ஞாயிறு, 1 மார்ச், 2015

சென்னை சி.பி.எம் மாநாடு - ஆச்சரியப்பட்டுப்போன துப்புரவு தொழிலாளர்கள்..!

                    
          அண்மையில் சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21-ஆவது மாநில மாநாடு கடந்த 16-ஆம் தேதியிலிருந்து 19-ஆம் தேதி வரையில் நடைபெற்றது. மாநாட்டின் இறுதி நாளான 19-ஆம் தேதியன்று மாலை  சென்னை இராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மாநாட்டு பிரதிநிதிகள் மற்றும் பார்வையாளர்கள் மட்டுமல்லாது கட்சியின் விருப்பமுள்ள அனைத்து தோழர்களும், ஊழியர்களும் கலந்து கொண்ட மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  காலை 10 மணியிலிருந்தே வகை வகையான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு மாலை ஆறு மணிக்கு கட்சித்தலைவர்களின் சிறப்புரை வரை சிறு மணித்துளிகள் கூட வீணடிக்காமல் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
                  இந்நிகழ்ச்சிகளுக்கு காலையிலிருந்தே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும்  ஆயிரக்கணக்கான பேர் கூடிய வண்ணம் இருந்தார்கள். அந்த மைதானத்தில் வயிற்றுப்பசிக்கு குறைந்த விலையில் உணவும், குடிநீரும் மாநாட்டு வரவேற்புக்குழு மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது. அறிவுப்பசியை தீர்ப்பதற்கும் குறைவில்லாமல் ஏராளமான புத்தகங்கள் கால் பகுதி பொதுக்கூட்ட மைதானத்தில் குறைந்த விலைக்கு தாராளமாக கொட்டிக்கிடந்தன. ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த மைதானமோ மிகப்பெரிது. அங்கே ஆடம்பரமில்லாத மிகப்பெரிய பொதுக்கூட்டப் பந்தல். ப்ந்தலுக்குள்ளே பெரிய பொதுக்கூட்ட மேடை. பந்தலுக்கு உள்ளேயும் வெளியேயும் ஆயிரக்கணக்கான இருக்கைகள். பந்தலுக்கு வெளியே அமர்ந்திருப்பவர்களுக்கு மேடையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை காண்பதற்கு பந்தலின் இருப்பக்கமும் நேரடி ஒலி - ஒளிப்பரப்பு செய்யும் இரு பெரும் திரைகள். அப்பப்பா... ஏராளமான கூட்டம்.  மனைவி - மக்களுடன், குழந்தைகளுடன், நண்பர்களுடன் குடும்பம் குடும்பமாய் கூடிய கூட்டம். ஏற்கனவே வந்தவர்கள் அனைத்து இருக்கைகளையும் ஆக்கிரமித்து விட, நின்று கொண்டே பொதுக்கூட்டத்தை கவனித்தவர்கள் ஆயிரக்கணக்கானோர்.  கூட்டம் பெருகிப்போனதால் மைதானம் சிறுத்துப்போனது. ஆனால் கட்டுக்கடங்காத கூட்டமல்ல. ஆண்களும் பெண்களுமாய் கட்டுப்பாடுடன் கட்சிக்கடமை ஆற்றிய கூட்டம்.
               மக்கள் கூடும் இடம் என்பதால், கடலை, சம்சா போன்ற திண்பண்டங்களும், உணவுப்பொட்டலங்களும், டீ - காபியும் மைதானம் முழுதும் பரவலாக விற்கப்பட்டன. வந்திருந்த தோழர்களும், பொதுமக்களும் அவைகளை வாங்கி சாப்பிட்டுவிட்டு மைதானம் முழுதும் இரைத்து போட்டிருந்தனர். அவைகளை அந்த மைதானத்தை சுத்தம் செய்வதற்கு அமர்த்தப்பட்ட துப்புரவு தொழிலாளிப் பெண்கள் ஐந்தாறு பேர் மைதானத்தில் போடப்பட்ட குப்பைகளை சுத்தம் செய்துகொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அவர்கள் வெளிப்படுத்திய கருத்துகள் தான் அந்த மாநாட்டின் ''ஹைலைட்'' என்று சொன்னால் மிகையாகாது. அவர்கள் நம்மிடையே சொன்ன தகவல் என்னவென்றால்....
           ''மற்றக்கட்சிகளின் மாநாடு அல்லது பொதுக்கூட்டம் என்றால், அங்கே மேடையில் தலைவர்கள் ஒருபக்கம் பேசிக்கொண்டிருப்பார்கள். அந்த மாநாட்டிற்கு அல்லது பொதுக்கூட்டத்திற்கு வந்தவர்கள் அந்த மைதானத்தில் ஆங்காங்கே குழு குழுவாக உட்கார்ந்துகொண்டு தண்ணி அடிச்சிகிட்டு இருப்பார்கள். பிரியாணி பொட்டலங்கள் இரைந்து  கிடக்கும். போதையில் மானங்கெட்டு மைதானத்திலேயே விழுந்தும் கிடப்பார்கள். கூட்டம் முடிந்து மைதானம் முழுதும் காலியான பிறகு, வந்திருந்தவர்கள் குடித்துவிட்டு காலியாக போட்டுவிட்டு சென்ற மது பாட்டில்களை பொறுக்கியெடுத்து சேர்ப்பதற்கே எங்களுக்கு நேரம் சரியாக இருக்கும். அப்படி எடுத்து சேர்த்து வைத்த காலி பாட்டில்களை கடையில் போட்டால், எங்களுக்கு 2000 - 3000ன்னு ஏதாவது துட்டு கிடைக்கும். நாங்க எல்லோரும் பிரிச்சி எடுத்துப்போம். ஆனால் இது என்ன வித்தியாசமான கூட்டமா இருக்கு. அந்த மாதிரியான காட்சிகளை இங்க பார்க்கவும் முடியல. இதுவரையில் ஒரு பாட்டில் கூட எங்களுக்கு கிடைக்கல'' என்று ஆச்சரியப்பட்டு சொன்னார்கள்.
               அதைக்கேட்டதும், எங்களுக்கு பெருமை தாங்கல... இந்த ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் தான் என் கட்சி எனக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறது என்று மனதிற்குள்ளே பெருமைப்பட்டுப் போனேன்.   

கருத்துகள் இல்லை: