ஞாயிறு, 10 மே, 2015

புதுச்சேரியில் வளர்ந்துவரும் தீண்டாமை வன்கொடுமைகள்...!


               இந்தியா அரசியல் விடுதலை பெற்று 67 ஆண்டுகளை கடந்த பிறகும், தீண்டாமை நீங்கி சமத்துவ சமநிலை கொண்ட சமூகவிடுதலை என்பதற்காக நாளுக்கு நாள் போராடிக்கொண்டே தான் இருக்கவேண்டியிருக்கிறது. தீண்டாமையின் வடிவங்கள் மாறாமல் இடத்திற்கு இடம் பலவகைகளில்   விஸ்வரூபம் எடுத்துக்கொண்டே இருக்கிறது. தலித்  மக்களின் பொருளாதார வளர்ச்சிகளை பொறுத்துக்கொள்ள முடியாத ஆதிக்கசாதியினர், தீண்டாமை ஒழிந்துவிடாமல் திட்டம்போட்டு தீனிப்போட்டு வளர்த்துகொண்டு வருகிறார்கள் என்பது தான் உண்மை. 
          புதுச்சேரியின் மேற்குப் பகுதியில் உள்ள நெட்டப்பாக்கம் சட்டமன்ற (தனி) தொகுதியில் மடுகரை என்ற ஆதிக்கசாதியினர்  ஆதிக்கம் செலுத்தும் கிராமம் ஒன்று உள்ளது. இங்குள்ள கூத்தாண்டவர் கோயிலில் கடந்த ஒரு வார காலமாக கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மூன்று நாட்களுக்கு முன்பு சென்ற ஆறாம் தேதியன்று தேர்த்திருவிழா நடைபெற்றது. கூத்தாண்டவர் சாமியும் தேரோட்டம் காண தேரில் அமர்ந்துவிட்டார், தேரை இழுக்க வடமும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கே அந்த தேரை வடம்பிடித்து இழுப்பதற்கு அந்த தொகுதியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் திரு.பெரியசாமி அங்கு வந்தார். அவர் வடம் பிடிக்க அதன் அருகில் வரும்போதே ஆதிக்கசாதியை சார்ந்த ஒருவன்  ''பறையன் எல்லாம் வடம் பிடிக்க அனுமதிக்கமாட்டோம்'' என்று வெறித்தனத்துடன் கூவியிருக்கிறான். அந்த கோயில் அலுவலரோ ''நாங்க தான் உங்களுக்கு அழைப்பே தரவில்லையே. நீங்க ஏன் இங்க வந்தீங்க...?'' என்று கொக்கரித்திருக்கிறான். ''நான் இந்த தொகுதி எம்.எல்.ஏ'' என்று சொல்லி அவர்கள் தடையையும்  மீறி அவரும் அவரோடு  வந்த மற்ற  தலித் நண்பர்களும்  சேர்ந்து வடம் பிடிக்க முயற்சித்தபோது, அங்கு கூடியிருந்த ஆதிக்கசாதியினர் அந்த சட்டமன்ற உறுப்பினரை தாக்கி கீழே தள்ளிவிட்டிருக்கின்றனர்.
              அமைதிப்படுத்த வேண்டிய அங்கிருந்த காவல்துறையினரோ சட்டமன்ற உறுப்பினரோடு வந்திருந்த தலித் மக்கள் மீது தடியடி நடத்தி கலைத்திருக்கின்றனர். அதிமுகவை சேர்ந்த அந்த சட்டமன்ற உறுப்பினர் ஒரு தலித்  என்பதாலேயே அவருக்கு அழைப்பு வழங்கப்படவில்லை என்பதும்,  அழைப்பு இல்லாமலேயே கோயிலுக்கு வந்தும் வடம் பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டார் என்பதும் யாராலும் மறைக்கமுடியாத  உண்மை. ஆனால் சட்டமன்றத்தில் இந்த பிரச்சனையை பாதிக்கப்பட்ட அந்த எம்.எல்.ஏ சார்ந்த கட்சியான அதிமுகவோ சட்டமன்றத்தில் இப்பிரச்சனையைப் பற்றி எழுப்பிய போது பேரவைத்தலைவரும் அரசும் இதை தலித்க்கு எதிரான  ஒரு   தீண்டாமை பிரச்சனை என்பதை மறைத்துவிட்டு  ரங்கசாமி தலைமையிலான என்.ஆர் காங்கிரசுக்கும், அதிமுகவுக்குமான அரசியல் பிரச்சனை, அரசியல்ல இதெல்லாம் சகஜம் என்று பதிலளித்திருக்கிறார்கள். அதிமுக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே, இந்த பிரச்சனை என்பது இவர்கள் இரண்டு கட்சிகளுக்கும் இடையேயான மோதல் என்பது போல் தான் சித்தரிக்கப்படுகிறதே தவிர தீண்டாமையை கொழுந்துவிட்டு எரியச்செய்யும் சாதிய மோதல் என்பதை இருக்கட்சிகளுமே திட்டமிட்டு மறைக்கிறார்கள்.
