சனி, 12 செப்டம்பர், 2015

மானுடம் போற்றும் மாமனிதன் திப்புசுல்தான்...!

           

           இந்திய தேசத்தின் ''முதல் சுதந்திரப் போராட்ட வீரன்'' என்றும், உலகிலேயே ''முதல் ஏவுகணை விஞ்ஞானி'' என்றும் போற்றப்படும் மாவீரன் திப்புசுல்தான் பற்றி இன்றைக்கு மீண்டும் இந்துத்துவவாதிகள் உண்மைக்கு மாறான - பொய்யான தகவல்களை பரப்ப தொடங்கியுள்ளனர். 
          திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் திப்புசுல்தான் பற்றிய திரைப்படத்தில் திப்புசுல்தானாக நடிக்கயிருப்பதாக செய்தி வெளியாகியிருந்தது. அதை கேள்விப்பட்ட ''இந்து முன்னணியை'' சேர்ந்த  இராமகோபாலன் பொங்கி எழுந்துவிட்டார். ''திப்புசுல்தான் இந்துக்களுக்கு எதிரானவர். இந்துக்களை எல்லாம் இஸ்லாமியர்களாக மதம் மாற்றியவர்'' என்றெல்லாம் பொய்யான தகவல்களை அள்ளிவீசி, அந்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்கக்கூடாது என்று தடைவிதித்து, அப்படியே நடித்தாலும் தமிழகத்தில் திரையிடக்கூடாது என்ற இன்னொரு தடையையும் விதித்து ''வீரத்துறவி'' இராமகோபாலன் வீரமாக முழங்கியிருக்கிறார். திப்புசுல்தான் போன்ற இஸ்லாமிய மன்னர்களைப் பற்றி இந்துத்துவவாதிகள் அவதூறு பேசுவது  என்பது புதிதல்ல. வரலாற்றை மாற்றி சொல்வதும், தவறாக சொல்வதும் தான் இவர்களது வழக்கம். ஆனால் திப்புசுல்தானைப் பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகளை இன்றைய இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் கொண்டுசெல்லவேண்டும்.

  மாவீரன் திப்புசுல்தான்....!             

            மாவீரன் திப்புசுல்தான் 1750 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதி ஒரு இந்தியனாக பிறந்து, 1782 ஆம் ஆண்டு தனது தந்தையார் ஹைதர் அலி இறந்த பிறகு மைசூர் பேரரசின் மன்னனாக முடிசூட்டப்பட்டு 1799 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் தேதி ஆங்கிலேயர்க்கு எதிரான நான்காம் மைசூர் போரில் ஆங்கிலேயரின் சூழ்ச்சியால் கொல்லப்பட்டு மரணமடைந்தார். அவர் வாழ்ந்தது வெறும் 49 ஆண்டுகள் தான். தனது 32 ஆவது  வயதில் மன்னராக பொறுப்பேற்றார். பதினேழே ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு சிறப்புமிக்க நிகழ்வுகளை நடத்திக்காட்டியவர் தான் மாவீரன் திப்புசுல்தான். 
             ஆங்கிலேயர்கள் இந்த தேசத்தை ஆண்டபோது, இந்தியாவில் ஆங்காங்கே ஆண்டுகொண்டிருந்த மன்னர்களெல்லாம் ஆங்கிலேயர்களுக்கு அடிமை விசுவாசம் காட்டியபோது, திப்புசுல்தான் தான் நாட்டிலேயே முதன்முதல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரமுடன் தனது வாளை சுழற்றியவன். இந்த தேசத்தின் ''முதல் சுதந்திர போராட்டவீரன்'' என்ற பெருமைக்குரியவன். ஆங்கிலேயர்களுக்கெதிராக தன் நாட்டு மக்களை தட்டி எழுப்பியவன். தங்களை அடிமைப்படுத்தி ஆண்டுகொண்டிருக்கும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்களுக்கு கோபம் வரவேண்டும் என்பதற்காகவே, தனது அரண்மனையின் வாசலில் ''வெள்ளைக்காரனை புலி ஒன்று அடிப்பது'' போன்ற இயங்கும் பொம்மையை வைத்திருந்தான். அதைப்பார்த்தாவது மக்களுக்கு ஆங்கிலேயர்களின் மீது கோபம் எழட்டுமே என்று முயற்சி செய்தான். இன்றும் அந்த பொம்மை இலண்டன் அருங்காட்சியகத்தில் இருக்கிறது. திப்புசுல்தான் ஆங்கிலேயர்களுக்கு எதிராக செய்த ''முதலாம் மைசூர் போர்'' தான், இந்தியாவின் ''முதல் சுதந்திர போராட்டம்'' என வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். இப்படியாக ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர் தான் திப்புசுல்தான். இதனால் அவர் ''மைசூரின் புலி'' என்ற சிறப்பு பெயர் பெற்றார். 
            அது மட்டுமல்ல உலகிலேயே ஏவுகணையை கண்டுபிடித்து உருவாக்கி போரில் பயன்படுத்தியவர் திப்புசுல்தான் தான். ஏவுகணையை உருவாக்க விஞ்ஞான தொழில்நுட்பத்தை பயன்படுத்திய தலைசிறந்த விஞ்ஞானியாகவும், இன்றைய ஏவுகணைகளுக்கு எல்லாம் முன்னோடியாகவும் திகழ்ந்திருக்கிறார் என்பது தான் உண்மை. இவர் பயன்படுத்திய பீரங்கிகளையும், ஏவுகணைகளையும் கண்டு மிரண்டு போன ஆங்கிலேயர்கள், அதற்கான தொழில்நுட்பத்தை இவரிடமிருந்து தான் திருடிச்சென்றனர் என்பதும் உண்மை. இன்றைக்கும் அமெரிக்காவில் உள்ள நாசாவில் பீரங்கி மற்றும் ஏவுகணையுடன் திப்புசுல்தானின் படத்தை வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதை நேரில் கண்ட அப்துல் கலாம் அவர்களே இதை பெருமையுடன் குறிப்பிட்டிருக்கிறார். 
          திப்புசுல்தான் ஒரு இஸ்லாமியனாக வாழ்ந்தாலும், பிற மதத்தினருக்கு மதிப்பளித்தார். ஸ்ரீரங்கப்பட்டினம் அவரது பேரரசின் தலைநகராக விளங்கியதிலிருந்து  திப்புசுல்தானின் மதநல்லிணக்கத்தை புரிந்துகொள்ளலாம்.  இவரது ஆட்சியில் இந்துக்கள் உட்பட பிற மதத்தவர்கள் சுதந்திரமாக செயல்பட்டனர் என்பதும்,  அவரவர் வழிபாட்டு முறைகளுக்கு மதிப்பளிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. மைசூர் பேரரசில் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் இருந்த ரங்கநாதர் கோயில் உட்பட 250க்கும் மேற்பட்ட இந்து கோயில்களின் வளர்ச்சிக்கு திப்புசுல்தான் தனது கஜானாவிலிருந்து மானியம் வழங்கியிருக்கிறார். தனது அரண்மனைக்கு அருகிலேயே ரங்கநாதர்  கோயில் அன்றாட  வழிபாட்டுடன் இயங்கி வந்ததை அனுமதித்தார். அந்த கோயிலில் ஆறு கால பூஜைக்காக மணி அடிக்கப்படுவதை கவனித்து வந்த திப்புசுல்தான், ஒரு நாள் மணியோசை கேட்காததை கவனித்து, அரண்மனை காவலாளியை அவர் அழைத்துக் கேட்க, அந்த மணி அறுந்து கீழே விழுந்து உடைந்துவிட்டது என்று அந்த காவலாளி சொல்ல, அரண்மனை கஜானா மூலம் புதிய மணி  ஒன்றை வாங்கி கோயில் வழிபாட்டிற்கு கொடுத்திருக்கிறார். இவைகளெல்லாம் திப்புசுல்தானின் மதநல்லிணக்கத்திற்கு மிகசிறந்த உதாரணம் ஆகும். ஆனால் அதே சமயத்தில் கோயில்களில் நடத்தப்படும் நரபலியை திப்புசுல்தான்  தடுத்தும் இருக்கிறார். 
             அதுமட்டுமல்ல இவரது ஆட்சியில் நாட்டில் விவசாயம்  வளர்ச்சி அடைந்திருக்கிறது.   விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்கு  திப்புசுல்தான் தனது கஜானாவிலிருந்து மானியம் வழங்கியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
            வெல்லமுடியாத மாவீரனாக திகழ்ந்த திப்புவை வீழ்த்துவதற்கு ஆங்கிலேயர்கள்  திப்புவின்  அதிகாரிகள் சிலருக்கும், படைவீரர்கள் சிலருக்கும் இலஞ்சம் கொடுத்து நயவஞ்சகமாக  தங்களது வலையில் விழச்செய்து, 1799 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் தேதியன்று  நடந்த நான்காம் மைசூர் போரில் ஆங்கிலேயர்கள் மாவீரன் திப்புசுல்தானை சூழ்ச்சியால் துப்பாக்கி குண்டுகளால்  சுட்டு கொன்றுவிட்டார்கள். போர்க்களத்தில் குண்டடிப்பட்டு கையில் போர்வாளுடன் மண்ணில் வீழ்ந்து கிடந்த திப்புசுல்தானின் உடலை நெருங்கவே ஆங்கிலேயப்  படைவீரர்கள் அஞ்சி நடுங்கினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றினர். கூடவே அவர் பயன்படுத்திய வாளையும் கைப்பற்றினர்.  
              திப்புவைத்தான் தாங்கள் சுட்டுக்கொன்றோமா என்பதை உறுதி செய்ய அவரது உடலையும், உடைகளையும் பரிசோதனை செய்தனர். அப்போது திப்பு கை விரலில் அணிந்திருந்த மோதிரம் அவர்களுக்கு ஆச்சரியத்தையும், சந்தேகத்தையும்  அளித்தது. அவர் அணிந்திருந்த மோதிரத்தில் ''ராம்'' என்று இந்தி மொழியில் பொறிக்கப்பட்டிருந்தது. திப்புவின் மதநல்லிணக்கத்திற்கு இதுவே மிகப்பெரிய சான்றாகும். ''ராம்'' மோதிரத்தை பார்த்த ஆங்கிலேய படைவீரர்களுக்கும், ஆங்கிலேய  அதிகாரிகளுக்கும் தாங்கள் கொன்றது  திப்புவைத்  தானா அல்லது திப்புவைப் போன்ற வேறு படைவீரனையா  என்ற சந்தேகம்  வந்துவிட, திப்புவின் உடலை ''டி என் ஏ பரிசோதனை'' ( DNA Test ) செய்துபார்த்து, தங்களால் கொல்லப்பட்டது திப்புசுல்தான் தான் என்பதை உறுதி செய்தனர். உலகிலேயே முதன்முதல் டி என் ஏ பரிசோதனை செய்தது திப்புவின் உடல் தான்  என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. 

             பின்னர் திப்புவை கொன்ற உற்சாகத்தில் திப்புவின் அரண்மனையையும் ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். கைப்பற்றிய திப்புவின் அரண்மனைக்குள்ளே சென்றபோது, ஆங்கிலேயர்களுக்கு இன்னொரு ஆச்சரியம் காத்திருந்தது. திப்புவின் அந்த பிரம்மாணடமான அரண்மனைக்குள்ளே மன்னர் உல்லாசமாக இருப்பதற்கு பெண்கள் மட்டுமே இருக்கக்கூடிய ''அந்தப்புரம்'' என்ற ஓர் இடமே இல்லாதது கண்டு ஆச்சரியப்பட்டு போயினர்.  அந்த அளவிற்கு ''மிகுந்த ஒழுக்கத்தோடும், பெண்களை மதித்தும் வாழ்ந்திருக்கிறான் திப்புசுல்தான்'' என்பதை அந்த அரண்மனை ஆங்கிலேயர்களுக்கு மட்டுமல்ல இந்த உலகத்திற்கே எடுத்துக்காட்டியது. 
            அதுமட்டுமல்ல அந்த அரண்மனை இன்னொரு ஆச்சரியத்தையும் கொடுத்தது. அந்த அரண்மனையில் திப்பு உருவாக்கி பயன்படுத்திய நூலகம் ஒன்று இருந்ததைப் பார்த்து ஆங்கிலேயர்கள் ஆச்சரியப்பட்டு போயினர். அங்கு இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட புத்தகங்களை கண்டெடுத்திருக்கிறார்கள். இஸ்லாமிய மதநூலான குரான் உட்பட சமூக அக்கறை கொண்டவர்கள், நாட்டுப்பற்றுக் கொண்டவர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் எழுதிய புத்தகங்களே அந்த நூலகத்தில் வைக்கப்பட்டிருந்தன. திப்புசுல்தான் புத்தக வாசிப்பு பழக்கம் உள்ள நல்ல பண்பாளர் என்பதையும் அந்த அரண்மனை எடுத்துக்காட்டியது. 
            திப்புசுல்தானை கொன்ற கொண்டாட்டத்தில் அங்கு கிடைத்த திப்புவின் வாள், மோதிரம், புலி பொம்மை, புத்தகங்கள் ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்து தங்கள் நாட்டிற்கு கடத்தி சென்றனர். 
         மேலே குறிப்பிடப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும், மக்களுக்கு சொல்லப்படாமல் மறைக்கப்பட்ட உண்மைகள் என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். அப்போது தான் இந்துத்துவவாதிகள் தரும் பொய்யான தகவல்களை தூக்கி எறியமுடியும்.  
           அடிமைப்பட்ட இந்தியாவில் ஒரு மன்னன் மாபெரும் வீரனாக மட்டுமல்லாமல், படித்தவனாக, அறிவுஜீவியாக, விஞ்ஞானியாக, நாட்டுப்பற்று உள்ளவனாக, நாட்டு மக்களின் மீது அக்கறை உள்ளவனாக, மத நல்லிணக்கம் உள்ளனாக, பெண்களை மதிப்பவனாக, தனிமனித ஒழுக்கமுள்ளவனாக வாழ்ந்திருக்கிறான். அப்படிப்பட்ட மாமனிதனாக திப்புசுல்தான் வாழ்ந்திருக்கிறான் என்பதை வரலாற்றில் பொன்னெழுத்துகளால் எழுதப்படவேண்டும். அதை இன்றைய இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுக்கவேண்டும்.         

4 கருத்துகள்:

நம்பள்கி சொன்னது…

1799-ல் DNA testing கண்டுபிடிச்சிட்டாங்களா? அதுவும் இந்தியாவில். இதை கண்டுபிடிதது 80-களில் இங்கிலாந்தில் என்று படித்த நியாபகம்!

rajadurai சொன்னது…

உடனடி பதிவு ; உண்மை பதிவு பாராட்டுக்கள் தோழர்.

Unknown சொன்னது…

அருமையான பதிவு

மலரின் நினைவுகள் சொன்னது…

ரஜினியைப் பற்றி ஏதாவது உளறினால் தம் பேரும் நியூஸ்ல வருமன்ற அரிப்பு தான் இது.