புதன், 29 ஜூலை, 2015

கலாம் மீது இவ்வளவு கண்மூடித்தனமான பற்றுதலா...!



 

             பொதுவாக நம் தமிழ்நாட்டில் அரசியல் கட்சித்தலைவர்கள் மீதும், சினிமா நடிகர்கள் மீதும் தான் நம் இளைஞர்கள் கண்மூடித்தனமாக பற்றுதல் வைப்பார்கள். அவர்களின் தலைவர்கள்  அல்லது நாயகர்கள் இறந்துவிட்டால் கண்மூடித்தனமாக சாலைகளில் போகும் பேருந்து, கார் போன்ற வாகனங்களை அடித்து நொறுக்குவதும், சாலைகளில் போக்குவரத்துகளை நிறுத்துவது, கடை அடைப்புக்கு மிரட்டுவது, அடைக்காத கடைகளையும் அடித்து நொறுக்குவது போன்ற மக்கள் நலன் சார்ந்த - தேசபக்திமிக்க ஆக்கப்பூர்வமான வேலைகளில் ஈடுபடுவார்கள். இதைத்தான் அவர்களுக்கு அவர்களின் தலைவர்களும், கதாநாயகர்களும் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் என்பதை அனைவரும் அறிந்ததே. தங்களின் ஆதர்ஷ புருஷர்கள் இறந்துவிட்டால் அவர்கள் கற்றுக்கொடுத்ததுபோல் சரியாக கச்சிதமாக செய்துமுடிப்பார்கள். இப்படிப்பட்ட இளைஞர்களைத் தான் நாம் இதுவரை நேரில் பார்த்திருக்கிறோம். 
             ஆனால் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் நேற்று முன் தினம்   இரவு மறைந்த செய்தியை கேட்டதிலிருந்து அதே தமிழ்நாட்டு இளைஞர்கள் தங்களது சோகத்தை - துக்கத்தை சற்று வித்தியாசமாக அமைதியான முறையில் வெளிகாட்டுகிறார்கள். ஆனால் இவர்கள் எப்போதும் போல் வாகனங்களை நொறுக்கவில்லை. கடைகளை அடித்து உடைக்கவில்லை. கடைகள் அடைப்பைக் கூட சொல்லவில்லை. மாநிலம் முழுதும், ஊர் முழுதும், வீதிகளெங்கும், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் என பல இடங்களிலும்  நம் இளைஞர்கள் ஏராளமான - உயரமான கலாமின் படங்களை வைத்து,  மாலைகள் போட்டு, மெழுகுவத்திகள் ஏற்றி அமைதியான முறையில் அஞ்சலி செலுத்தியது என்பது நமக்கெல்லாம் சற்று வித்தியாசமாக தெரிந்தது. அந்த அளவிற்கு நம் இளைஞர்களை ஒழுக்கமிக்கவர்களாக அப்துல் கலாம் செதுக்கியிருக்கிறார் என்று சொன்னால் மிகையாகாது. 
             இதெல்லாம் ஒருபுறமிருக்க, முகநூல், ட்விட்டர் மற்றும் வாட்சாப் போன்றவற்றை பயன்படுத்தும் இளைஞர்கள் தங்களின் சிந்தனைக்கு தகுந்தாற்போல் கலாமுக்கு அஞ்சலி செய்கிறார்கள். முகநூலையும், ட்விட்டரையும், வாட்சாப்பையும் திறந்தால் போதும், கலாமின் படங்களும், வீடியோக்களும் அருவி போல வந்து கொட்டுகின்றன. விதவிதமாய் யோசிக்கிறார்கள். எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்பதே வியப்பாக இருக்கிறது. கலாமின் படங்களையும், நிகழ்வுகளையும் அலசி ஆராய்ந்து, உருவாக்கி பதிவிடுகிறார்கள். அதில் சிலவற்றை இங்கே நான் பதிவிட்டிருக்கிறேன் பாருங்கள். 
              அதுமட்டுமல்ல, கலாமின் மீதுள்ள பற்றுதல் காரணமாக இவர்கள் மனதில் தோன்றுகிறவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்த சொல்லி வாட்சாப்பிலும், முகநூலிலும் பதிவிட்டு, அதை உடனடியாக மற்றவர்களுக்கும் பகிர சொல்கிறார்கள். இதை பார்த்து படித்துவிட்டு ஆர்வக்கோளாறு காரணமாக அடுத்தவர்களுக்கு பகிர்ந்து அந்த செய்தியை நாடு முழுதும் பரப்பச் செய்கிறார்கள். அதில் வெறித்தனமான பற்றுதல் தான் இருக்கிறதே தவிர, அறிவுப்பூர்வமான சிந்தனை என்பது கிடையாது. அதையெல்லாம் படிக்கும் போது நம்மாலேயே தாங்கமுடியலடா சாமீ... என்று அவர்கள் மீது கோபம் தான் வருகிறது. அதில் சிலவற்றை  பாருங்கள்...!

தகவல் - 1 : அப்துல் கலாமின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய அரசை வலியுறுத்தவேண்டும். உடனடியாக இதை அனைவருக்கும் பகிருங்கள்.

தகவல் - 2 :  கலாம் பிறந்தநாளை மாணவர்கள் தினமாக அறிவிக்கவேண்டும். அனைவருக்கும் இதை பகிருங்கள். 

தகவல் - 3 : லெனின் உடலைப்போல கலாமின் உடலையும் பதப்படுத்தி பாதுகாக்கவேண்டும். இதை வலியுறுத்தி அனைவருக்கும் பகிருங்கள்.

தகவல் - 4 : பாம்பன் பாலத்திற்கு அருகில் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை போல கலாமுக்கு உயரமான சிலை வைக்கவேண்டும் என்பதை அனைவருக்கும் பகிருங்கள்.

தகவல்கள் - 5 : என்றைக்கும் இல்லாத வகையில் கலாமின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமெரிக்க வெள்ளை மாளிகையில் அமெரிக்க கொடி அரைக்கம்பத்தில் பறக்கிறது. நாமெல்லாம் இந்தியன் என்று சொல்வதற்கு பெருமைப்படவேண்டும். 
             இப்படியொரு வாசகத்தை படம் போட்டு பெருமைப்பட்டுக் கொண்டார்கள். ஆனால்  குடியரசுத்தலைவராக கலாம் பொறுப்பிலிருந்த போது  இதே அமெரிக்கா தான், கலாம் அமெரிக்காவிற்கு சென்றபோது அவரை ஒரு நாட்டின் குடியரசுத்தலைவர் என்று கூட பார்க்காமல், அவரது ஆடைகள் அனைத்தையும் அவிழ்த்து அரை நிர்வாணமாக்கி சோதனை செய்து அவமானப்படுத்தினார்கள் என்பதை இந்த இளைஞர்கள் மறந்துவிட்டார்கள் என்பது தான் வேதனையான நிகழ்வாகும்.
               இவைகளையெல்லாம் படிக்கும் போது  எப்படி இப்படிஎல்லாம் ரூம் போட்டு யோசிக்கிறார்கள் என்று ஒரு பக்கம் வியப்பாக இருந்தாலும், இன்னொரு பக்கம் இவர்கள் அறிவோடு சிந்திக்கமாட்டார்களா என்று எரிச்சலாகவும் கோபமாகவும் இருக்கிறது. இன்றைய இந்த இளைஞர்களுக்கு கலாமின் மீது இந்த அளவிற்கு பற்றுதலா கண்மூடித்தனமாக...? ஆச்சரியம் தான்.  

செவ்வாய், 28 ஜூலை, 2015

மரணதண்டனை மட்டுமே தீவிரவாதத்திற்கு தீர்வாகாது...!


               சோவியத் யூனியன் சிதறுண்டு போனபிறகு, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் புதிதாக நெருக்கம் ஏற்பட்டபிறகு, நம்  நாட்டில் குறிப்பாக வடமாநிலங்களில் அவ்வப்போது திடீர் திடீரென்று குண்டுகள்  வெடிக்க தொடங்கின.  அதன் விளைவாக அப்பாவி மக்கள் பலபேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால்  குண்டு வைத்தவர்கள் எவரும் அப்பாவி மக்களை சாகடித்ததை தவிர  இதுவரையில் எதையும் சாதிக்கவில்லை என்பதே உண்மை. இந்தியாவை பொருத்தவரை இது போன்ற குண்டுவெடிப்புகளில் இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும்  இந்துத்துவா தீவிரவாதம் அல்லது காவி தீவிரவாதம் இரண்டுக்குமே தொடர்பு இருக்கிறது. ஆனால் ஆட்சியாளர்களும், ஊடகங்களும் இஸ்லாமிய தீவிரவாதத்தையே முன்னிறுத்தி பிரதானமாக காட்டுவார்கள். 
              இந்த இரண்டு தீவிரவாதத்திற்கும் அதிகம் பாதிப்படைந்து சிதைந்து போனது மும்பை நகரம் தான் என்பதை நாடறியும். இன்றும் மும்பையில் மக்கள் அச்ச உணர்வோடு தான் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மை. இதில் இந்து  தீவிரவாத  அமைப்புகள் செய்கிற குண்டுவெடிப்புகள் மூடி மறைக்கப்பட்டுவிடும் அல்லது இஸ்லாமியர்கள் மீது பழி சுமத்தப்பட்டு திசைத்திருப்பப்படும். அதையும் மீறி ஹேமந்த் கர்கரே போன்ற நேர்மையான தீவிரவாத எதிர்ப்பு படை அதிகாரிகள் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடத்தப்பட்டது என்று திசைத்திருப்பியபோது, அந்த குண்டுவெடிப்புகளில்   தொடர்புடைய  இந்துத்துவா தீவிரவாதிகளை கண்டுபிடித்து கைது செய்து வெளியுலகத்திற்கு காட்டினார். அதையும் இந்த நாடு பார்த்துக்கொண்டு தான் இருந்தது.
        ஆனால் குண்டுவெடிப்புகளை நடத்தி அப்பாவி மக்களை கொன்ற அவர்கள் யாருக்கும் மரணதண்டனை அளிக்கப்படவுமில்லை. தண்டிக்கப்படவுமில்லை என்பதும் உண்மை. ஆனால் இஸ்லாமிய தீவிரவாதிகள் அகப்பட்டாலோ அல்லது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டாலோ, அவர்கள் இரகசியமாக விசாரிக்கப்பட்டு இரகசியமாகவே அவசர அவசரமாகவே தூக்கிலிட்டு கொன்றுவிடுவார்கள். ஆட்சியாளர்களுக்கும், நீதிமன்றத்திற்கும், ஊடகங்களுக்கும், இஸ்லாமிய தீவிரவாதிகள் என்றால் பழிவாங்கும் உணர்வு மேலோங்கிவிடும். அவர்களை தூக்கில் போட்டு கொன்று விட்டு தான் மறுவேலையை பார்ப்பார்கள். இவர்களுக்கு குண்டுவைக்க காசு கொடுத்து வேலைக்கு வைத்தவர்கள் யார் என்பது கூட அறியாமல் இந்த பாதக செயலை செய்து மாட்டிக்கொள்கிறார்கள். ஆனால் நமது சட்டம் எய்தவனை விட்டுவிட்டு அம்பை தான் தண்டிக்கும்.
             அப்படியாக தானாக வந்து காவல்துறையிடம் மாட்டிக்கொண்டவர் தான் இந்த யாகூப் மேமன். கடந்த 1993ஆம் ஆண்டு மார்ச் மாதம்  12ஆம் தேதி அன்று மும்பையில்  12 இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகளில்  257 பேர் கொல்லப்பட்டனர். சுமார்  700-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றனர். இந்த குண்டுவெடிப்பில் தொடர்புள்ளவராக கருதப்பட்ட யாகூப் மேமன் தானாகவே சரணடைந்தார்.  பின்னர் இவ்வழக்கில் யாகூப் மேமனுக்கு எதிராக சாட்சிகள் அமைந்ததால் நீதிமன்றம் அவருக்கு  தூக்குதண்டனை விதித்தது. அந்த குண்டுவெடிப்பில் நேரடி தொடர்புடைய ஆறு பேருக்கும் தூக்குதண்டனை கொடுக்கப்பட்டு பின்பு கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டநிலையில், அந்த குண்டுவெடிப்பில் சம்பந்தமில்லாத அல்லது நேரடி தொடர்பில்லாத யாகூப் மேமனுக்கு மட்டும், தூக்குதண்டனையிலிருந்து குறைப்பதற்கான அவரது கருணை மனுவை நீதிமன்றமும், மகாராஷ்டிரா மாநில அரசும், குடியரசுத்தலைவரும் கொஞ்சம் கூட கருணையில்லாமல் தள்ளுபடி செய்தனர் என்பது வேதனைக்குரியது. 
         இஸ்லாமிய தீவிரவாதமோ அல்லது இந்துத்துவா தீவிரவாதமோ, தீவிரவாதம் என்பது எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.  எதை சாதிப்பதற்கும் தீவிரவாதம் என்பது தீர்வாகாது. அதேப்போல் தீவிரவாதச் செயலில் ஈடுபடுபவர்களை அல்லது சந்தேகிக்கப்படுபவர்களை தூக்கிலிட்டு கொல்வது என்பதும் தீவிரவாதத்திற்கு தீர்வாகாது. அரசு இதை உணரவேண்டும். உணர்ந்து தூக்குக்கயிற்றை நெருங்கிக்கொண்டிருக்கும் யாகூப் மேமனுக்கு கருணைகாட்டி தூக்குதண்டனையிலிருந்து விடுவித்து ஆயுள் தண்டனையாக குறைக்கவேண்டும். 

திங்கள், 27 ஜூலை, 2015

கலாம் காலம் ஆகிவிட்டார்...!


 சரித்திரமாகி விட்ட மாணவர்களின் நாயகன் கலாம்...!                  

           இராமேஸ்வரத்தில் பிறந்த தமிழ் பேசும் இஸ்லாமியர்.  இவர் படித்தது சாதாரண அரசு பள்ளி. உயந்தது இஸ்ரோ விஞ்ஞானியாய். இந்திய  ஏவுகணைகளுக்கும்  ராக்கெட்டுகளுக்கும் அக்னி சிறகுகளை கொடுத்து   உலக  வல்லரசுகளே வியக்கும் வண்ணம்  இந்தியாவின் புகழை விண்ணில் பறக்கச்செய்தார். பதிலுக்கு இந்த நாடு இவரை குடியரசு மாளிகையில் அமரவைத்து அழகு பார்த்தது. குடியரசுத்தலைவர் பதவி ஓய்வுக்கு பின்னும் இவர் ஓய்ந்துவிடவில்லை. ஓய்வெடுக்கவில்லை. இவரது அறிவாயுதத்தை எடுத்துக்கொண்டு ஓய்வில்லாமல்   பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும்  படையெடுத்தார். வெற்றி கண்டார். மாணவ மாணவியர்களை தன்  அறிவாலும், கருத்தாலும் ஈர்த்தார். அவர்களை கனவு காண சொன்னார். விடிந்த பிறகும் தூங்கியல்ல... அவர்கள்  எதிர்காலம் விடியும்வரை தூங்காமல் கனவு காண சொன்னார். நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும் என்று அவர்களுக்கு அன்புக் கட்டளையிட்டார். ஆம்... இன்று அவரே சரித்திரமாகி விட்டார். கலாம் காலம் ஆகிவிட்டார்...!   
                                                              நமது கண்ணீர் அஞ்சலி                                                   

செவ்வாய், 21 ஜூலை, 2015

மதுவிலக்கு - மக்களை ஏமாற்ற கருணாநிதி போடும் புதிய முகமூடி...!


                இந்திய அரசியல்வாதிகளுக்கு திடீரென்று மக்களின் மீது அக்கறை வருகிறதென்றால் - அவர்கள் திடீரென்று கவர்ச்சி அறிவிப்பு பலூன்களை பறக்கவிடுகிறார்கள் என்றால் சட்டமன்றத்தேர்தலோ அல்லது பாராளுமன்றத்தேர்தலோ வருகிறதென்று அர்த்தம். அப்படித்தான்  நேற்று தமிழகத்தில் ஒரு ''கவர்ச்சி அறிவிப்பு'' வெளியாகியிருக்கிறது. ''தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு தீவிரமாக அமல்படுத்தப்படும்'' என்ற மக்களை ''மயக்கும்'' அறிவிப்பு இன்று காலை பத்திரிகைகள் முழுவதையும் ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது. இந்த மயக்கும் அறிவிப்பை வெளியிட்டவர் வேறு யாருமல்ல...! திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி தான். தேர்தல் நெருங்குகிறது அல்லவா...? திடீரென்று மக்களை பற்றிய அக்கறை அவருக்கு வந்துவிட்டது. தன்னுடைய   ஆட்சிக்காலங்களில் தமிழக மக்களுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்தவர் இப்போது மதுவிலக்கைப் பற்றிப் பேசுகிறார் என்பதை பார்க்கும் போது சிரிப்புதான் வருகிறது. தேர்தலில் வெற்றிபெறுவதற்கு கருணாநிதி எந்த ஒரு அதிசயத்தையும் கூசாமல் செய்துகாட்டுவார். தேர்தலுக்கு தேர்தல் ஏதாவது ஒரு சாட்டையை எடுத்து சுழற்றுவார். இந்தி எதிர்ப்பு என்பார். இலங்கை தமிழர் என்பார். சொத்து சேர்ப்பு - ஊழல் என்பார். தேர்தலுக்கு தேர்தல் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் வேஷம் போடுவார். முகமூடியை மாற்றிக்கொள்வார்.
              அதேப்போல் வருகிற தேர்தலில் மக்களை கவரவேண்டுமே என்ன செய்யலாம் என்று யோசனை செய்தார். இப்போது மக்கள் பிரச்சனையாக இருப்பது ''டாஸ்மாக்'' தான். பார்த்தார்... இது பெண்கள் பிரச்சனை மட்டுமல்ல. நீண்ட நாளைய சமூக பிரச்சனை. பெண்களின் வாக்கு வங்கியை கவருவதற்கு, ''நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம்''   என்ற அறிவிப்பை கொடுத்திருக்கிறார். 
         தமிழக மக்களும்  இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

திங்கள், 20 ஜூலை, 2015

முதலாளித்துவத்தை சாடும் போப்பாண்டவர்...!


 சாத்தானின் எச்சமே முதலாளித்துவம்...!                                                                                                                                        ~ போப் பிரான்சிஸ்                                                                                                                                                                                                                      
    
          முதலாளித்துவத்தை இப்படியொரு கடினமான வார்த்தைகளால் பொதுவுடைமைவாதிகள் மற்றும் இடதுசாரிகள் கூட வர்ணித்ததில்லை. ஆனால், போப் பிரான்சிஸ் இப்படிக் கூறியிருக்கிறார்.பொலிவியாவில் நடைபெற்ற உலக மாநாட்டு அரங்கத்தில் ஆற்றிய உரையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அவர் நிற்கவில்லை. உலக பொருளாதார ஒழுங்கினை மாற்றி அமைக்க முன்வருமாறு அடித்தட்டு மக்களுக்கு அறைகூவலும் விடுத்துள்ளார். அடித்தட்டு மக்களுக்கு வேலை, குடியிருக்க இடம், நிலம் ஆகிய புனிதமான உரிமைகளை வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
        ''மாற்றங்கள், உண்மையான மாற்றங்கள், கட்டமைப்பு மாற்றங்கள் வேண்டும் என்று கேட்பதற்கு நாம் அஞ்ச வேண்டியதில்லை'' என்றும் அவர் தன் உரையில் உற்சாகம் அளித்தார். போப் பதவியை ஏற்ற பின் ஆற்றியுள்ள மிக நீண்ட, உணர்வுப்பூர்வமான, ஆவேசமான உரை அது. அமெரிக்க வெற்றி என்று பீற்றிக் கொள்ளப்படும் வன்முறை நடவடிக்கைகளின் போது அமெரிக்காவின் பூர்வீகக்குடிகள் மீது ரோமன் கத்தோலிக்க திருச்சபையினால் நடத்தப்பட்ட பாவச்செயல்களுக்கு பல்லாயிரக்கணக்கான பொலிவிய மக்களிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார் போப் பிரான்சிஸ். சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மக்கள், ஏழைகள், வேலையில்லாதோர், நிலங்களை இழந்தோர் ஆகியோருக்காக செயல்படும் பிரபல இயக்கங்களின் இரண்டாவது உலக மாநாட்டின் பிரதிநிதிகள் மத்தியில் நிகழ்த்தப்பட்டது அந்த உரை. முதலாவது மாநாடு வாடிகன் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பொலிவிய ஜனாதிபதி ஈவோ மொரேல்சும் கலந்து கொண்டார்.
         அப்போது பேசிய போப் பிரான்சிஸ், ''கூச்சநாச்சமின்றி லாபம் தேடும் முதலாளித்துவப் போக்கினை சாத்தானின் எச்சம்'' என்று விமர்சித்தார். இந்த விமர்சனத்தை நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த இடதுசாரி கருத்துடைய பிஷப் ஒருவர் கூறியிருந்தார். அதனால் அன்றைய பொலிவிய சர்வாதிகாரிகளால் அவர் கொல்லப்பட்டார் என்பது நினைவு கூறத்தக்கது. போப் பிரான்சிஸ் விமான நிலையத்தில் இருந்து தலைநகர் சாந்தா குரூஸ் செல்லும் வழியில் அந்த பிஷப் கொல்லப்பட்ட இடத்தில் பிரார்த்தனை செய்தார். ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் இடதுசாரி சார்புடைய மதகுருக்கள் ஓரங்கட்டப்படுவதாக ஒரு கருத்தோட்டம் நிலவி வருவதை சமனப்படுத்தும் முயற்சியாக இவ்வாறு பிரார்த்தனை செய்தார் என்றும் மேற்கத்திய ஊடகங்கள் எழுதின.வளரும் நாடுகளுக்கு மலிவான விலையில் உழைப்பையும், மூலப்பொருட்களையும் வழங்கும் நாடுகளாக ஏழை நாடுகளை மாற்றக்கூடாது என்றும் அவர் தன் உரையில் சுட்டிக்காட்டினார். சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பதன் மூலம் புதிய காலனியாதிக்க நடைமுறையைத் திணிக்க முதலாளித்துவ முகாம்கள் (ஐரோப்பிய ஒன்றியம், ஐ.எம்.எப்., டபிள்யு.டி.ஓ. போன்ற அமைப்புகள்) முயன்று வருவதை அவர் கண்டனம் செய்தார். முதலாளித்துவத்தின் உடும்புப்பிடியில் இருந்து பூமித்தாயைப் பாதுகாக்கும் பொறுப்பு மக்களுக்கு உள்ளது என்றும் அதற்கான கால அவகாசம் குறைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பொறுத்துக் கொள்ள முடியாதுதற்போதைய முதலாளித்துவ அமைப்பை நாம் பொறுத்துக் கொள்ள முடியாது. விவசாயிகள், தொழிலாளிகள், பல்வேறு சமுதாயங்கள் இந்த அமைப்பை பொறுத்துக் கொள்ள மறுத்து வருகின்றனர். நாம் தாயாகக் கருதும் பூமியும் இந்த அமைப்பை பொறுத்துக் கொள்ள மறுக்கிறது என்ற போப், சர்வதேச நிதி அமைப்புகளையும் விட்டு வைக்கவில்லை. சர்வதேச நிதியம் மற்றும் சில வளர்ந்த நாடுகளின் வளர்ச்சி உதவி கொள்கைகளையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.மக்களின் ஆளுமையை அவர்களுடைய கையில் இருந்து பறிப்பதற்கு எந்தவொரு சக்திக்கும் உரிமை கிடையாது. அவை அந்த உரிமையைத் தங்களதாக்கிக் கொள்ளும் போதெல்லாம் காலனியாதிக்கத்தின் புதிய வடிவம் தோன்றுவதை நாம் காண்கிறோம். இவை சமாதானமும், நேர்மையும் உருவாகும் வாய்ப்புக்கு குந்தகம் விளைவிக்கின்றன என்றும் அவர் கூறினார். புதிய காலனி அமைப்பு கார்ப்பரேட் நிறுவனங்களும், கடன் அமைப்புகளும், பல்வேறு சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களும், உழைக்கும் மக்கள், ஏழை மக்களின்அடி வயிற்றை இறுக்கிக் கட்டும்பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் திணிப்பு ஆகிய வடிவங்களை தேவைக்கேற்ப எடுத்துக் கொள்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். தொழிற்சங்கங்களை அவர் நியாயப்படுத்தினார். அத்துடன் வேலைகளை உருவாக்கும் கூட்டுறவு சொசைட்டிகளை அமைக்கும் ஏழை மக்களையும் அவர் பாராட்டினார். 
          ''மூலதனம் ஒரு தெய்வமாக மாறினால், மக்களின் முடிவுகளைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறினால், பணத்தின் மீதான பேராசை ஒட்டு மொத்த சமூகப்பொருளாதார அமைப்பின் தலைமைக்கு வந்தால், சமுதாயம் அழிக்கப்படும். இது மனிதர்களை தண்டிப்பதுடன், அவர்களை அடிமைகளாக மாற்றி விடும். மனித சகோதரத்துவத்தை ஒழித்து விடும். மக்களை ஒருவருக்கு எதிராக ஒருவரை நிறுத்திவிடும். நம்முடைய பொது வீடான பூமியையும் அது அபாயத்தில் ஆழ்த்தி விடும்'' என்று அவர் எச்சரித்தார்.

கட்டுரை : தாஸ் 

நன்றி : தீக்கதிர் 

ஞாயிறு, 19 ஜூலை, 2015

பொதுமக்களின் மானியத்தை பறிக்கத்துடிக்கும் ''இம்சை அரசன்''


              பல காலமாக உலகவங்கி மற்றும் சர்வதேச நிதி நிறுவனம் ஆகியவற்றின் கண்களை உருத்திக்கொண்டிருந்த பொதுமக்களுக்கு வழங்கப்படும்   உணவுப்பொருட்களுக்கான மானியமும், சமையல் காஸ் மீதான மானியமும், விவசாயப்பொருட்கள் மீதான மானியமும், எரிபொருட்கள் மீதான மானியமும் இன்று நரேந்திரமோடியையும், அவரது கூட்டாளிகளான இந்திய பெருமுதலாளிகளையும் உருத்திக்கொண்டிருக்கின்றன என்பதை யாராலும் மறுக்கமுடியாது. அதன் விளைவாகத்தான் விவசாயப்பொருட்கள் மீதான மானியத்தையும், எரிபொருட்கள் மீதான மானியத்தையும் படிப்படியாக குறைத்துவந்தாலும், ஏறக்குறைய நாடுமுழுதும் ஒட்டுமொத்த  பொதுமக்களுக்கு பயன்படுத்தும் சமையல் எரிவாயுவிற்கு கொடுக்கப்படும் மானியத்தை ஒரேயடியாக பிடுங்கிவிடவேண்டும் என்று நரேந்திரமோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து துடித்துக்கொண்டிருக்கிறார்.
              தேர்தல் காலத்தில்  இவர், தான் ஆட்சிக்கு வந்தால் எரிவாயுவிற்கான மானியத்தை வங்கிக்கணக்கில் போடும் முறையை ஒழித்துக்கட்டுவேன் என்று சொல்லி நாடு முழுதும் பிரச்சாரம் செய்து வந்தவர், வெற்றிபெற்றவுடன் தேர்தல் காலத்தில் தான் சொன்னதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டார். சென்ற காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் செய்ததை காட்டிலும் அதிவேகமாக செய்யத்தொடங்கினார். அதில் ஒன்று தான் எரிவாயு மானியம் வெட்டு. அடாவடியாக மானியம் முழுமையும்  வெட்டினால் மக்களிடமிருந்து எதிர்ப்பு வரும் என்று தெரிந்திருக்கும் மோடி நீங்களாகவே மானியத்தை விட்டுக்கொடுங்கள் என்று கேஞ்சிப்பார்த்தார். அதற்காக பெட்ரோல் பங்க்களிலும், தொலைபேசிகளிலும் விளம்பரமும் செய்துபார்த்தார். ஆன்லைனில் ''GIVEITUP'' என்று பதிவு செய்யுங்கள் அல்லது  ''GIVEITUP'' என்று எஸ்.எம்.எஸ் செய்யுங்கள் என்றெல்லாம் சொல்லிப்பார்த்தார். ஆனால்  அவர் எதிர்ப்பார்த்தபடி  வெற்றிகிட்டவில்லை.
              எனவே நரேந்திரமோடி  தந்திரமாக வேறொரு சூழ்ச்சியில் இறங்கினார். பொதுமக்கள் தங்கள் தேவைக்கு எரிவாயு சிலிண்டரை  தொலைபேசியிலோ அல்லது கைப்பேசியிலோ பதிவுசெய்யும் போது, வழக்கமாக உங்கள் மானியத்தை விட்டுக்கொடுத்து ஏழைகள் வீட்டில் அடுப்பெரிய உதவுங்கள் என்ற விளம்பரத்திற்கு பிறகு, # கேஸ் சிலிண்டரை பதிவு செய்ய எண் ஒன்றை அழுத்தவும்... # ஆதார் எண்ணை பதிவு செய்ய எண் இரண்டை அழுத்தவும், # நீங்கள் பதிவு செய்த விபரத்தை தெரிந்துகொள்ள எண் மூன்றை அழுத்தவும்... என்ற வேண்டுகோளுக்கு தகுந்தார் போல் மக்கள் பதிவு செய்வார்கள். ஆனால் சமீபகாலமாக எரிவாயு சிலிண்டரை பதிவு செய்யும் போது, மேலே சொன்ன  விட்டுக்கொடுக்கும் விளம்பரத்திற்கு பிறகு, வழக்கமான அந்த மூன்று வேண்டுகோளுக்கு  முன்பாகவே  புதிதாக ஒரு  வேண்டுகோளையும் மக்கள் முன்பு ''தந்திரமாக'' வைக்கிறார் ''நரிதந்திர'' மோடி....!
           #  மானியத்தை விலக்கிக்கொள்வதற்கு எண் சீரோவை அழுத்தவும்...!!!!!???? என்று  கூசாமல் அன்புக்கட்டளையாக வேண்டுகோள் வைக்கிறார். எனவே பொது மக்களே... கேஸ் சிலிண்டரை பதிவு செய்யும் போது  நிதானமாகவும், பொறுமையாகவும் செயல்படுங்கள். அவசரத்தில்  ''பூஜ்ஜியத்தை'' அழுத்திவிட்டால், உங்கள் எரிவாயுவுக்கான மானியமும் ''பூஜ்ஜியமாக'' போய்விடும்.... ஜாக்கிரதை... எச்சரிக்கை....!

வரவேற்போம்...! பலப்படுத்துவோம்...!



            மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விட்டு பல்வேறு காரணங்களுக்காக கடந்த காலங்களில் விலகியிருக்கும் அல்லது விலக்கப்பட்டிருக்கும் தலைவர்கள் மீண்டும் கட்சிக்குள் இணைவது என்ற முடிவுக்கு வந்திருப்பது என்பது வரவேற்கத்தக்கது.   இன்றைக்கு இந்த தேசம் இருண்ட தேசமாக மதவெறிக்கூட்டத்தின் சூதுகளாலும், சூழ்ச்சிகளாலும் சூழப்பட்டு, விழுங்கப்பட்டு வரும் ஆபத்தான சூழ்நிலையில் இருக்கையில் அதை மீட்டெடுக்க - இந்த தேசத்து மக்களை காப்பாற்ற  இடதுசாரிக்கட்சிகளை பலப்படுத்தவேண்டியது என்பது ஒரு அத்தியாவசிய - அவசிய தேவையாகும். அப்படி செய்யவில்லை என்றால் நாசமாய் போய்கொண்டிருக்கும் இந்த தேசத்தை யாராலும் காப்பாற்ற முடியாமல் போய்விடும். 
             இந்த நாட்டில் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ என்ற அச்சத்தில் தான் நாம் நாட்களை கழித்துக்கொண்டிருக்கிறோம். நரேந்திரமோடியின் தலைமையிலான பாரதீய ஜனதாக்கட்சியின் கையில் இன்னும் நான்கு ஆண்டுகள் சிக்கியுள்ளன. அவர்கள் இந்த காலக்கட்டத்தில் நிகழ்த்துவதற்கு ஏகப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை வைத்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் 2019 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கிற பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான ''வேலைகளை'' இப்போதே தொடங்கி திறமையாக செய்து வருகின்றார்கள்  என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். அதனால் தான் பாரதீய ஜனதக்கட்சியும், அதனை வழிகாட்டி அழைத்துச்செல்லும் ஆர்.எஸ்.எஸ் வும், விஷ்வ இந்து பரிட்சத்தும் 2020-ஆம் ஆண்டில் பல்வேறு மதங்களையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் சார்ந்தவர்கள் காலகாலமாய் வாழும் இந்த நாட்டை - இந்திய தேசத்தை ''இந்து தேசமாக'' அறிவிப்பதற்கான தயாரிப்பு வேலைகளில் இப்போதே இறங்கியிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. காலகாலமாக கட்டிக்காத்துவந்த இந்த நாட்டின்  ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் சீர்குலைத்து சின்னாபின்னமாக்கி   இவர்களின் நிகழ்ச்சி நிரல்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றி இறுதியில் ''இந்து தேசத்தை'' உருவாக்குவது என்ற இவர்களின் எண்ணங்களை தவிடுபொடியாக்கிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகளை பலமிக்க கட்சிகளாக மாற்றிடவேண்டும்.  
          ஒரு பக்கம் போதை, சினிமா, நவீன கலாச்சாரம் என தடுமாறி தடம் மாறி தவறான பாதைகளில் சென்றுகொண்டிருக்கிற இளைஞர்களுக்கு அவர்களுக்கான மாற்று உலகத்தை காண்பித்து   இடதுசாரிக்கட்சிகள் பக்கம்   ஈர்க்கவேண்டும். இன்னொரு பக்கம்  முன்னொரு காலத்தில் பல்வேறு காரணங்களுக்காக கட்சியை விட்டு விலகியிருந்தாலும்   அல்லது விலக்கப்பட்டிருந்தாலும், கட்சியை விட்டு   வெளியே  இன்றும்  அதே கொள்கைகளோடு மக்கள் பணியாற்றிக்கொண்டிருக்கும் பல மூத்தத்தலைவர்களை  மீண்டும் கட்சிக்குள் இணைப்பது என்பதும் கட்சியை பலப்படுத்தும் மற்றொரு வேலையாகும். 
           அந்த வகையில், மேற்குவங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகியிருக்கும் பாராளுமன்ற முன்னாள் மக்களவைத்தலைவர் தோழர்.சோம்நாத் சாட்டர்ஜி அவர்களும், கேரள மாநிலத்தில் கட்சியிலிருந்து  விலகி தன் தோழர்களோடு தன் கட்சியொன்றை நடத்திவரும் மூத்தத்தோழர் கவுரி அம்மா அவர்களும் மீண்டும் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைவது என்பது வரவேற்கத்தக்கது. இவர்கள் கட்சியில் இணைவதன் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகட்சிகள் பலப்படும் என்ற நம்பிக்கை துளிர்கிறது. இன்னும் வெளியே இருக்கும்  இவர்களைப் போன்ற மூத்தத்தோழர்களை வரவேற்போம்... கட்சியை பலப்படுத்துவோம்... தேசத்தை வீழ்ச்சியிலிருந்து காப்போம்...!

வியாழன், 16 ஜூலை, 2015

கல்வி வியாபாரத்தில் பிள்ளைகளின் உயிர் பெரிதல்ல...!


           இன்று தான் அந்த சோக நாள்.  கடந்த 2004 - ஆம் ஆண்டு இதே தினத்தில் கும்பகோணத்தில் படிக்கவந்த  93 பள்ளிக்குழந்தைகளை நம் கண் முன்னாலேயே தீக்கு இரையாக்கினோம். இன்னும் அந்த சோகம் அடங்கவில்லை. என்றாலும், கல்வி வியாபார அரக்கர்களின் கோரப்பசிக்கு -அறியாமையில் உழலும் பெற்றோர்களின் பேராசைக்கு   நாளுக்கொரு பள்ளிக் குழந்தைகளை பலி கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறோம். அது அன்றாட நிகழ்வாக மாறிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் யாருக்கும் இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படாதது அதைவிட சோகமானது. 
        இன்று கூட சென்னை பெரம்பலூரில் 93 பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக்கொண்டுவந்த ஒரு தனியார் பள்ளிக்கூடத்தின் பஸ் ஒன்று சாலையில் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி கவிழ்ந்ததில் 63 மாணவ-மாணவியர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக  சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். 93 குழந்தைகளை ஒரே பஸ்ஸில் வருவதற்கு பள்ளி நிர்வாகம் எப்படி துணிந்தது என்று தெரியவில்லை...? நிற்பதற்கோ அல்லது உட்காருவதற்கோ வசதியில்லை என்பதை தெரிந்திருந்தும், தங்கள் குழந்தைகள் அந்த பஸ்ஸில் பயணம் செய்ய பெற்றோர்கள் எப்படி அனுமதித்தார்கள் என்பதும் நமக்கு புரியவில்லை. அதுமட்டுமல்ல அந்தக் பள்ளிக் குழந்தைகள் அத்தனை பெரும் சென்னைக்குள்ளேயே வசிப்பவர்கள் அல்ல. பக்கத்து மாவட்டமான செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த சேரலி, கல்பாடி, மருவத்தூர், ஏரையூர், அகரம்சிகூர் உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் இருந்து நகரத்தில் படிக்க வந்த குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. 
         ஆட்சியாளர்களின் சூழ்ச்சியால் கல்வி கடைச்சரக்காக மாறிப்போன பிறகு, இலாப வேட்கையின் காரணமாக எங்கோ ஒரு மூலையில் மிகக்குறைந்த விலைக்கு இடத்தை வாங்குகிறார்கள். பள்ளிக்கூடமோ அல்லது கல்லூரியோ அல்லது இரண்டுமோ, பெற்றோர்களிடமே கட்டணமாக பெருந்தொகைகளை பெற்று கட்டிடமாக எழுப்பிவிடுகிறார்கள். தங்களின் விளம்பர உத்தியால் எங்கோ ஒரு மூலையில் வசிக்கும் பெற்றோர்களையும், மாணவ மாணவியர்களையும் உசுப்பேற்றி தங்கள் பள்ளிக்கு அல்லது கல்லூரிக்கு ஈர்த்துவிடுகிறார்கள். மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை தூரம், நேரம், பாதுகாப்பு எதைப்பற்றியும் நினைத்துப் பார்க்காமல் அங்கே சேர்த்துவிடுகிறார்கள். குழந்தைகளும் ஏராளமான எதிர்காலக் கனவுகளுடன் விடிந்தவுடன் பஸ்ஸில் சென்று பொழுது சாய்வதற்குள் வீடுவந்து சேர்ந்துவிடுகிறார்கள். 
          இந்த பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகள் தங்கள் கல்லூரி அல்லது பள்ளிகளுக்கு மாணவ மாணவியர்களை  பக்கத்து மாவட்டம், பக்கத்து மாநிலம், தொலைதூர நகரம் மற்றும் எங்கோ இருக்கும் கிராமங்களிலிருந்தெல்லாம்   விடியற்காலையிலிருந்தே அழைத்துவர தொடங்குகிறார்கள். பள்ளிக்கூடம் அல்லது கல்லூரி வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பே போய் சேரவேண்டும் என்று அம்புலன்சை விட மிக மோசமான வேகத்தில் செல்கிறார்கள். இந்த பேருந்துகள் அதிகப்பட்சம் 90 கிலோ மீட்டர் தொலைவு வரை சென்று பிள்ளைகளை அழைத்துவருகிறது. 

இன்னும் எழுதுகிறேன்...
         

புதன், 15 ஜூலை, 2015

காமராசர் மீது பாரதீய ஜனதாக்கட்சிக்கு என்ன திடீர் பாசம்...?


                இன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், பழைய காங்கிரஸ் கட்சியின்  தலைவருமாகிய காமராசரின் பிறந்தநாள் என்பதால்,  வழக்கம் போல் தமிழ்நாட்டில் ''பலவகைப்பட்ட'' காங்கிரஸ் கட்சிக்காரர்களும், அந்த காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இருக்கும் ''பலவகைப்பட்ட'' கோஷ்டிக் கட்சிக்காரர்களும், சாதிக்கட்சிகள் மற்றும்  சாதி சங்கம் என பலப்பல குழுக்களாக தனித்தனியே காமராசரின் புகழ்பாடி அவரது  சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடினார்கள். ஆனால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை என்ன விசேஷம் என்றால், இன்று  இந்த கோஷ்டிகளோடு சேர்ந்து பாரதீய ஜனதாக்கட்சியும் ''கோஷ்டிகானம்'' பாடியது தான் எல்லோருக்கும் மிகுந்த ஆச்சரியத்தை  வரவழைத்த நிகழ்ச்சியாக இருந்தது. ஆம்... பா.ஜ.க.-காரர்களும் தமிழ்நாடு முழுதும் எல்லா மாவட்டங்களிலும் காமராசர் சிலைக்கு ஒன்று கூடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தியிருக்கின்றார்கள். 
              பாரதீய ஜனதாக்கட்சிக்கு காமராசர் மீது என்ன திடீர் பாசம் கொப்பளித்துக்கொண்டு வருகிறது....? விருதுநகருக்கு காமராசர் வாழ்ந்த இல்லத்திற்கு மோடியின் ''அடியாள்'' அண்ணன் அமித்ஷா தான்  முதலில் வருவதாக இருந்தது. ஆனால் அவருக்கு பதிலாக மத்திய அமைச்சர் வெங்காய நாயுடு டெல்லியிலிருந்து பறந்து வந்து காமராசருக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தியிருக்கிறார். இன்னொரு பக்கம் தமிழிசை அக்கா மாலையணிவிக்குது.   என்னாப்பா இது காமராசர் மேல இவிங்களுக்கு இவ்ளோ பாசம் வந்திருக்குது. எல்லாம் அடுத்த ஆண்டு தேர்தலை கணக்கு பண்ணித்தான். பாரதீய ஜனதாக்கட்சி தமிழ்நாட்டில் கால்பதிக்க  சாதி ஓட்டுக்கு குறிவைக்கிறது என்பது பா.ஜ.கவின் கடந்த கால வரலாறு தெரிந்த யாருக்கும் புரியாமல் இல்லை. 
           அது என்ன பா.ஜ.க வின் கடந்தகால வரலாறு...? கடந்த 1966  ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி என்று நினைக்கிறேன். பாரதீய ஜனதாக்கட்சிக்கு அன்றைய பெயர் ''பாரதீய ஜனசங்'' என்று பெயராக இருந்தது. நவம்பர் 6 ஆம் தேதி அன்று அன்றைய ஜனசங்கத்தினர்   - இன்றைய பா.ஜ.க வினர், புதுடெல்லியில் மிகப்பெரிய கலவரத்தை உண்டாக்கி நாட்டையே ஸ்தம்பிக்க செய்தனர். அன்றைய தினம் புதுடெல்லியில் ஜனசங்கத்தினர்  நூற்றுக்கணக்கான வாகனங்களையும், டெல்லி அகில இந்திய வானொலி நிலையத்தின் கட்டிடத்தையும்  தீயிட்டுக்கொளுத்தி அராஜகத்தையும், அடாவடித்தனத்தையும் அரங்கேற்றினர் என்பது நாடு அறிந்த உண்மை. அவ்வாறு கொடூரமான கலவரத்தில்  ஈடுபட்ட ஜனசங்கத்தினர், அன்றைய காங்கிரஸ் கட்சியின்  அகில இந்தியத்  தலைவராய் இருந்த  காமராசர் டெல்லியில் வீட்டில் தங்கியிருந்த போது, அவர் உள்ளே இருக்கிறார் என்பதை தெரிந்துகொண்டே அந்த வீட்டைக்கொளுத்தி அவரை உயிரோடு எரித்து  கொலை செய்ய முயற்சி செய்தனர் என்பதும்  யாராலும் மறுக்க முடியாத உண்மை.
        அப்படிப்பட்ட முன்னாள் ஜனசங்கத்தினர் தான் இன்று நாடுமுழுதும் காமராசர் சிலைக்கு கூச்சப்படாமல் மாலை அணிவித்து, சாதி அரசியலுக்கு தூபம் போடுகின்றனர் என்பதும் யாராலும் மறக்க முடியாத உண்மை...! 

செவ்வாய், 14 ஜூலை, 2015

இசை மேதை - மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.வி மறைந்தார்...!


  என் மனங்கவர்ந்த இசையமைப்பாளர் மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்துவிட்டார்... என்னை போன்ற அவரது இரசிகர்கள் மட்டுமன்றி இசை உலகமே  ஒரு மாபெரும் இசை மேதையை இழந்துவிட்டது என்று தான் சொல்லவேண்டும். சுமார் 1200 திரைப்படங்களுக்கு இசையமைத்து இமயமாய் உயர்ந்து நிற்கும் அந்த மேதைக்கு இன்று வரையில் மத்திய அரசு விருது எதுவும் வழங்கப்படாதது அந்த விருதுகளுக்கு வழங்கப்பட்ட அவமரியாதை என்பது தான் உண்மை. அதுவும் இப்போது போல் கேட்டதைக்கொடுக்கும் கணினி இல்லாத காலத்தில் பாட்டுக்கு மெட்டமைத்து கடினமாக உழைத்து உருவாக்கிய அத்துனை பாடல்களும் தேனில் தோய்த்தெடுத்த பலாச்சுளைப் போல இனிப்பானவை. அதுமட்டுமல்லாமல் புதிய இசையமைப்பாளர்களையும், இளைஞர்களையும் தான் என்ற அகம்பாவம் இல்லாமல் ஊக்கப்படுத்துபவர். ஈகோ பார்க்காமல் மற்ற இசையமைப்பாளர்களின் இசையமைப்பிலும் பாடியவர்.   தன்னுடைய கடைசி காலம் வரையில் இசைக்காகவே வாழ்ந்து மறைந்துவிட்டார். 
             
             தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய பல்வேறு  கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பு செய்த அந்த மெல்லிசை மாமன்னரை மறக்கவே முடியாது. 

               மறைந்த அந்த இசை மேதைக்கு என் கண்ணீர் அஞ்சலியை உரித்தாக்குகிறேன்....!

              1992-ஆம் ஆண்டு ஒரு இசை நிகழ்ச்சிக்காக புதுச்சேரி கம்பன் கலையரங்கம் வந்தபோது அவரை சந்தித்து கதராடை அணிவித்து புகைப்படம் எடுத்துக்கொண்டது என் வாழ்க்கையில் மறக்கமுடியாத சம்பவம்.

செவ்வாய், 7 ஜூலை, 2015

பாரதீய ஜனதாக்கட்சிக்கு கொலை செய்வதொன்றும் புதிதல்ல...!



           இந்த தேசத்தை அன்று வெள்ளைக்காரன் கொள்ளையடித்தான். சுதந்திரம் அடைந்த பிறகு அறுபது ஆண்டுகளாக காங்கிரஸ்கட்சிக்காரன் கொள்ளையடித்தான். தாங்கள் தேசபக்தர்கள் -  ஊழலுக்கு எதிரானவர்கள் - வித்தியாசமானவர்கள் என்ரெல்லாம்  தம்பட்டம் அடித்துக்கொண்டு ஆட்சிக்கு வந்த பாரதீய ஜனதாகட்சிக்காரன்களும் இப்போது கொள்ளையடிக்கிறானுங்க. இந்த தேசம் என்ன அட்சய பாத்திரமா...? இத்தனை பேர்களும் கடந்த இருநூறு ஆண்டுகளாக அள்ள அள்ள குறையாமல்  வளர்ந்துகொண்டே இருக்கிறது. 
        உலகம் வியக்கும் வண்ணம் மெகா ஊழல் புரிந்து பேர்போனவர்கள் காங்கிரஸ்கட்சிக்காரர்கள். ஊழலைகளையும் வகைவகையாய் செய்துவிட்டு அதை மறைப்பதற்கு வழிகளையும் கண்டுபிடித்து தப்பித்தவர்கள் தான் இவர்கள். ஆனால் பாரதீய ஜனதாகட்சிக்காரன்களோ இப்பொது உலகத்தையே உலுக்கும் வண்ணம் மாபெரும் ஊழலை செய்துகொண்டிருக்கிறார்கள். அது தான் இன்றைக்கு ஊடகங்கள் எல்லாம் மூடி மறைத்துக்கொண்டிருக்கிற ''வியாபம்'' ஊழல்  என்ற ''பயங்கரவாத'' ஊழல் எனப்படுவது. இந்த ஊழலைப் பற்றி ஊடகங்களும் வாயை திறக்கவில்லை. அதேக்கட்சியை சேர்ந்த பிரதமர் மோடியும் வாயை திறக்கவில்லை. இன்று வெளிநாட்டிற்கு பறந்துவிட்டார். ஊரே பற்றி எரிகிறது. அவர் ''வேலை'' அவருக்கு....!
              ''வியாபம்'' என அழைக்கப்படும் தொழில் முறை தேர்வு வாரியம், மத்தியப்பிரதேச மாநிலத்தில் அரசுப் பணியாளர்கள் தேர்வு வாரியமாக  செயல்பட்டு வருகிறது. இந்த வாரியத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக அரசுப்பணிகளுக்கு தேர்வு செய்வதில் ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த ''வியாபம்'' ஊழல் என்பது கடந்த 2012-ஆம் ஆண்டில் தொடங்கி இன்று வரையில்  இந்த முறைகேடுகளில் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் அறிந்தவர்கள் என மொத்தம் 48 பேர்களை பலி வாங்கி இருக்கிறது.  ''வியாபம்'' முறைகேடுகள் வெளியே தெரியாவண்ணம்  ஒரு இளம்பெண்ணில் தொடங்கி அதே கட்சியை சேர்ந்த அம்மாநில கவர்னரின் சொந்த மகன் உட்பட 48 பேர்களை மர்மமான முறையில் கொன்று குவித்திருக்கிறார்கள். இந்த ஊழல் என்பது தொகையை வைத்துப்பார்த்தால், வெறும் 2000 கோடி ரூபாய் ஊழல் தான். என்றாலும் இது ''வித்தியாசமான மெகா ஊழல்'' என்று தான் சொல்லவேண்டும். தொகையை வைத்து அல்ல. இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் பாரதீய ஜனதாக்கட்சியை சேர்ந்த மாநில முதலமைச்சர்  மற்றும் மாநில ஆளுநர் உட்பட 3000க்கும் மேற்பட்டவர்கள் என்பதும், இந்த ஊழல் இதுவரையில் 48 பேர்களை பலிவாங்கியிருக்கிறது என்பதும் தான் இந்த ஊழல் ஒரு மெகா ஊழல் என்ற பெருமையை அடைகிறது. 
          பாரதீய ஜனதாக்கட்சிக்காரர்கள் ''ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணிகள் ஆயிற்றே.  கொலை செய்வது என்பது  பாரதீய ஜனதாக்கட்சிக்கு ஒன்றும் புதிதல்லவே. ஏற்கனவே 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை கொன்று குவித்தவர்கள் தானே அவர்கள் என்பதை யாரும் மறந்திருக்கமுடியாது. 
           இவர்கள் ஆட்சியில் இன்னும் என்னவெல்லாமோ இந்த நாடு பார்க்கபோகிறதோ... தெரியவில்லை...!

உலகத்திற்கே வழிகாட்டும் கிரீஸ் நாட்டு மக்கள்...!


                 இந்தியாவைப் போன்றே ஐரோப்பிய கூட்டமைப்பு  நாடுகளில் ஒன்றான கிரீஸ் நாடும், அந்நாட்டு முந்தைய ஆட்சியாளர்கள் கொண்டுவந்த உலகமயம் மற்றும்  தாராளமயக் கொள்கைகளினால் கடந்த ஐந்து ஆண்டு காலமாக கடுமையான பொருளாதாரச் சிக்கலில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. இந்த  வேளையில் தான்  அந்நாட்டு மக்கள் அண்மையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இடதுசாரிக்கட்சிக்கு வாக்களித்து ஆட்சியில் அமரச்செய்தனர். ஏற்கனவே உலகமய தாரளமயகொள்கைகளை காரணம் காட்டி கிரீஸ் நாட்டின் கடந்த கால அரசு, தொழிலாளர்களுக்கு - ஊழியர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம்,  நிரந்தர வேலைவாய்ப்பு இன்மை, தொழிலாளர் பாதுகாப்பு சட்டம் ஒழிப்பு, தொழிற்சங்கங்கள் கூடாது, ஓய்வூதியம் ஒழிப்பு போன்ற சமூக பாதுகாப்பையே ஒழித்துக்கட்டி மக்கள் விரோத - தொழிலாளர் விரோத செயல்களை செய்தமையால் தேர்தலில் மக்களால் விரட்டியடிக்கப்பட்டது. பின்னர்     மக்கள் ஆதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுசாரி அரசு, கடந்த மக்கள் விரோத அரசு நடைமுறைப்படுத்திய சிக்கல்களை தீர்ப்பதில் மிகுந்த சிரமப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இந்த     இடதுசாரிகட்சி ஆட்சிக்கு வந்த பின்னே எரிச்சலுற்ற ஐரோப்பிய நிதி கூட்டமைப்பும், சர்வதேச நாணய நிதியமும் (ஐ.எம்.எப்) மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியும்  அந்த அரசுக்கு நெருக்கடியை அதிகப்படுத்த  ஆரம்பித்தது. 
           கிரீஸ்  மக்கள் மீது ''சிக்கன நடவடிக்கைகளை'' திணிக்கவேண்டும் என்று ஒரு பக்கம் கிரீஸ் அரசின் மீது  நெருக்கடியை  கொடுத்து வந்தது.  சிக்கன நடவடிக்கை என்ற பேரில், ஊழியர்களின் ஊதியத்தை மேலும் குறைப்பது, ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது, ஓய்வூதியர்களுக்கு அளிக்கப்படும்  சலுகைகளை  துண்டிப்பது போன்ற நெருக்குதல்களை கிரீஸ் நாட்டு மக்களின்  மீது திணிக்கவேண்டும் என்று ஐரோப்பிய நிதி அமைப்பு இடதுசாரி ஆட்சியாளர்களை கடுமையாக நெருக்கியது. மேலும் சர்வதேச நாணய நிதியமும், ஐரோப்பிய மத்திய வங்கியும் ஏற்கனவே உள்ள ஒப்பந்தப்படி 30.06.2015 நள்ளிரவுக்குள் முன்பு வாங்கிய கடனை திருப்பிக்கட்டவேண்டும் என்று ஆளும் இடதுசாரி அரசின் மீது மற்றொரு புறம் மிகக்கடுமையான நெருக்கடியை கொடுத்தது. 
             ஆனால் நிலுவையிலுள்ள நிதி நிறுவனக்கடன்களை ரத்துச்செய்யக் கோருவது என்பது ஆளும் ''சிரிசா'' என்ற இடதுசாரி கட்சியின் தேர்தல் அறிக்கையில் மிக முக்கியமானது. எனவே நிலுவையிலுள்ள  கடனை ரத்து செய்ய வேண்டும் என்றும், பொதுமக்களை தாக்கும் எந்தவிதமான வெட்டுகளையும் நடைமுறைப்படுத்த இயலாது என்றும் சிரிசா அரசு கூறிவிட்டது. இந்த சமயத்தில் தான் கிரீஸ் நாட்டின் இடதுசாரி பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் அந்த மூன்று நிதிநிறுவனங்களின் நியாயமற்ற வற்புறுத்தலுக்கு எதிரான தன்னுடைய குரலுக்கு பலம் சேர்க்க  மக்களை நாடினார். 
                மூன்று நிதி நிறுவனங்களும் வலியுறுத்தும் ''சிக்கன நடவடிக்கை'' வேண்டுமா - வேண்டாமா...?  (YES or NO)
      அதேப்போல் நிலுவையிலுள்ள கடனை அந்த நிறுவனங்களிடம் திரும்பக்கட்ட வேண்டுமா - வேண்டாமா...? (YES or NO)
             ''YES or NO'' என்ற வாக்கெடுப்பை இடதுசாரி பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் மக்களிடம் நடத்தினார். அதேப்போல் அரசின் குரலுக்கு பலம் சேர்க்க, தன் நாட்டு மக்களை  ''வேண்டாம்'' - ''NO'' என்று வாக்களிக்கக்கோரி    நாடு முழுதும்  பிரச்சாரம் செய்தார். அதேபோல் இன்னொரு புறம் உலகமயம் - தாரளமயத்தை ஆதரிக்கும் எதிர்க்கட்சிக்காரர்களும்  ''வேண்டும் - YES'' என்று வாக்களிக்கக்கோரி பொது மக்களிடம் பிரச்சாரம் செய்தனர். ஆனால் சென்ற 5 ஆம் தேதி நடைபெற்றத் தேர்தலில் பங்கேற்ற மக்களில் 61.3 சதவீத கிரீஸ் மக்கள் தங்களது இடதுசாரி பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் கேட்டுக்கொண்டபடி ''வேண்டாம்'' - ''NO'' என்றே எந்தவிதமான அச்சமுமில்லாமல்  மிகத் தெளிவாகவும், அறிவுப்பூர்வமாகவும்  வாக்களித்து அந்த மூன்று நிதி நிறுவனங்களுக்கும்  தங்களது எதிர்ப்பை காட்டி பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். புரியும்படி சொல்லவேண்டுமென்றால், நெத்தியடி அடித்திருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும். 
          இந்த வாக்கெடுப்பின் முடிவை கேட்ட அத்துணை உலகமய ஆதரவாளர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்திருக்கிறது என்பது தான் உண்மை. இவ்வாறு தீர்ப்பு வழங்கியதன் மூலம் கிரீஸ் நாட்டு மக்கள் உலக மக்களை தங்களை திரும்பிப்பார்க்க செய்திருக்கிறார்கள் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. இந்த வாக்கெடுப்பில் - குறிப்பாக ''வேண்டாம்'' - ''NO'' வாக்களித்ததில் அந்நாட்டு பெண்களின் பங்களிப்புகளை கண்டிப்பாக பாராட்டியாகவேண்டும்.
         அதேப்போல் இன்னொன்றையும் நாம் கவனிக்கவேண்டும். கடந்த காலங்களில் நடைபெற்ற - உலக மக்களின் கவனத்தை ஈர்த்த  ''ஆக்குபை வால்ஸ்ட்ரீட்''   மற்றும் ''அரபு நாட்டு எழுச்சி'' ஆகிய இருபெரும் போராட்டங்களும் ஒரு தெளிவான இலக்குகளை கொண்ட அமைப்பின் கீழ் திரண்ட போராட்டங்கள் அல்ல என்று தான் அந்த போராட்டங்களின் வெற்றிகளை பொறுத்துக்கொள்ள முடியாத உலகம் முழுதுமுள்ள வலதுசாரியினர் விமர்சனம் செய்தனர். ஆனால் கிரீஸ் நாட்டு மக்களின் இந்த தீர்ப்பு அப்படிப்பட்டதல்ல. இடதுசாரியினர் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் பின்னால் அணிவகுத்த மக்களின் தெளிவான மற்றும் அறிவுப்பூர்வமான தீர்ப்பு. உலகமயத்திற்கு எதிராக திரண்ட கிரீஸ் நாட்டு மக்களின் எழுச்சிக்கு கிடைத்த வெற்றி. உலக அளவில் இது ஒரு நல்ல அறிகுறியாக தெரிகிறது. இன்று உலகத்திற்கே கிரீஸ் மக்கள் வழிகாட்டுகிறார்கள். அவர்கள் பின்னால் உலக மக்கள் திரளவேண்டும். 

வெள்ளி, 3 ஜூலை, 2015

ஹேமமாலினி கார் விபத்தில் மரணமடைந்த குழந்தை...!


              முன்னாள் இந்தி திரைப்பட நடிகையும், மத்தியில் ஆளும் பாரதீய ஜனதாக்கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினருமான ஹேமமாலினி சென்ற கார் நேற்றிரவு இராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர் செல்லும் வழியில் தவுசா என்ற இடத்தில் அதிக வேகமாக சென்றதால், கட்டுப்பாடு இழந்து எதிரில் வந்த காருடன் மோதியதில் அம்மையாருக்கு முகத்தில் ''பலத்த'' அடிப்பட்டு, நெற்றியில் ''பலத்த'' காயமும் ஏற்பட்டு உடனடியாக அருகிலிருந்த தனியார் மருத்தவமனையில் சேர்க்கப்பட்டார். அனால் அவர் உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லை. உடனே அம்மாநில சுகாதார அமைச்சர் மருத்துவமனைக்கு ஓடிப்போய் பார்க்கிறான். மாநில முதலமைச்சர் வசுந்தரா ராஜே மருத்துவமனைக்கே நேரில் போய் காயமடைந்த அம்மையாரை பார்த்து மக்கள் பணி ஆற்றினார். 
               ஒரு நடிகை தடுக்கி விழுந்தாலும் மிகப்பெரிய செய்தியாக ஆக்கிவிடும் இந்த நாட்டில், ஹேமமாலினியின் கார் விபத்தும், நெற்றிக்காயமும் பரபரப்பான செய்தியாகவே அன்றிரவு தீயாய் பரவியது. ''பரபரப்பான - சூடான செய்திகளே''    இல்லாமல் காய்ந்து போய்கிடந்த நம்ப பத்திரிக்கைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் மிகப்பெரிய விருந்தாக இந்த நடிகையின் செய்தி கிடைத்துவிட,  ஒரே பரபரப்பை உண்டாக்கி மின்னல் வேகச் செய்தியாக மாறிவிட்டது. ஆனால் எல்லா பத்திரிக்கைகளும், ஊடங்களும் வரம்பு மீறி காரை ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தினால் உண்டான நடிகையின் நெற்றிக்காயங்களுக்கு கவலைப்பட்டார்களே தவிர, அந்த நடிகையின் கார் எதிரில் வந்த காரில் வேகமாக மோதியதால்,  அந்த காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த  அனைவரும் பலத்த காயம் அடைந்ததோடல்லாமல், அவர்களின் நான்கு வயதே ஆன குழந்தை அந்த இடத்திலேயே மரணம் அடைந்து  மிகப்பெரிய கொடுமையான சம்பவம் நடந்திருக்கிறது. ஆனால் அதைப்பற்றி எந்த பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும், ஏன் அந்த குழந்தையின் மரணத்திற்கு காரணமான அந்த நடிகையும் கவலைகொள்ளவில்லை என்பது தான் உண்மை. 
           அது மட்டுமல்ல நடிகையை மருத்துவமனைக்கு ஓடோடி வந்து அக்கறையுடன் பார்த்த இராஜஸ்தான் முதலமைச்சரும்,  சுகாதார அமைச்சரும் நடிகைக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால்  இறந்து போன அந்த குழந்தையைப் பற்றியோ அல்லது பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த குடும்பத்தை பற்றியோ அவர்கள் எந்தவிதமான கவலையும் கொள்ளவில்லை என்பது தான் கொடுமையிலும் கொடுமை.  

புதன், 1 ஜூலை, 2015

இடதுசாரிக்கட்சிகளின் வளர்ச்சியை காட்டுகிறது...!

                 சென்ற சனிக்கிழமையன்று சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் ஆளுங்கட்சியினரால் திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில் தனது பதவியை காப்பாற்றிக்கொள்வதற்காக போட்டியிட்ட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தனது அனைத்து மந்திரிகளையும், எம்.எல்.ஏ-க்களையும் இறக்கிவிட்டு பல்வேறு ''சித்து விளையாட்டுகளை எல்லாம்'' செய்து சுமார் 1.5 இலட்சம் வாக்குகளை பெற்று வெற்றிப்பெற்றிருக்கிறார்.
            ஆனால்  தமிழகத்திலுள்ள அனைத்து பெரிய கட்சிகளும் அவரை எதிர்த்து போட்டியிடுவதற்கு தயங்கியநிலையில்  தேர்தலில் போட்டியிடாமல், தேர்தல் களத்திலிருந்து முற்றிலும் விலகியிருந்த போதிலும், தேர்தலில் போட்டியிடுவதென்பது ஜனநாயகக்கடமை என்றும், போட்டியிலிருந்து விலகி நிற்பது என்பது ஜனநாயகக் கடமையிலிருந்து விலகி நிற்பது போல் ஆகும். எனவே இடதுசாரிக்கட்சிகள் போட்டியிடும் என்று சொல்லி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகட்சிகள் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு எதிராக களத்தில் இறங்கியது.
          சுயேட்சைகள் பலபேர் நின்றாலும், நேரடிப்போட்டி என்பது இடதுசாரி வேட்பாளர் சி.மகேந்திரனுக்கும், ஜெயலலிதாவிற்கும் இடையே மட்டும் தான். இடதுசாரி வேட்பாளரை பொருத்தவரை தோழர்கள் பலம் மட்டும் தான். அவர்களின் மக்களுக்கான மற்றும் தேசத்திற்கான போராட்டங்கள், தியாகங்கள், நீதி, நேர்மை, மதசார்பின்மை, எளிமை, வாக்காளர்களிடம்  நேரடி சந்திப்பு, ஊழல் எதிர்ப்பு, கொள்கை, முழக்கங்கள் இவைகளெல்லாம் இடதுசாரிகளின் கூடுதல் பலம். ஆனால் ஜெயலலிதாவை பொருத்தவரை ஊழலில் சேர்த்த பணக்குவியல், பணவிநியோகம், அதிகாரம், பதவி, கள்ள ஓட்டு, ஓட்டுக்கு விலை, மதுபாட்டில், பிரியாணி இவைகள் தான் ஜெயலலிதாவிற்கு தேர்தல் வேலைகளை செய்தன. இவைகளை முடுக்கிவிட்டு செய்து முடிப்பதற்கு, அனைத்து அமைச்சர்களும், அதிமுக மற்றும் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள், உயரதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் என இவர்களெல்லாம் தேர்தல் களத்தில் இறங்கி அயராது இயங்கிக்கொண்டிருந்தர்கள்.
           அதன் விளைவாகத்தான் ஒரு வாக்குச்சாவடியில் ''ஓவராக'' வேலை செய்து, மொத்த வாக்காளர்களை விட அதிகமாக வாக்குகள் விழுந்து, மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. ஆக ஜெயலலிதா பெற்ற 1.51 இலட்சம் ஓட்டுகளும் நேர்மையாக பெற்றதாக அரசியல் அறிந்த யாரும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அவைகள் அத்தனையும் பணம் கொடுத்து வாங்கப்பட்ட ஓட்டுகளும் கள்ள ஓட்டுகளும்  தான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. ஊழலுக்கும் ஜனநாயகத்திற்கும் நடந்த போட்டியில் ஊழல் வென்றுவிட்டது. ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டது. அனால் இடதுசாரிக்கட்சிகளின் வேட்பாளர் பெற்ற 9710 வாக்குகளும் பணம் கொடுத்து வாங்கப்பட்ட வாக்குகள் அல்ல. அத்துனையும் நேர்மைக்கு மக்கள் தந்த நம்பிக்கை வாக்குகள். ஊழலுக்கு எதிரான வாக்குகள். அதுவும் ஜெயலலிதாவிற்கு எதிராக நேரடியாக போட்டியிட்டு இடதுசாரிகட்சிகள் சுமார் 10,000 வாக்குகளை நெருங்கியிருக்கிறார்கள் என்றால் அது அவர்களின் வளர்ச்சியையும், மக்கள் இடதுசாரிக்கட்சிகள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையுமே காட்டுகிறது.