          புதுச்சேரியில் இது ஏதோ ஒரு பிரச்சனை தானே என்று எண்ணாதீர்கள். புதுச்சேரி சட்டமன்றத்தேர்தல் நெருங்க நெருங்க, தீண்டாமையை மையப்படுத்திய இது போன்ற சாதிய பிரச்சனைகள் புதுச்சேரி கிராமப்புறங்களில் புற்றீசல்கள் போல் கிளம்பிக்கொண்டே தான் இருக்கிறது.
            அண்மையில் மதகடிப்பட்டு கலிதீர்த்தால்குப்பத்தில் திரௌபதையம்மன் கோயிலில் அங்குள்ள தலித் மக்கள் நுழைவது தடுக்கப்பட்டது. அதை எதிர்த்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்   தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் மறுக்கப்பட்ட தலித் மக்களுடன்     ஆலய நுழைவு போராட்டம் என தேதி குறிப்பிட்டு அறிவித்தார்கள். அதை கேட்டு  ஆத்திரமடைந்த ஆதிக்கசாதியினர் கோயிலுக்கு அருகிலிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை  
தீயிட்டு கொளுத்தினர் என்பதை யாராலும் மறக்கமுடியாது. இங்கே சாதிய வெறுப்புணர்ச்சி இன்னும் புகைந்துகொண்டு தான் இருக்கிறது.
                 அதேபோல் இன்னொரு சம்பவமும் வேறொரு இடத்தில் அரங்கேறியிருக்கிறது. ஒவ்வொரு  மாசிமகத் திருவிழாவின் போதும், திருக்காஞ்சியை  சுற்றியுள்ள கிராமத்து கோயில்களிலிருந்து சாமிகள் எல்லாம் புறப்பட்டு தலித் மக்கள் வாழும் சேரியை கடந்து தான் ஆற்றுக்கு செல்வது என்பது பல ஆண்டுகளாக  எல்லோரும் ஏற்றுக்கொண்ட ஒரு மரபாக -  வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. அனால் இந்த ஆண்டு மட்டும் சேரி வழியாக செல்ல முடியாது என்று சாமிகள் சொல்லவில்லை. சாமியை தூக்கிச்செல்லும் ஆசாமிகள் சொன்னார்கள்.  சென்ற மாசிமகத் திருவிழாவின் போது இந்த மரபு மீறப்பட்டு, சாமி ஆற்றில் இறங்குவதற்கு சேரி வழியாக செல்வதற்கு பதிலாக இடையிலேயே மாற்றுப்பாதை போடப்பட்டு சேரியை புறக்கணித்துவிட்டு சாமியை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இந்த தேவையற்ற மரபு மீறலை எதிர்த்தும் மார்க்சிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் போர் குரல் எழுப்பியிருக்கிறது. என்றாலும்  அங்கு இந்த பிரச்சனையும்  இன்னும்  புகைந்துகொண்டு இருக்கிறது.
               இப்படியாக புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு இது போன்று சாதிய தீயை ஊதிவிட்டு, மக்களை உசுப்பேற்றி வருகிறார்கள்  என்பதையும் புதுச்சேரி  மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். மக்களின் ஒற்றுமையை குலைத்து அதன் மூலம் ஓட்டுகளை பெற்றுவிடலாம் என்று கனவு காண்கிறார்கள். அந்த கனவு ஒரு போதும் பலிக்காது.

கருத்துகள் இல்லை: