புதன், 27 ஏப்ரல், 2011

குற்றவாளிக்கூண்டில் புதுச்சேரி துணைநிலை ஆளுனர் !














ஆளுநர் பதவி - ஓர் அறிமுகம் :

பொதுவாக நாட்டிலுள்ள படித்தவர்கள், பண்பாளர்கள், உயர்பதவியிலிருந்து - பொதுவாழ்க்கையிலிருந்து ஓய்வுபெற்றவர்கள்  போன்றவர்களுக்கு மரியாதை நிமித்தமாக கொடுக்கப்படுவதற்கும்...
அதே சமயத்தில் மத்திய அரசின் சார்பில்  மாநில அரசுகளை கண்காணிக்கும்  கண்காணிப்பாளர்களை நியமிப்பதற்காகவும் இந்த மாநில  ஆளுனர் பொறுப்பு என்பது இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது.  அரசியல் அமைப்புச்சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட பதவிஎன்பதால்  அதற்குரிய மரியாதையை நாம் அளிக்கவேண்டியிருக்கிறது.  மற்றபடி ஆளுனர் பதவி என்பது ஆட்டுக்கு வேண்டாத தாடியை போன்றது தான்.
                  அனால் காங்கிரஸ்காரன் சட்டத்தை தனக்கு சாதகமாக குறுக்குவழியில் பயன்படுத்துவதில் கெட்டிக்காரன். இந்த கவர்னர் பதவியை ரெண்டு விஷயங்களுக்கு பயன்படுத்திக்கொண்டான். ஒன்று - முக்கியமாக தனக்கு வேண்டாத அரசுகளை - எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் அரசுகளை கண்காணிப்பதற்கும் மிரட்டுவதற்கும் இந்த கவர்னர் பதவியை இன்று வரை பயன்படுத்திவருகிறது காங்கிரஸ் கட்சி. இன்னொன்று - காங்கிரஸ் கட்சியில் பணிபுரிந்து வயதான பின் தலைமைக்கு குடைச்சல் கொடுக்கும் மூத்த கட்சித்தலைவர்களுக்கு, கட்சியிலேயே இருந்துகொண்டு கோஷ்டிபூசல் செய்துகொண்டிருக்கும் தறுதலைகளுக்கு  இந்த கவர்னர் பதவியை கொடுத்து வாயில் பூட்டுப்போட்டு விடுவார்கள்... இப்படித்தான் இந்த பதவியினை காங்கிரஸ் கட்சி சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்றுவரையிலும் - இடையில் வந்த பாரதீய ஜனதா கட்சியும் பயன்படுத்திக்கொண்டு வருகிறார்கள்.  
                அப்படி வந்தவர்தான் இந்த குட்டி கவர்னர் இக்பால் சிங். 

யார் இந்த இக்பால் சிங் ?
                இவர் ஆரம்ப காலத்தில் பஞ்சாப் மாநிலத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்திருக்கிறார். அதில் அகில இந்திய பொறுப்பும் வகித்திருக்கிறார். பிறகு அவரது வளர்ச்சி என்பது காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியச் செயலாளர்களில்  ஒருவராக உயர்த்தி இருக்கிறது. 1992 முதல் 1998 வரை மாநிலங்களவை உறுப்பினர்களாக பணிபுரிந்திருக்கிறார். அப்போது தான் - பல நிதி மோசடிகளை செய்து, பல கோடி அளவிற்கு வருமான வரி ஏய்ப்பு செய்து, ஆயுத கடத்தல் - போதை பொருள் கடத்தல்- கொலை - கொள்ளை போன்ற சமூகவிரோத செயல்களை செய்து சம்பாதித்த   பல கோடி கறுப்புப் பணங்களை வெளிநாட்டு வங்கியில் பதுக்கிவைத்து இன்று மாட்டிக்கொண்டு டெல்லி திஹார் சிறையிலிருக்கும் சமூக விரோதி ஹசன் அலி கான் - உடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஹசன் அலி கான் தான் முறைகேடாக சேர்த்த பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் போடுவதற்கு - வெளிநாடு சென்றுவர பாஸ்போர்ட் பெறுவதற்கு 
இந்த குட்டி கவர்னர் இக்பால் சிங் 1997-ஆம் ஆண்டு  பெரிதும் உதவி செய்திருக்கிறார். அதற்கு கைமாறாக பல கோடிகள் கைமாறியிருக்கின்றன என்று சொல்லப்படுகின்றன. அதற்கான ஆதாரங்கள் வகையாக சிக்கி இருக்கின்றன என்றும் சொல்லப்படுகின்றன. அதனால் தான்  இன்று மத்திய  அமலாக்கப் பிரிவின் விசாரணையில் இக்பால் சிங்  குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறார். இது வரை மூன்று முறை விசாரணை நடந்திருக்கிறது. ஆனால்  புதுச்சேரியின்  தற்காலிக முதலமைச்சர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணா ராவ், கந்தசாமி, தலைமைச்செயலாளர்,  ஐ ஜி. போன்ற பரிசுத்தவான்கள் எல்லாம் இக்பால் சிங்  ஒரு "திருவாளர் .பரிசுத்தம்" என்றும் அவர் பதவி விலகத்தேவை இல்லை என்றும் இவர்களாகவே  தீர்ப்பு சொல்கிறார்கள் என்பது தான் புதுவைக்கு வந்த வெட்க கேடு.
                  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடது சாரிக்கட்சிகளும் மற்ற எதிர்கட்சிகளும் மாநில துணைநிலை ஆளுநர் தானாக பதவி விலகவேண்டும் அல்லது இந்திய குடியரசுத் தலைவர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று போராடிவருகிறார்கள். ஏப்ரல் 27 அன்று ஒரு நாள் கடையடைப்புக்கும் அறைகூவல் விடுத்து ஏற்பாடுகள் செய்து வருகின்றன.
அதே சமயத்தில் மாநில காங்கிரஸ் அரசும் காவல் துறையும் இந்த அறப்போராட்டத்தை ஒடுக்குவதற்கு புதுவையில் 144-தடை உத்தரவு போட்டிருக்கிறது என்பதும் வெட்க கேடானது.

புதுவையில் செய்த முறைகேடுகள்..
               இக்பால் சிங் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்ற நாளிலிருந்தே அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதும், முறைகேடுகள் 
செய்வதுமே அவருடைய முக்கியப் பணியாக இருந்து வந்திருக்கிறது. 
              (1)   கவர்னராக பதவி ஏற்க  வரும் போதே பஞ்சாப்பிலிருந்து ஓய்வுபெற்ற பொறியாளரான அவரது நண்பரையும் அழைத்துவந்து புதுவையில் ஐ ஏ எஸ் பதவிக்கு இணையான பொறுப்பில் அமர்த்தி இருக்கிறார்.  
              (2)   பஞ்சாப்பில் இவரது நண்பர் நடத்திக்கொண்டிருக்கும் பஞ்சாப் மொழி தொலைக்காட்சி சேனல் புதுவையில் கிடைக்கும் விளம்பர வருமானத்திற்காக புதுவை கேபிள் மூலம்  ஒளிபரப்பப்படுகிறது.
              (3)   இவரது இரண்டு மகன்களை பங்குதாரர்களாக கொண்ட சவுத் எஜுகேஷனல் டிரஸ்ட் என்ற பெயரில் காரைக்காலில் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்க ஏற்பாடுகள் செய்தார். அதற்கு வைத்திலிங்கம் தலைமையிலான காங்கிரஸ் அரசு காரைக்காலில் இடம் அளித்திருக்கிறது என்பது ஒரு அதிர்ச்சியான தகவல். 
                      அதுமட்டுமல்லாமல் மருத்துவக்கல்லுரி அமைப்பதற்கான தடையில்லா சான்றிதழையும் முதலமைச்சருக்கோ அமைச்சரவைக்கோ தெரியாமல் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது மிகப்பெரிய பயங்கரம். அப்படி முறைகேடாக சான்றிதழ் பெற்றதில் தவறில்லை என்று முதலமைச்சர் வைத்திலிங்கமும் மற்ற அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணா ராவும் கந்தசாமியும் சொல்வது என்பது வேடிக்கையானது. 
                       பார்வதி ஷா என்ற பெண் கவர்னர் மாளிகைக்குப் பக்கத்திலேயே இருக்கும் வீட்டிலேயே  பல ஆண்டுகளுக்கு முன்  அவரது கணவரின் தம்பியால் கொலைசெய்யப்பட்டு, பின் சமீபத்தில் அந்தக் கொலையாளியும் புதுவை சிறையிலேயே கொலைசெய்யப்பட்டான். எனவே பல ஆண்டுகளாக பூட்டியே இருந்த அந்த வீட்டை திறந்து அந்த மருத்துவக் கல்லூரிக்கான அலுவலகத்தை நடத்தியது என்பதும் மற்றுமொரு மிகப்பெரிய பயங்கரம்.
                       இப்படியாக இக்பால் சிங் பல்வேறு வகையான முறைகேடுகளை செய்ததும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதும் வெட்டவெளிச்சமாக தெரிந்தும், மத்திய அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. முதலமைச்சர் வைத்திலிங்கமோ இக்பால் சிங்கை எதிர்த்து போராடும் எதிர்கட்சிகள் மீது சீறிப் பாய்கிறார். 
                      அதுமட்டுமல்ல.. இவ்வளவு நடந்தும்  சீக்கியர்கள் 100-150-க்குள் மட்டுமே வாழும் புதுவையில் சீக்கியக்கோயிலான குருத்வாராவை கட்டுவதற்கு முதலமைச்சர் வைத்திலிங்கம் அரசு நிலத்தை ஒதுக்கி இருப்பது என்பது யாரை ஏமாற்றுவதற்கு என்று  தெரியவில்லை.
                                                                     

2 கருத்துகள்:

தோழர் சொன்னது…

தோழர் ராம்ஜி வணக்கம். தங்களின் பதிவு பிரமாதம். நீண்ட வரலாற்றை மிகச்சுருக்கமாக பதிவு செய்திருக்கின்றீர்கள். இதைப் படிக்கும்போது காங்கிரசின் கேவலமான முகம் எனக்கு ஒரு தமிழ் சினிமாவின் நையாண்டிக்காட்சியை நினைவுபடுத்துகிறது. நடிகர் விவேக் மயில்சாமியைப் பார்த்து பொது மேடையில் "பன்றி, நாயே, உனக்கு மானம், வெட்கம்,சூடு சொரணை எதுவுமே இல்லையா" எனக்கேட்பார். இவை ஒவ்வொரு வார்த்தைக்கும் மயில்சாமி சிரித்துக்கொண்டே பதிலளிப்பார். பார்வையாளர்கள் கைகொட்டிசிரிப்பார்கள். ....எப்படி..ஈ..ஈ ..ஈ ஈ ஈ தொடரட்டும் உமது பணி. நன்றி.

puduvairamji.blogspot.com சொன்னது…

தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி தோழர்..