வெள்ளி, 22 ஏப்ரல், 2011

வாசிப்பை நேசிப்போம் - ஏப்ரல் 23 - உலக புத்தக தினம்இன்றைக்கு நம் நாட்டில் மக்களுக்கு புத்தக வாசிப்பு பழக்கம் என்பது குறைந்துகொண்டே போகிறது. குறிப்பாக இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் வாசிப்பு பழக்கமே இல்லாமல் போய்விட்டது. அதற்கு இன்றைக்கு இருக்கின்ற கல்வி முறை, கணினி போன்ற அறிவியல் வளர்ச்சி, தொலைக்காட்சியின் ஆக்கிரமிப்பு  இவைகள் தான் வாசிப்பு குறைந்ததற்கான காரணங்களாக அறியப்படுகின்றன. நாமெல்லாருமே பொதுவாக வெளியூர்களுக்கு சுற்றுலா போவதற்கு நிறைய செலவுகள் செய்கிறோம். திரைப்படங்கள் பார்ப்பதற்கு நிறைய செலவுகள் செய்கிறோம். பண்டிகைகள் திருவிழாக்கள் என நிறைய செலவுகள் செய்கிறோம். உணவுசாலைக்கு சென்று நாவிற்கு சுவையான உணவுகளை சாப்பிடுவதற்கு நிறைய செலவு செய்கிறோம். ஆனால் பத்து ரூபாய் கொடுத்து ஒரு புத்தகம் வாங்குவதற்கு தயங்குகிறோம். அதற்காக மேலே சொன்னவைகளெல்லாம் தவறான செயல்பாடுகள் என்று சொல்லவில்லை. குடும்ப உறுப்பினர்களிடையே இணக்கமான உறவை வளர்ப்பதற்கு, குழந்தைகள் மகிழ்ச்சியாய் பொழுதை கழிப்பதற்கு, எந்திரமயமான வாழ்க்கைக்கு நடுவே ஒரு மாறுதலுக்கு அந்தமாதிரியான செயல்பாடுகள் அவசியம் தேவை தான். அதேபோல் புத்தகம் வாங்குவதிலும் புத்தகத்தை வாசிப்பதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் நாம் பழக்கப்படுத்திக்கொள்ளவேண்டும். நம் குழந்தைகள் மத்தியிலும் வாசிப்பு பழக்கத்தை உருவாக்க  வேண்டும். நல்ல புத்தகங்கள் தான் மிக சிறந்த நண்பர்களாக இருக்கமுடியும். 
               இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து போன்ற நாடுகளில் இன்றைக்கும் அங்குள்ள குழந்தைகளுக்கு புத்தகங்களை வாங்கி வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கி வளர்க்கிறார்கள். அதனால் தான் இங்கிலாந்து அயர்லாந்து நாடுகளில் மட்டும் பல ஆண்டுகளாய் ஆண்டுதோறும் மார்ச் 5 அன்று உலக புத்தக நாள் கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம் குழந்தைகளுக்கு நிறைய புத்தகங்களை பரிசாக அளிப்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது பொதுவாகவே அவர்கள் மற்றவர்களுக்கு பரிசளிப்பதேன்றால் புத்தகங்களை மட்டுமே வழங்குவார்கள். இந்த இரு நாடுகளை தொடர்ந்து தான் சர்வதேச அமைப்பான யுனெஸ்கோ நிறுவனம் ஏப்ரல் 23 ஐ உலக புத்தக தினமாக அறிவித்தது. இன்றைக்கு நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இந்த புத்தக தினம் கொண்டாடபடுகிறது.
நாமும் இத்தினத்தில் நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி நம் வீட்டு குழந்தைகளுக்கு பரிசாக அளிப்பதன் மூலம் சிறந்த முறையில் கொண்டாடுவோம். புத்தகங்களை மறந்த - வாசிப்பை மறந்த சமூகம் அழிந்து போகுமென்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். எனவே நம் சமூகத்தை சிறந்த முறையில் பாதுகாக்க நம் வருங்கால தலைமுறையினருக்கு நல்ல வழிகாட்ட வாசிப்பை நேசிப்போம்.. # வாசிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடமும் இளைஞர்களிடமும் உருவாக்கி வளர்ப்போம். # கண்டிப்பாக வீட்டுக்குகொரு நூலகம் அமைப்போம். # புத்தகங்களை மட்டுமே பரிசாக வழங்குவதை வழக்கமாக கொள்வோம்.# புத்தகங்களை எடைக்கு போட்டு காசாக்காமல் பொக்கிஷமாய் பாதுகாப்போம்.
நல்ல புத்தகங்களுக்கு பாரதி புத்தகாலயம் வெளியிடும் புத்தகங்கள் மிகவும் சிறப்பானவை.

கருத்துகள் இல்லை: