செவ்வாய், 12 மே, 2015

ஜெயலலிதா விடுதலை - நாணல் போல வளைவது தான் சட்டமாகுமா...?

                 இந்தியா விடுதலை அடைந்தபோது கூட தமிழகத்தில் இவ்வளவு கொண்டாட்டம் இருந்திருக்காது. அனால் இன்று காலை ஜெயலாலிதாவின் விடுதலை பற்றிய செய்தியை கேட்டதும் அதிமுகவினரின் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் எல்லாம் பட்டாசுகளோடு சேர்த்து வெடித்து சிதறியது. 
                நீதியரசர் குமாரசாமி இன்று அளித்த தீர்ப்பை  மட்டுமல்ல, அந்த தீர்ப்பை ஒட்டி அதிமுகவினரால் நடத்தப்பட்ட இந்த முட்டாள்தனமான கொண்டாட்டங்களையும் யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இந்த தீர்ப்புக்கு பிறகு தான் ''நீதிமன்றம் யாருக்கானது...?'' என்ற கேள்வி நம் மனதில் எழுகிறது. பசியின் காரணமாக வாழைப்பழத்தையோ, ரொட்டியையோ திருடிவிட்டால் அவனுக்கு கடுமையான  சிறை தண்டனை நீதிமன்றம்... தண்டனை முடிந்து அவன் சிறையிலிருந்து வெளியே வரும்போது திருந்துவதற்கு பதிலாக முன்பை விட பெரிய திருடனாக மாற்றப்பட்டு வெளியே வருகிறான். ஆனால் ஆட்சியிளிருப்பவர்களோ அல்லது அதிகாரிகளோ அதிகாரத்தில் இருக்கும் போது மக்கள் பணத்தை திருடினால், ''மொத்த வருமானத்தில் இத்தனை சதவீதம் திருடலாம்... அதற்கு சட்டம் அனுமதி அளிக்கிறது'' என்று சொல்லி விடுதலை அளிக்கிறது அதே நீதிமன்றம். சட்டமும், நீதியும் அனைவருக்கும் சமம் என்ற வாதம் பக்கவாதம் ஆனதா என்ற சந்தேகம் தான் நமக்கு எழுகிறது. 
        கடந்த பதினெட்டு ஆண்டு காலமாக  இழுத்தடிக்கப்பட்டு ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூருவில் உள்ள கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அண்மையில் தான் ஒரு நீதிபதி நீண்ட நெடிய பக்கங்களை கொண்ட தீர்ப்புகளை படித்து தண்டனைகளை வழங்கி ஜெயலலிதாவை சிறைக்குள் தள்ளினார். ஆனால் மேல்முறையீடு என்ற பெயரில் அதே வழக்கில்  வேறொரு  நீதிபதி  இன்னொரு  நீண்ட நெடிய பக்கங்களோடு புதிய தீர்ப்பை எழுதி  சென்ற நீதிபதி அளித்த தீர்ப்புகளையும், தண்டனைகளையும்   ரத்து செய்து ஜெயலலிதாவை விடுதலை செய்திருக்கிறார்.  ஒரே மாநிலம், ஒரே நீதிமன்றம், ஒரே வழக்கு, அனால் இரு மாதிரியான தீர்ப்பு. முன்பு தீர்ப்பு சொன்னவர் ஜெயலலிதா நடத்திய கொள்ளைகளை  எடைபோட்டு தீர்ப்பு சொன்னார். ஆனால் இப்போது தீர்ப்பு சொன்னவரோ கணக்கு போட்டு தீர்ப்பு சொல்லியிருக்கிறார். அவர் எழுதிய 919 பக்கத் தீர்ப்பின்படி, செய்கூலி, சேதாரம் போக 10 சதவீதம் வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கலாமா..! பாவம் இந்த அம்மாவோ 8.12 சதவீதம் தான் தன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து செர்த்திருக்காங்களாமா...! அதனால இதெல்லாம் பெரிய குற்றமா...? அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா... என்று  கணக்கு போட்டு விடையை கண்டுபிடிச்சி பழைய தீர்ப்பை மாத்தி எழுதி ஜெயலலிதாவை புனிதமாக்கிவிட்டார். 
           இந்த இரண்டு தீர்ப்புகளில் எது தான் ''சரியான'' தீர்ப்பு என்று புரியாமல் மக்கள் மாபெரும் குழப்பத்தில் கிடக்கிறார்கள். முன்னவர் சொன்ன தீர்ப்பு சரியானதா...? அல்லது நேற்று பின்னவர் சொன்ன தீர்ப்பு சரியானதா...? நேற்று சொன்னவரின் தீர்ப்பு தான் சரியானது  என்றால், முன்னவர் தவறான தீர்ப்பு சொன்னாரா...? என்ற கேள்வி எழுகிறது. அப்படி தவறான தீர்ப்பு வழங்கியிருந்தால் அவர் தண்டிக்கப்படவேண்டியவரா...? என்ற கேள்வியும் எழுகிறது. சட்ட வல்லுனர்கள் சட்டத்திலுள்ள ஓட்டையை கண்டுபிடித்துவிடுகிறார்கள், பணம் படைத்தவர்களுக்கும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் அவர்களுக்கு தகுந்தாற்போல் சட்டத்தை வளைத்துக் கொள்கிறார்கள். 
           அதிகாரத்திலிருப்பவர்கள் மக்கள் பணத்தை கொள்ளையடித்தால் தண்டனை இல்லை என்ற பாடத்தை தான் எதிர்கால தலைமுறைக்கு இன்றைய நீதிமன்றம் பாடம் சொல்லித்தருகிறது என்பது நமக்கு நன்றாக புரிகிறது.  

கருத்துகள் இல்லை: