ஞாயிறு, 27 ஜூலை, 2014

''நோக்கியா'' தரும் பாடம் என்ன?

 கட்டுரையாளர் : தோழர். ஜி. ராமகிருஷ்ணன்,                           
                                 மாநிலச்செயலாளர்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி                   
            மத்திய அரசு 2005-ல் சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டத்தை உருவாக்கியது. உள்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்களை ஈர்ப்பதும், தொழில்கள் தொடங்குவதும், உற்பத்தியாகும் பொருட்களை ஏற்றுமதி செய்வதும், அதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதும், பொருளாதார மண்டலங்களின் நோக்கமாகச் சொல்லப்பட்டது. இதன் அடிப்படையில் நூற்றுக்கணக்கான சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. இதற்காக, பல்லாயிரக் கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
            2009-ல் மத்திய அரசு மின்னணு தொழில்துறையின் வளர்ச்சிக்கு ஆலோசனை அளித்திட அமைத்த பணிப்பிரிவு பல ஆலோசனைகளை வழங்கியது. இந்த ஆலோசனைகளையெல்லாம் தமிழகத்தில் அதிமுக அரசு அதற்கு முன்னதாகவே 2005-ம் ஆண்டிலிருந்தே அட்சரம் பிசகாமல் அமலாக்கியிருந்தது. அதனால் தான் மேற்கண்ட பணிப்பிரிவு நாடு முழுவதும் ‘ஸ்ரீபெரும்புதூர்களை உருவாக்கிட வேண்டும்’ என்று கூறியது. 2005-ல் ஸ்ரீபெரும்புதூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் நோக்கியா நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. ஏக்கருக்கு ரூ. 8 லட்சம் என்று நிலத்தை வாங்கி ஏக்கருக்கு ரூ. 4.5 லட்சம் என்று 210 ஏக்கர் நிலத்தை நோக்கியாவுக்கு மாநில அரசு வழங்கியது. பத்திரப் பதிவுக்கட்டணம் முழுமையாகத் தள்ளுபடிசெய்யப்பட்டது. தடையில்லா மின்சாரம், முதல் 5 ஆண்டுகளுக்கு வருமான வரிவிலக்கு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு 50% வரிவிலக்கு, மத்திய விற்பனை வரி மற்றும் சேவை வரி, வேலை ஒப்பந்த வரி, குத்தகை வரி, நுழைவு வரி போன்ற வரிகளிலிருந்தும் விலக்குகள் வாரி வழங்கப்பட்டன. மேலும், நோக்கியா நிறுவனத்தைப் பொதுப் பயன்பாட்டு நிறுவனம் என்றும் அரசு அறிவித்தது.
          நோக்கியாவில் சுமார் 8,000 பேர் நேரடித் தொழிலாளர்களாகப் பணிபுரிந்தனர். தொழிலாளர்களில் 60% பேர் பெண்கள். நோக்கியாவுக்கு உதிரி பாகங்கள் உற்பத்தி செய்து தருவதற்கு ஃபாக்ஸ்கான், பி.ஒய்.டி., சால்காம், லைட் ஆன் மொபைல், ஆர்.ஆர். டொனாலி போன்ற நிறுவனங்கள் உருவாயின. இந்த நிறுவனங்களின் தொழிலாளர்கள் உட்பட நோக்கியா வளாகத்தில் சுமார் 22,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையில் சேர்ந்தனர். நோக்கியாவில் உற்பத்தி வேகமாக நடந்தது. கைபேசி உலகச் சந்தையில், 32 சதவீதத்தையும், இந்திய கைபேசி சந்தையில் 52 சதவீதத்தையும் நோக்கியா கைப்பற்றியது. கோடிகோடியாய் விற்பனை, கோடிகோடியாய் லாபம். 

ரூ. 21,000 கோடி என்னவாயிற்று....?                      
 
                கைபேசிக்காக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த மென்பொருளுக்கு மத்திய அரசுக்குக் கட்ட வேண்டிய வரி ரூ.21,000 கோடியைக் கட்டாமல் ஏய்த்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதைப் போலவே உள்நாட்டில் விற்பனை செய்த கைபேசிகளையும் ஏற்றுமதி செய்வதாக இணைத்துக் கணக்குக் காட்டி மாநில அரசுக்குக் கட்ட வேண்டிய சுமார் ரூ.2,430 கோடியை நோக்கியா ஏமாற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. எனவே, மாநில வருவாய்த் துறையும் மத்திய வருமானத் துறையும் நோக்கியா நிறுவனம் மீது வழக்கு தொடுத்தன. வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், நோக்கியா நிறுவனம் வரியைக் கட்டியாக வேண்டுமென்று உத்தரவிட்டதோடு நோக்கியாவின் சொத்துக்களையும் முடக்கியது. இதற்கிடையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு உலகம் முழுவதுமுள்ள தனது கைபேசி உற்பத்தித் தொழிற்சாலைகளை நோக்கியா விற்றுவிட்டது. ஸ்ரீபெரும்புதூரிலுள்ள நோக்கியா தொழிற்சாலை மீது வரி பாக்கி வழக்கு இருப்பதால் இதை மட்டும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வாங்கவில்லை. வரி பாக்கிக்காக நீதிமன்றத்தில் வழக்கு நடந்தபோது நோக்கியா நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் தொடர்ந்து கைபேசி உற்பத்தி நடக்கும் என்றும், தொழிலாளர்களின் வேலைக்கு ஆபத்து இல்லையென்றும் நீதிமன்றத்துக்கு உறுதியளித்தது. நடைமுறையில் தொழிலாளர்களை விருப்ப ஓய்வுத்திட்டத்தில் செல்ல நிர்ப்பந்தித்தது.
             தொழிலாளர்களின் வேலையைப் பாதுகாக்கத் தொழிற்சங்கத்தலைமை பல முயற்சிகளை மேற்கொண்டது. மாநில தொழிலாளர் துறை, தொழில் துறை, முதல்வர் போன்றோரிடம் முறையிட்டு, தொழிற்சாலையையும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலையையும் பாதுகாக்க வேண்டுமென்று வலியுறுத்தியது. 31.3.2014-ல் 2000-க்கும் மேற்பட்ட நோக்கியா தொழிலாளர்களின் உண்ணாவிரதப் போராட்டம் கோட்டை முன்பு நடைபெற்றது. தொழிலாளர் துறையும், அரசும் இதில் தலையிடவே விரும்பவில்லை. 

திமுக-அதிமுக வேறுபாடு இல்லை....?             
 
              இந்த மாதிரி விஷயங்களில் மத்திய ஆட்சியில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் எப்படி வேறுபாடு இல்லையோ, அதே மாதிரி தமிழ்நாட்டில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அதிமுக அரசு போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, அடுத்து வந்த திமுக அரசு அட்சரம் பிசகாமல் அமலாக்கியது. நோக்கியா நிறுவனம் தொடக்கத்தில் மூலதனமிட்ட ரூ.650 கோடிக்கும் மேலாக மதிப்புக்கூட்டு வரியாக சுமார் ரூ.850 கோடியை மாநில அரசு நோக்கியாவுக்குத் திருப்பி அளித்துள்ளது.
           9 ஆண்டுகளில் ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா நிறுவனத்தின் உற்பத்தியின் மதிப்பு ரூ.1,50,000 கோடி என்பதை நிறுவனமே நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது. குறைந்த மூலதனம், கொள்ளை லாபம் இதுதான் பன்னாட்டு நிறுவனங்களின் கொள்கை. ஆனால், தொழிலாளர்களின் நலன்....? 

22 ஆயிரம் தொழிலாளர்களின் கதி....?                
 
            தங்களுடைய எதிர்காலம் ஒளிமயமாக அமையும் என்ற நம்பிக்கையில் பணியில் சேர்ந்த 5,000 தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி விருப்ப ஓய்வுத் திட்டத்தின் மூலம் நோக்கியா நிர்வாகம் வெளியேற்றிவிட்டது. நிர்வாகம் தன்னிச்சையாக அறிவித்த நஷ்ட ஈட்டை வாங்கவில்லையென்றால் வெறுங்கையோடு வெளியேற வேண்டியிருக்கும் என்ற பீதியில் தொழிலாளர்கள், நிர்வாகம் கொடுத்ததை விரக்தி யோடு வாங்கிக்கொண்டார்கள். சுமார் 850 தொழிலாளர்கள் மட்டுமே வேலையில் உள்ளனர். நோக்கியா மட்டுமல்ல; இந்த நிறுவனத்துக்கு உதிரி பாகங்களைத் தயாரித்துக் கொடுத்து வரும் மற்ற சிறு நிறுவனங்களும் தொழிலாளர்களை வெளியேற்றுவதற்காக விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிவித்துவருகின்றன. ஸ்ரீபெரும்புதூர் பகுதி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் நோக்கியா தொழிலாளர்கள் உட்பட 22,000 தொழிலாளர்களும் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
            சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் நோக்கமாகச் சொல்லப்பட்ட தொழில் வளர்ச்சி, நோக்கியா எல்லா சலுகைகளையும் பெற்றுக்கொண்ட 9 ஆண்டுகளோடு முடிந்துபோனது. வேலைவாய்ப்பும் குறுகிய காலத்துக்கே அளிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மாற்று வேலைகளுக்கான வாய்ப்புகளின்றி நிர்க்கதியாய் விரட்டப்பட்டுள்ளனர்.                 
          ஆனால், நோக்கியா தமிழக அரசிடமிருந்து குறைந்த விலையில் நிலம், பத்திரப்பதிவு சலுகை, வரியை திரும்பப் பெற்றதில் ரூ.850 கோடி, பல்லாயிரக் கணக்கான கோடிகள் வரிச்சலுகை இத்தனையும் பெற்றுக்கொண்ட பிறகு மத்திய அரசுக்கு ரூ.21,000 கோடி வரிஏய்ப்பு, மாநில அரசுக்கு ரூ.2,430 கோடி வரி ஏய்ப்பு என்று நம் நாட்டுச் செல்வங்களை எல்லாம் ஏப்பம் விட்டுவிட்டுக் கூடாரத்தைக் காலிசெய்துவிட்டது. என்ன செய்யப்போகிறோம் நாம்? வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்கப் போகிறோமா?                      
நன்றி :

கருத்துகள் இல்லை: