும், இறப்பு உரிமத்தையும் முறையாக பட்டுவாடா செய்வதில் 98 சதவீதத்தை எட்டிப்பிடித்து எல்ஐசி என்றுமே முதல் நிலையை வகிக்கிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் ஒருகோடியே 83லட்சத்து 63 ஆயிரம் உரிமங்களின் பேரில் ரூ.74ஆயிரத்து 770 கோடிகளை பாலிசிதாரர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைத்து தேசத்தின் நம்பிக்கையாய் உரிமம் வழங்குவதில் உலகின் முதல் இன்சூரன்ஸ் நிறுவனமாக ஜொலிக்கிறது எல்ஐசி. சமீபத்தில் வேர்ல்ட் பிராண்ட் காங்கிரஸ் என்ற நிறுவனம் வழங்கிய சிறந்த பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கான விருது உட்பட 28க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளது எல்ஐசி.

தேசத்தின் வளர்ச்சியில்

            பெரும் நிதியை நீண்டகால சேமிப்பாக வெற்றிகரமாக திரட்டும் எல்ஐசி அதை தேசத்தின் வளர்ச்சியில் முதலீடு செய்வதிலும் கருத்துடன் செயல்படுகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் மத்திய-மாநில அரசுகளின் நலத் திட்டங்களுக்கு உதவிடும் வகையில் ரூபாய்7லட்சத்து 32 ஆயிரம் கோடிகளை முதலீடு செய்துள்ளது. மேலும் ரயில்வே, சாலைப்போக்குவரத்து, குடிநீர், நீர்ப்பாசனம், மின்சாரம், தகவல் தொடர்புத்துறை, சுகாதாரம் போன்ற துறைகளில் நேரடியாக ரூபாய் 3 லட்சத்து 60ஆயிரம் கோடிகளை முதலீடு செய்து மக்கள் சேவையாற்றுகிறது எல்ஐசி, மட்டுமல்லாமல் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் முதல் நடப்பில் உள்ள 12வது ஐந்தாண்டுத் திட்டம் வரை ரூபாய் 15 லட்சத்து 34ஆயிரம் கோடிகளை வாரி வழங்கியுள்ளது எல்ஐசி. 2012-17க்கான ஐந்தாண்டு திட்டத்திற்கு இதுவரை வழங்கியது ஒருலட்சத்து 84 ஆயிரம் கோடிகள். மக்களின் சேமிப்பு மக்கள் நலத் திட்டங்களுக்காகவே என செயல்படும் எல்ஐசி தேசத்தின் வளர்ச்சிப்பாதையில் முக்கியப் பங்காற்றுகிறது. எல்ஐசி இல்லாத வளரும் இந்தியாவை கற்பனை செய்வது கூட சிரமமானதாகும். எல்ஐசியின் இத்தகைய மாபெரும் வளர்ச்சியின் ரகசியம்தான் என்ன?

வெற்றியின் ரகசியம்

         இந்த வியத்தகு வெற்றிகள் சுலபமாக ஏற்படவில்லை. கடும் பொருளாதார தாக்குதல்களையும், சதிகளையும் முறியடித்து பெரும் தியாகங்களினூடே பெறப்பட்டவையாகும். நீண்டகால முதலீடுகளாக இந்தளவுக்கு கணிசமான நிதியைத் திரட்டும் அரசுத்துறை நிறுவனத்தை உலக நிதி மூலதனமும் ஏகாதிபத்தியமும் பார்த்துக் கொண்டிருக்குமா? இந்த நிதியை கபளீகரம் செய்ய துடியாய் துடித்து அவ்வப்போது தனியார்மயம், தாராளமயம், அந்நிய முதலீடு என அஸ்திரங்களைத் தொடுக்கிறது. வலிமையான அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் இத்தாக்குதல்களையெல்லாம் எதிர்கொண்டு வலிமையான போராட்ட இயக்கங்களை நடத்தி வருகிறது. 1967ல் நடத்திய இயந்திரமாக்கலுக்கு எதிரான போராட்டம், 1981ல் எல்ஐசியை ஐந்து கூறுகளாக பிரிக்கப்படும் முடிவை எதிர்த்தப் போராட்டம், 1991ல் நிர்வாக சீரமைப்பு என்ற பெயரில் எல்ஐசியை சீரழிக்க முயன்ற மல்கோத்ரா குழு பரிந்துரைகளை எதிர்த்தப் போராட்டம், 1994ல் எல்ஐசியை தனியாருக்கு தாரைவார்க்க முயன்ற மைய அரசைக் கண்டித்து ஒன்றரை கோடி கையெழுத்துக்களை பெற்ற மாபெரும் கையெழுத்து இயக்கம், பேரணிகள், கருத்தரங்குகள், ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்கள், மக்கள் சந்திப்பு இயக்கங்கள் என பல வேள்விகளை செய்தே இந்நிறுவனம் கட்டிக்காக்கப்பட்டுள்ளது. இவ்வேள்விகளுக்காக நிறுவனத்திற்குள் முகவர்கள், வளர்ச்சி அதிகாரிகள், முதல்நிலை அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து வலிமையான எல்ஐசி பாதுகாப்பு அணி உருவாக்கப்பட்டுள்ளது.
          ஒவ்வொரு போராட்டங்களின் வெற்றியும் ஊழியர் சங்கத்தின் வெற்றியாக மட்டுமல்லாமல் நிறுவனத்தின் வெற்றியாகவே பரிமளிக்கிறது. தேசநலன், நிறுவனப் பாதுகாப்பு இவைகளின் மீது கட்டப்படும் ஊழியர் நலன் என்ற தாரக மந்திரத்தை தனது ஊழியர்களுக்கு பறை சாற்றியுள்ளது. ஒவ்வொரு முறை இச்சங்கம் போராட்டக்களங்களில் இறங்கி மக்களைச் சந்திக்கும்போதெல்லாம் எல்ஐசியின் புதுவணிகம் பூத்துக்குலுங்கி புதுப்புது எல்லைகளைத் தொடுகிறது. நமது சேமிப்புகள் முறையாக பாதுகாக்கப்படுமென தேசமே எல்ஐசியை நம்புகிறது. உலகமய, தனியார்மய எதிர்ப்பியக்க வெற்றியின் அடையாளமாய் எல்ஐசி விண்ணைத் தொட்டு நிற்கிறது. சரியான போராட்டங்களே இதை சாத்தியமாக்கியது.

நன்றி :

கருத்துகள் இல்லை: