வெள்ளி, 6 ஜூன், 2014

அரசியல் அமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவின் மீது கை வைக்காதே...!

கட்டுரையாளர் : கி. இலக்குவன், எழுத்தாளர்                      

          நரேந்திர மோடி தலைமையில் பாஜக அரசு தனிப்பெரும்பான்மையுடன் பதவியேற்றதையடுத்து ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ஏன் தொடரவேண்டும் என்ற விதத்தில் பெரும் சர்ச்சை கிளப்பப்பட்டுள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசன 370-வது பிரிவினை அகற்றுவது குறித்து விவாதம் நடத்தப்படவேண்டும் என பிரதமர் அலுவலக இணையமைச்சரான ஜிதேந்திர சிங் ஒரு கருத்தை வெளியிட்ட பின்னர் தான் இந்த சர்ச்சை வெடித்துள்ளது. 370-வது பிரிவை நீக்கும் ஆலோசனை குறித்து காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலடியாக ''காஷ்மீர் என்ன உங்கள் அப்பன் வீட்டு சொத்தா'' என்று ஆர்எஸ்எஸ் தலைவர் ராம் மாதவ் ஆணவத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்
     அரசியல் அமைப்புச் சட்டத்தில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு இணைக்கப்பட்ட வரலாற்றை முதலில் நினைவுபடுத்திக்கொள்வோம். இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்தை வடிவமைப்பதற்கான அமைப்பில் பிரிட்டிஷ் இந்தியாவின் மாகாண சட்டமன்றங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் சமஸ்தான மன்னர்களின் பிரதிநிதிகளும் இடம் பெற்றிருந்தனர். இந்தியாவுடன் இணைய விரும்பாத காஷ்மீர் மன்னர் அரிசிங் இந்த அமைப்பில் சேரமுடியாது என்று மறுத்து விட்டார். 1947 அக்டோபரில் பாகிஸ்தானிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு படைகள் ஸ்ரீநகருக்கே வந்து விடலாம் என்ற நிலையில் ஜம்முவுக்கு தப்பியோடிய அரிசிங் வேறுவழியின்றி 1947 அக்டோபர் 26-ஆம் தேதியன்று சில நிபந்தனைகளின் அடிப்படையில் இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்க ஒப்புக்கொள்ளும் ஆவணத்தில் கையொப்பமிட்டார். அதன்படி பாதுகாப்பு அயலுறவு மற்றும் தகவல் தொடர்பு ஆகியவை தொடர்பான அதிகாரங்களே மத்திய அரசுக்கு இருக்கும். பிற தலைப்புகள் தொடர்பாக இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தில் திருத்தம் எதுவும் கொண்டு வரவேண்டுமானால் மன்னரிடமிருந்து எழுத்து வுடிவில் ஒப்புதல் பெறவேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது
           ஜம்மு/
காஷ்மீர் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள ஒரு மாநிலம். எனவே அது பாகிஸ்தானுடன் இணைக்கப்பட வேண்டும் என்று பிரிட்டிஷார் விரும்பினர். இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த மவுன்ட் பேட்டன் பிரபு மன்னர் அரிசிங்கை சந்தித்து இக்கருத்தை நேரடியாகவே தெரிவித்தார். ஆனால் மன்னர் அரிசிங் இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ காஷ்மீர் இணைக்கப்படுவதை விரும்பவில்லை எனவும், காஷ்மீர் தனது ஆளுகையின் கீழ் தனிநாடாக இருக்கவேண்டும் என்று விரும்புவதாகத் தெரிவித்தார். காஷ்மீருக்கு தனி அந்தஸ்து கூடாது என்று இன்று கூறும் இந்துத்வாவாதிகளின் குருபீடமான ஆர்எஸ்எஸ்-ம் பாஜகவின் முன்னோடியான பிரஜா பரிஷத்தும் மன்னரின் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரித்தன
          இந்துக்கள் பெரும்பான்மையினராகவும் மன்னர் முஸ்லிமாகவும் இருந்த ஐதராபாத் மற்றும் ஜுனாகட் சமஸ்தானங்களின் இணைப்பு எவ்வாறு பெறப்பட்டது என்பதையும் எண்ணிப் பார்க்கவேண்டும். இந்த இரண்டு முஸ்லிம் மன்னர்களும் தங்கள் சமஸ்தானங்கள் பாகிஸ்தானுடன் இணைக்கப்படவேண்டும் என்று விரும்பினர். அந்த சமஸ்தான மக்கள் இந்தியாவுடனேயே இணைய விரும்பியதைக் கருத்தில் கொண்டு இந்திய ராணுவம் இந்திய அரசால் அனுப்பிவைக்கப்பட்ட பிறகே அவை இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. காஷ்மீரைப் பொருத்தவரை இன்றைய காஷ்மீர் முதல்வரின் பாட்டனாரும் காஷ்மீர் மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவராகவும் திகழ்ந்த ஷேக் அப்துல்லா காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைவதையோ தனிநாடாக இருப்பதையோ விரும்பவில்லை. அது இந்தியாவுடன் தான் இணைய வேண்டும் என்ற தெளிவான நிலையை எடுத்திருந்தார் ஷேக் அப்துல்லா என்ற காஷ்மீர் மக்களின் தலைவரின் ஆதரவு கிடைத்ததால் தான் முஸ்லிம்களை பெரும்பான்மையினராகக் கொண்ட  காஷ்மீர் இந்தியாவுடன் இணைவது சாத்தியமாயிற்று
          இந்திய அரசியலமைப்புச்சட்டத்தை வடிவமைக்கும் அவையில் மன்னர் அரிசிங் இணைய மறுத்தது குறித்து முன்னரே குறிப்பிட்டுள்ளோம். அதனால் ஜம்மு காஷ்மீர் தவிர பிற அனைத்து சமஸ்தானங்களின்அரசியல் அமைப்பு சட்டவிதிகள் இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்தில் இணைக்கப்பட்டன. காஷ்மீர் இணைப்புகுறித்து முடிவுஎடுப்பதற்காக 1949 மே மாதத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அரசாங்கத்துக்கு அதிகாரமாற்றம் தொடர்பாக காஷ்மீர் மாநிலத்துக்காக தனியாக அமைக்கப்படும் அரசியல் அமைப்புச்சட்ட அவை முடிவு செய்யும் என்று முடிவு செய்யப்பட்டது. அதுவரையிலான காலத்திற்காக அரசியல் அமைப்பு சட்டத்தின் 370வது பிரிவு இணைக்கப்பட்டது. அந்த விதியின் படி காஷ்மீர் மாநிலம் தொடர்பான சட்டங்களை இயற்றுவதற்கான இந்திய நாடாளுமன்றத்தின் அதிகாரங்களுக்கு வரம்பிடப்பட்டன. இணைப்பு ஆவணத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டவையான பாதுகாப்பு அயலுறவு தகவல் தொடர்பு ஆகியவை குறித்து மட்டுமே நாடாளுமன்றத்தில் சட்டமியற்றலாம். அந்த இணைப்பு ஆவணத்தில் இல்லாதவை குறித்து நாடாளுமன்றம் சட்டமியற்ற வேண்டுமானால் காஷ்மீர் சட்டமன்றத்தின் ஒப்புதல் பெறப்படவேண்டும்
          இதே அடிப்படையில் தான் காஷ்மீருக்கான தனி அரசியல் அமைப்புச் சட்டமும் வடிவமைக்கப்பட்டது. 370-வது பிரிவு குறித்து ஷேக் அப்துல்லாவுக்கும் இந்திய தேசிய தலைவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து விவாதங்கள் நடத்தப்பட்டு 1952 ஜுலை 24-ஆம் தேதியன்று ஷேக் அப்துல்லாவும் ஜவகர்லால் நேருவும் கையெழுத்திட்ட டெல்லி ஒப்பந்தம் என்ற ஒன்று இறுதி செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி காஷ்மீர் இணைப்பு ஆவணத்தில் இடம் பெற்றுள்ள மூன்று தலைப்புகள் குறித்து சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இருக்கும். இவை தவிர மற்றவை எல்லாம் காஷ்மீர் அரசாங்கத்தின் அதிகார வரம்புக்குள் இருக்கும். ஜம்மு காஷ்மீரில் பிறந்தவர்கள் குடியுரிமை பெற்றவர்களாக இருப்பார்கள். காஷ்மீர் மாநிலக் குடிமக்களுக்கு விசேஷ உரிமைகளையும் சலுகைகளையும் வழங்கும். அதிகாரம் காஷ்மீர் சட்டமன்றத்துக்கு வழங்கப்படும். காஷ்மீர் மாநிலத்துக்கு என்று தனிக்கொடி அனுமதிக்கப்படும். காஷ்மீர் மாநில ஆளுநர் சதாரி ரியாசத் என்று அழைக்கப்படுவார். அவர் காஷ்மீர் சட்டமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படுவார் காஷ்மீர் மாநில முதல்வர் பிரதமர் (வாசிர்/இ/ஆசாம்) என்று அழைக்கப்படுவார்
         இந்துக்கள் பெரும்பான்மையினராக இருக்கும் ஒரு நாட்டுடன் இணையும் போது காஷ்மீரிகள் என்ற தங்களது தனித்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் 370-வது பிரிவு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றிருந்தது. ஆனால் நேரு உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்கள் இதனை உளப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை. காஷ்மீர் அரசாங்கத்தின் ஒப்புதலுடன் குடியரசுத்தலைவரின் உத்தரவின் அடிப்படையில் பிற தலைப்புகளின் மீதும் சட்டங்களை நாடாளுமன்றம் இயற்றலாம் என்ற விதியைப் பயன்படுத்தி 370-வது பிரிவை ஏற்கெனவே நீர்த்துப்போகுமாறு அவர்கள் செய்து விட்டனர்.
          1954 தொடங்கி இன்று வரை காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு அதிகாரங்கள் மத்திய அரசுக்கு மாற்றப்பட்டு விட்டன. மத்திய பட்டியலில் இடம் பெற்றிருந்த 97 தலைப்புகளில் 94 தலைப்புகள் குறித்து காஷ்மீர் தொடர்பாகவும் சட்டமியற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மாற்றப்பட்டது. பொதுப்பட்டியலில் இடம் பெற்றுள்ள 47 தலைப்புகளில் 26 தலைப்புகள் காஷ்மீர் மாநிலத்துக்கும் பொருந்துமாறு மாற்றப்பட்டன. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 395 பிரிவுகளில் 260 பிரிவுகள் காஷ்மீருக்கும் பொருந்துமாறு வழிவகை செய்யப்பட்டன. ஆக காஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்தை வழங்கிய 370-வது பிரிவு உருத்தெரியாமல் மாற்றப்பட்டு விட்டது. காஷ்மீர் குடியுரிமை, பிறமாநிலங்களிலிருந்து வந்து தொடர்ந்து தங்கியிருப்பவர்கள் வாக்களிக்க முடியாத நிலை பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் காஷ்மீரில் சொத்துக்களை வாங்குவதற்கு உள்ள தடை போன்ற சில அம்சங்கள் மட்டுமே இப்போது நீடிக்கின்றன
           எந்த ஷேக் அப்துல்லாவின் ஆதரவை அடிப்படையாகக் கொண்டு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதோ அதே ஷேக் அப்துல்லாவின் மீது மத்திய அரசு நம்பிக்கையிழந்த நிலையில்1953 ஆகஸ்ட் 8-ஆம் தேதியன்று அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். காஷ்மீர் மக்களின் ஆதரவு தங்களுக்கு இருக்கிறது என்று உலகத்துக்கு காட்டுவதற்காக டெல்லியின் உத்தரவுக்கு அடிபணிந்து நடப்பவர்களே காஷ்மீர் ஆட்சியாளர்களாக இருக்கும் விதத்தில் மோசடித் தேர்தல்கள் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டன. இதனால் காஷ்மீர் மக்களுக்கும் மத்திய அரசுக்குமிடையேயான இடைவெளி அதிகரித்தது. தொழில் வளர்ச்சிக்கோ வேலைவாய்ப்பு அதிகரிப்புக்கோ கவனம் செலுத்தப்படாத நிலையில் இளைஞர்கள் நம்பிக்கை இழந்தனர். அவர்கள் மத்தியில் தீவிரவாதம் மத அடிப்படைவாதிகளாலும் அன்னிய சக்திகளாலும் துண்டிவிடப்பட்டது. மக்களின் அதிருப்திகளின் விளைவாக எழுந்த போராட்டங்களை அடக்குவதற்கு ராணுவம் பயன்படுத்தப்பட்டது
          அண்மை ஆண்டுகளில் தீவிரவாதம் ஓரளவுக்கு மட்டுப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஓரளவுக்கு முறையாக நடத்தப்பட்டன. மன்மோகன்சிங் அரசுக்கும் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கும் இடையே பேச்சு வார்த்தைகள் நடைபெற்ற போது காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. காஷ்மீரின் இரண்டு பகுதிகளுக்கும் தன்னாட்சி உரிமை வழங்குவது அதில் ஒரு முக்கிய அம்சமாக இருந்தது. இப்போது இந்துத்வாவாதிகளின் விருப்பப்படி 370-வது பிரிவு முற்றிலும் நீக்கப்படுமானால் காஷ்மீர் மக்களுக்கான தனி அடையாளங்கள் எல்லாம் இல்லாமல் போகும் நிலை ஏற்படுத்தப்படும். காஷ்மீர் மக்கள் இந்தியாவிலிருந்து மேலும் அந்நியப்படும் நிலையே ஏற்படும். காஷ்மீரில் ஊடுருவி தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுவரும் தீவிரவாத சக்திகளின் செயல்களுக்கு உரமளிப்பதாக அமையுமேயன்றி, இது தேச நலனுக்கோ ஒருமைப்பட்டுக்கோ பயனளிக்காது. மேலும் காஷ்மீருக்குள் செயல்பட்டுவரும் பிளவுவாத சக்திகளின் கரங்களை வலுப்படுத்தும். காஷ்மீர் இந்தியாவுடன் தான் நீடித்து இருக்கவேண்டும் என்ற கருத்துடன் செயல்படும் காஷ்மீர் மாநில மதச்சார்பற்ற சக்திகளையும் பலவீனப்படுத்தும். எனவே மக்களை பிளவுபடுத்தும் இத்தகைய அணுகுமுறையைக் கைவிட்டு மக்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான அடிப்படை பிரச்சனைகளின் மீது புதிய அரசு கவனம் செலுத்தவேண்டும்

1 கருத்து:

R.Puratchimani சொன்னது…

370 ஒரு தற்காலிக ஏற்ப்பாடு.
அதில் எப்பொழுது வேண்டுமானாலும் கை வைக்கலாம் என்பதால்தான்
அதில்.....ஜம்மு காசுமீர் சட்டமன்றம் 370 தேவையில்லை என்று சொன்னாலும், குடியரசு தலைவர் வேண்டாம் என்று நினைத்தாலும் 370வை முடிவுக்கு கொண்டு வரலாம் என்று அன்றே சொல்லப்பட்டு விட்டது.
எப்பொழுதும் நீக்க கூடாது என்று சொல்வது முசுலிம்களின் ஒட்டு வங்கியை குறி வைக்கும் செயலே அன்றி வவேறு ஒன்றும் அல்ல. என்னைப்பொருத்தவரை அதை நீக்க இது சரியான தருணம் அல்ல. அம்மாநில மக்களே அம்முடிவை எடுக்கும்படி அவர்களுக்கு நன்னம்பிக்கையையும், வளர்ச்சி திட்டங்களையும் அளிக்கவேண்டும்.