புதன், 25 ஜூலை, 2012

இதை இந்தியர்கள் அனைவரும் கட்டாயம் படிக்கவேண்டும்...!


சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு - ''இந்தியாவின்   துயரம்''  

          சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை பள்ளிப் பாடப்புத்தகங்களில் ''சீனாவின் துயரம்'' என்று ஒரு பாடம் படித்திருப்போம். அது என்னவென்றால், சீன நாட்டின் இரண்டாவது பெரிய நதி ''மஞ்சள் ஆறு'' என்பது 2500 ஆண்டுகளுக்கும் மேலாக வெள்ளம் சீறிப் பாய்ந்துவரும் நதி ஆகும். அதானால் அந்த நதி பாயும் பகுதிகளில் மக்கள்  வாழ்க்கை நடத்துவதற்கும்,   விவசாயம், வியாபாரம், கால்நடைகள் வளர்ப்பு போன்றவற்றிற்கும் மிகவும் சிரமப்பட்டார்கள். அவர்களின் வாழ்வாதாரம் என்பதே சிரமத்திற்கு உள்ளாகியது. கேள்விக்குறியானது. இந்த இயற்கையின் சீற்றத்திற்கு எதிராக மக்கள் ஒரு வாழ்க்கைப் போராட்டத்தையே நடத்தினார்கள். அதனால் தான் இந்த மஞ்சள் ஆற்றினை ''அன்று'' சீன மக்களும், வரலாற்று ஆசிரியர்களும் ''சீனாவின் துயரம்'' என்று குறிப்பிட்டனர். 
              ஆனால் ''இன்று'' அதே மஞ்சள் ஆற்றினைப் பற்றியோ - சீனாவின் துயரம் என்பது பற்றியோ நாம் பாடப் புத்தகத்தில் பார்க்க முடிகிறதா...? ''துயரம்'' என்பதையே சீனர்கள்  அழித்துவிட்டார்கள். சீன சோஷலிச அரசு இயற்கையின் சீற்றத்தை தனது  கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது தான் அதற்கு காரணம். சீன நாட்டின் ஆட்சியாளர்கள், அந்த இயற்கையின் சீற்றத்தை - பாய்ந்து வரும் வெள்ள நீரை திசை மாற்றிவிட்டார்கள். மஞ்சள் ஆற்றின் பாதையை மூன்றாகப் பிரித்து மற்றப் பகுதிகளில் ஓடும் சிறிய ஆறுகளோடு இணைத்துவிட்டனர். மேலும் அந்த வெள்ள  நீரை பெரிய பெரிய குழாய்கள் மூலமும், வாய்க்கால்கள் மூலமும்  தண்ணீர் பற்றாக்குறையுள்ள மற்ற பகுதிகளுக்கு திருப்பிவிட்டனர்.  ( ஆனால் வீராணம் குழாய்கள் போல் ஊழல்கள் நடக்கவில்லை ) அப்படியாக அனுப்பப்பட்ட தண்ணீர் வயல்களில் பாய்ந்தது. அதனால் அந்தப் பகுதிகளில் விவசாயம் செழித்து வருகிறது. அதனால் ''சீனாவின் துயரம்'' நீங்கி இன்று சீன மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள். இது போன்ற நாடு சார்ந்த - மக்கள் சார்ந்த சாதனைகள் ஒரு சோசலிச நாட்டில் தான் நாம் பார்க்கமுடியும்.
            இதே நம்ப நாடாக இருந்தால் நம் ஆட்சியாளர்கள்  அந்த ஆற்றையே பெப்சி - கோகாகோலாவிற்கு இந்நேரம் விற்றிருப்பார்கள் 
                 உலகத்திலேயே இந்தியா அமெரிக்க ஏகாதிபத்தியம்  கொள்ளையடிக்க ஏற்ற இரண்டாவது மிகப்பெரிய வளம் கொழிக்கும் சந்தை  எது என்று கேட்டால் அது இந்தியா தான். முதலாவது பெரிய சந்தை சீனா. ஆனால் சீனா ஒரு சோஷலிச நாடு என்பதால் அந்த நாட்டில் கடுமையான சட்டங்கள் இருப்பதால்  கொள்ளையடிப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. அங்கே அரசு நிர்ணயிக்கிற விலையில் தான் பொருட்களை விற்றாக வேண்டும். இலாப நோக்கில் அதிக விலைக்கு விற்றால் சீன ஆட்சியாளர்களே  அந்த பலசரக்கு கடையை மூடி திருப்பியனுப்பி வைத்து விடுவார்கள். அங்கே எங்குமே மக்களை ஏமாற்றும் கொள்ளைகளுக்கு அனுமதி கிடையாது. அதேப்போல் அங்கே வேலை செய்யும் சீன தொழிலாளர்களுக்கு கடுமையான தொழிலாளர் சட்டம் பாதுகாப்பாக இருக்கிறது. அதனால் இந்தியாவைப் போல் அங்கே உள்ள தொழிலாளர்களுக்கு குறைந்த சம்பளத்தை கொடுத்து அவர்களை மணிக்கணக்காக வேலை வாங்கி  பிழிந்தெடுக்க முடியாது. அதுமட்டுமல்லாது, சீனாவில் அந்நிய நேரடி  முதலீட்டிலும் கடுமையான சட்டம் உள்ளது. அங்கே அந்நிய நேரடி முதலீடு என்ற பெயரில் கொஞ்சப் பணத்தை முதலீடாகப்  போட்டு, அதனால் வரும் இலாபத்தை உடனே தங்கள் நாட்டிற்கு அள்ளிக்கொண்டு சென்றுவிட  முடியாது. அந்நிய நேரடி முதலீட்டில் கிடைத்த இலாபத்தை மீண்டும் சீனாவிலேயே தான் முதலீடு செய்யவேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. இப்படியாக தங்கள் தேசப் பொருளாதாரத்தின் மீது அக்கறை கொண்டுள்ள சீனா தொழிலாளர்கள் சட்டம், பொருட்கள் விலை நிர்ணயச் சட்டம், அந்நிய நேரடி முதலீட்டுச் சட்டம் போன்ற சட்டங்களை தன்னகத்தே கொண்டுள்ளதால், அங்கே கொள்ளை இலாபத்திற்கு வாய்ப்பும், வழியும் இல்லாததால், அடுத்து அமெரிக்காவின் கண்ணை உறுத்துகிற நாடு இந்தியா தான்.
           இந்தியாவும் இதற்கு முன்பு, கடுமையான சட்டங்களை கொண்ட நாடாகத் தான் இருந்தது. ஆனால், இந்த தேசத்தின் பாதுகாப்பாக - பொருளாதாரத்தின் பாதுகாப்பாக - தொழிலாளர்களின் பாதுகாப்பாக  இருந்த இந்த சட்டங்களை எல்லாம், நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியும், பின்பு வந்த வாஜ்பாய் தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சியின் ஆட்சியும், தற்போது பொறுப்பிலிருக்கும் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சியையும் நீர்க்கச் செய்துவிட்டன. சட்டங்களெல்லாம் வெறும் சட்டங்களாகவே இருக்கின்றன. ஆனால் அந்த சட்டங்கள் எல்லாம் இந்தியாவில் முதலீடு செய்யும் அந்நிய முதலாளிகளுக்கு மட்டும் பாதுகாப்பாகவே இருக்கின்றன.
              நம் நாட்டில் அப்படியாக வளம் கொழிக்கும் துறைகளில் ஒன்று தான் சில்லறை வர்த்தகத்துறை என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இது இந்திய பொருளாதாரத்தின் உறுதியான பொருளாதாரத் தூண்களில் ஒன்றாகவே விளங்குகின்றது என்றால் அது மிகையாகாது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14% பங்களிப்புடனும், மொத்த தொழிலாளர்களில் 7% பேர்களையும் ஓங்கி வளர்ந்த மிகப்பரிய சந்தை இது தான். அதனால் தான் உலக அளவில் உள்ள  பிரம்மாண்டமான முப்பது சந்தைகளில் இரண்டாவது பெரிய ஈர்க்கத்தக்க சந்தை இந்தியா தான் என்று எ.டி.கர்னி நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது
              இந்தியாவின் மொத்த வர்த்தகத்தில் 98% அமைப்புசாரா வடிவத்திலும்,   2%  அமைப்பு சார்ந்த வர்த்தகமாகவும் நடைபெறுகின்றன.  நம் நாட்டில் சில்லறை வர்த்தகம் என்பது  ஆண்டொன்றுக்கு 40% வேகத்தில் வளர்ச்சிபெற்று வருகிறது. இதில் உணவுப்பொருள் விற்பனை மட்டுமே 63% ஆகும். இப்போது 28 பில்லியன் டாலர்களில் இருக்கும் அதன் வணிகம் 2020ல் 260 பில்லியன் டாலர்களாக அதிரிக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. இந்த விஷயம் தான் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு உறுத்தலாக இருக்கிறது.
          இந்தியாவில் அமைப்பு சார்ந்த வர்த்தகப் பிரிவில்  5,00,000 பேர் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர். அமைப்புசாராப் பிரிவில் 4 கோடிக்கும் அதிகமானோர்  வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர். இந்தியாவில் 1.25 கோடிக்கு மேல்  சில்லறை விற்பனை கடைகள் உள்ளன, இவற்றில் 4% மட்டுமே 500 சதுர அடிக்கு மேல் உள்ளவையாகும். மற்றவை எல்லாம் சிறு சிறு விற்பனைக்கடைகளாகும். இந்த அமைப்புசாரா சில்லரைவணிகத்தில் மட்டுமே ஆண்டுக்கு ரூ.7,35,000 கோடிக்கு மேல் விற்பனையாகிறது என்பதைப் பார்க்கும் போது அமெரிக்க ஓநாய்க்கு நாக்கில் எச்சில் ஊருகிறது.
             இந்நிலைலையில், மத்திய அரசின் தாராளமயக் கொள்கையின் விளைவால், அந்நிய சில்லரை வர்த்தக  நிறுவனங்கள் இந்தியச் சில்லறை வர்த்தகத்தைக் கைப்பற்றும் நோக்குடன்
இந்தியாவுக்குள் நுழையத் துடிக்கின்றன. இந்திய ஆட்சியாளர்களும் இரத்தினக் கம்பளம் போட்டு வரவேற்கின்றனர்.
               சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி  முதலீட்டால் நுகர்வோருக்கு 5-10% விலைகள் குறையும் என்றும்,  சில்லறை விற்பனை நிலையங்களிலும் பொருள் போக்குவரத்துத் துறையிலும் ஏராளமானவர்களுக்கு வேலை கிடைக்கும் என்றும்,  விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கு 10-30% கூடுதல் விலை கிடைக்கும் என்றெல்லாம் ஆட்சியாளர்கள் அடுக்கடுக்காக கூறி நம் நாவில் தேனைத் தடவுகிறார்கள். 
                     ஆனால் காலகாலமாக - பரம்பரைப்பரம்பரையாக - குடும்பம் குடும்பமாக சில்லறை வர்த்தகம் செய்பவர்களும், இந்த வர்த்தகத்திற்கு பொருட்களை உற்பத்தி செய்து வழங்கி வரும் இந்திய சிறு உற்பத்தியாளர்களும், இந்திய விவசாயப் பொருள் உற்பத்தியாளர்களும், இந்த சில்லறை வர்த்தகத்தை சுற்றி வியாபாரம் செய்கின்ற பெட்டிக்கடை வியாபாரிகளும், இந்த சிலரை  வர்த்தக நிறுவனங்களில் வேலைசெய்யும் ஆண்களும் - பெண்களும், சுமைத்தூக்கும் தொழிலாளர்களும் - கூலித்தொழிலாளர்களும் - தட்டு வண்டி முதல் லாரி வரை ஓட்டும் தொழிலாளர்களும், சிறு தொழிற்சாலைகளில்  வேலைசெய்யும் தொழிலாளர்களும், விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கக்கூடிய வியாசாயக்கூலித் தொழிலாளர்களும் - என இந்த தேசத்தை சார்ந்த பலகோடி மக்களின் வாழ்வாதாரம் என்பது இந்த சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி நுழைந்தால் கேள்விக்குறியாகிவிடும் என்பது தான் உண்மை. வருமானம் இல்லாமல் இவர்களும் இவர்கள் வீட்டுக் குழந்தைகளும் பட்டினிக் கிடந்து சாகவேண்டியது தான். இதை நிறைவேற்றத் தான்  தான் இலாப வெறிப்பிடித்து அலையும் ஏகாதிபத்தியமும், ஆட்சியாளர்களும், பெருமுதலாளிகளும் துடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
            வால்மார்ட் மட்டுமல்லாமல்  ஸ்வீடனின் எச் & எம், ஐகியா, ஜப்பானின் உனிக்டோ, பிரிட்டனின் டாப்ஷாப், அமெரிக்காவின் ஆப்பிள், போலோ. அபெர்க்ரோம்பீ, பெஸ்ட் பை போன்றவை இந்தியாவில் நுழைந்து கொள்ளையடிக்கக்  காத்திருக்கும் சில்லறை வர்த்தக சங்கிலித் தொடர் நிறுவனங்களில் முக்கியமானவை. 

           இவ்வளவு நடந்துகொண்டிருக்கிறது இந்திய மக்கள் என்ன செய்யப்போகிறார்கள்...? என்பது தான் நமது கேள்வி.                                  

1 கருத்து:

VENKAT சொன்னது…

I CAN HAND THE CLAP NO SOUND
WE CAN CLAP THE HAND MANY SOUND.
BUT ONE THINK SURE WE WILL GET FREEDOM ONCE IN INDIA